சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்தித்தார் பிரதமர் மோடி; கூட்டணிக்கு அச்சாரமா?

சென்னை வந்த  பிரதமர் நரேந்திர மோடி, இன்று  பிற்பகல் 1.35 மணி அளவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார்.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா, முதல் முறையாக சென்னையில் இன்று நடைபெற்றது.
 முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற  கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடியை, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேராக போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்றார். மதியம் 1.35 மணி அளவில் மோடியின் கார் நேராக ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றது. 45 நிமிடத்திற்கும் மேலாக இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பின்னர் அவர் பத்திரிக்கையாளர் சோவை சந்திக்க சென்றார்.

இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றபோதிலும், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், மோடி ஜெயலலிதாவின் வீடு தேடி சென்று சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம் ஜெயலலிதாவை பொறுத்தவரை இந்த சந்திப்பு அவருக்கு அரசியல் ரீதியில் பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா?
குறிப்பாக வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பா.ஜனதா இடையே கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது. அதே சமயம தமிழக பா.ஜனதா தலைவர் தமிழசை சவுந்தரராஜன், இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல, குறிப்பாக கூட்டணி குறித்து பேசுவதற்காக அல்ல என்றும், ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காகவே மோடி போயஸ் கார்டன் இல்லம் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
புரட்டோகால் மரபை ஒதுக்கித் தள்ளிய மோடி
 மாநில முதல்வரை விட அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பிரதமர் ஒருவர், புரட்டோகால் மரபுப்படி அந்தஸ்தில் குறைந்த மாநில முதல்வர் ஒருவரை வீடு தேடி சென்று சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பாகவே பார்க்கப்படுகிறது
  
மனு கொடுத்த ஜெயலலிதா
இதனிடையே மோடியிடம் 21 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை ஜெயலலிதா அளித்தார். அதில் காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, மேகேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும் கோரிக்கைகள்  இடம்பெற்றிருந்தன.

மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்.

* முல்லை பெரியாறு அணைக்கு மத்திய தொழில் படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

* தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தேசிய நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்த வேண்டும்.

* நெய்யாற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* 4000 மெ.வா உற்பத்தி திறன் கொண்ட செய்யூர் அல்ட்ரா மெகா மின் திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளி கோர வேண்டும்.

* சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவில் தமிழக அரசு ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

* தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மாதம் ஒன்றுக்கு 65,140 கிலோ லிட்டராக உயர்த்த வேண்டும்.

* தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இன்னமும் இடம் தேர்வு செய்யும் இறுதிப் பணிகள் இன்னமும் நடைபெறவில்லை. அதை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது சட்ட பிரிவை அந்நாடு விரைந்து அமல்படுத்த மத்திய அரசு தலையிட்டு இலங்கையை வலியுறுத்த வேண்டும்.

* இலங்கையில் இறுதி கட்ட போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடையை நீக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

* சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

 உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.
மதிய விருந்து 

சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு, முதல்வர் இல்லத்தில் மதிய  விருந்து அளிக்கப்பட்டது.

சோவுடன் சந்திப்பு

முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சோவை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் மோடி.
இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து காரில் விமான நிலையம் சென்ற மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.


No comments:

Post a Comment