சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!

காரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை.
குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஈ.சி.ஆரில் டிரிப் அடித்துக்கொண்டிருக்கலாம். 

நெருக்கடியான சென்னை சாலைகளில் பயணம் செய்து அலுப்பானவர்கள், விசாலமான, காற்றோட்டமான, இயற்கை எழில் கொஞ்சும் ஈ.சி.ஆரை பார்த்தால் குழந்தையை போல துள்ளி குதித்துக்கொண்டு கார் ஓட்ட ஓடிவருவார்கள். 


திருவான்மியூரில் ஆரம்பித்து முட்டுக்காடு படகு குழாம், மாமல்லபுரம், புலிக்குகை, கடப்பாக்கம் கோட்டை, மரக்காணம் உப்பளம் என வழியில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கலாச்சார நகரமான புதுவையில் இரவில் தங்கிவிட்டு, மறுநாள் மீண்டும் சென்னை நோக்கி செல்வது. இதுதான் ஈ.சி.ஆரில் டிரிப் அடிக்கும் பொரும்பாலான இளைஞர்களின் உற்சாக திட்டமாக உள்ளது.  ரோட்டுக்கடை முதல் அரேபியன் ரெஸ்டாரண்ட் வரை ஈ.சி.ஆரில் இடம்பெறாத உணவகங்களே இல்லை. இவ்வளவு ரம்மியமான கிழக்கு கடற்கரை சாலைக்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அது, ‘‘கிழக்கு கலவர சாலை’’. 

இருவழி சாலையான ஈ.சி.ஆரில் வாரவிடுமுறை நாட்களில் மட்டும்  சுமார் 15,000 வாகனங்கள் கடப்பதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். அதே சமயம் வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்காமல் இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள், அங்கு சாலை விபத்துகளில் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

சாலை விபத்து என்பது தாங்கிக்கொள்ள முடியாத சோகம், இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு. ஆனால் இன்னொரு சாரருக்கு ஈ.சி.ஆர் சாலையில் நடக்கும் விபத்து, 'வியாபாரம்’.
வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் விபத்து நடக்காதா என்று ஏங்கி காத்திருக்கிறது அந்த கழுகு கூட்டம். விபத்தில் சிக்குபவர்கள் இந்த கழுகுக்கூட்டங்களிடமும் சிக்கி சின்னாபின்னமாவதுதான் கொடுமையின் உச்சம். 

ஈ.சி.ஆர் சாலையில் சில சமூக விரோத கும்பல் இரண்டு அணிகளாக பிரிந்து,  விபத்து நடக்கும் பகுதிகளில் கண்கொத்தி பாம்பு போல காத்திருப்பார்கள். விபத்து ஏதேனும் நடந்தால் காவல்துறைக்கு தகவல் செல்வதற்கு முன் இந்த கும்பலின் காதுகளுக்கு இன்ஃபார்மர்கள் மூலம் விஷயம் போய்விடும்.

சம்பவ இடத்திற்கு தனிதனியாக செல்லும் இந்த கும்பலில் ஒரு பிரிவினர், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாகவும், மற்றொரு பிரிவினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் பஞ்சாயத்து பேசுவார்கள். விபத்தை ஏற்படுத்தியவர்கள் 'நாங்கள் காவல்துறை மூலம் பேசிக்கொள்கிறோம்' என்றாலோ அல்லது அவர்கள் பெரிய இடம் என்று தெரியவந்தாலோ இந்த கும்பல் பின்வாங்கிவிடும்.
அதேசமயம் விபத்துக்கு காரணமானவர்கள் தவறான உறவுமுறையினர் அல்லது பெண்தோழிகளுடன் வரும் கல்லுாரி மற்றும்  ஐ.டி  ஊழியர்கள் போன்றவர்களாக இருந்தால், அவர்கள் இந்த விவகாரம் காவல்துறைக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். 

விஷயம் வெளியே தெரிந்தால் தங்கள் மானம் போய்விடும் என்பதால், அவர்கள் பெரும்பாலும் பேசும்  தொகையை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே விரும்புவார்கள். இத்தகையவர்கள்தான் இந்த கும்பலுக்கு லட்டு போன்றவர்கள். ‘‘போலீசுக்கு போனா உங்க பணமும் நேரமும்தான் வீணாகும். இங்கயே பேசி முடிச்சிட்டு போங்க. நாங்கதான் உங்க பக்கம் இருக்கோம்ல’’ என்று இரண்டு தரப்பையும் மூளைச் சலவை செய்வார்கள்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இந்த விபத்தை பூதாகரப்படுத்துவது போன்று பேசி, அவர்களின் பயத்திற்கு தக்கபடி வசூலித்து, வசூலித்த தொகையில் சொற்ப தொகையை மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு பறந்துவிடுவர். பாதிக்கப்பட்டவர் காவல்நிலையங்களுக்கு சென்றாலும், அவர்களின் புகார் அங்கு எடுபடாது. காரணம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு 'உரிய மரியாதை' செய்யப்பட்டுவிடுவதே.

இதற்கு ஒத்துவராதவர்களை மிரட்டுவதும், அடிப்பதும் கூட சகஜமாக நடக்கும். விவரம் அறியாத பல இளைஞர்கள் காவல்துறைக்கு போனா வம்பு என்று எண்ணிக்கொண்டு இந்த கும்பலிடம் பணத்தை இழக்கிறார்கள். ஈ.சி.ஆரில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளை இந்த கும்பல்தான் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கிறார்கள். உயிரிழப்பு போன்ற சம்பவங்களில் இந்த கும்பல் தலையிடுவதில்லை.

பொன், பொருளை பறிக்க ஒரு கும்பல் என்றால், பெண்ணை பறிக்கவும் ஒரு கும்பல் மரக்காணம் பகுதியில் உள்ளது. பெண்களை அபகரிக்க காத்திருக்கும் இந்த கும்பலின் முதல் குறி வெளியூர் வாகனங்கள்தான். வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களில் காதலர்களோ, கணவன் மனைவியோ தனியாக சென்றால் பின் தொடர்வது இந்த கும்பலின் வாடிக்கை. மரக்காணம் பகுதியை தாண்டி கடலும், உப்பளமும் சூழ்ந்த தனிமை பகுதியில் ஓய்வு எடுக்க வெளியூர் ஜோடிகள் காரை விட்டு இறங்கினால், அந்த கும்பலிடம் சிக்குவது உறுதி.
அப்படி இறங்கும் ஜோடிகளிடம் இருந்து பணம், பொருளை பறிப்பது ஒரு பக்கம் என்றால், சமயங்களில் குடும்ப பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கடந்த மாதம் அப்படி சிக்கிய ஜோடி ஒன்றை,  இந்த கும்பல் மிரட்டி, கணவனை மட்டும் விரட்டிவிட்டிருக்கிறார்கள். பயந்து ஓடிய கணவன் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

ஆனால் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு பின் ஒதுக்குப்புறமான உப்பளம் ஒன்றின் அருகே, அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் அந்த பெண்.
இப்படியும் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. பணம், பொருட்களை இழக்கும் வெளியூர்வாசிகள் தப்பித்தால் போதும் என்று எந்த புகாரும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்கள் மரக்காணம் பகுதியில் அடிக்கடி நடந்தாலும் வெளிய தெரிவதே இல்லை. இந்த சம்பவங்கள் வெளிவராமல் இருப்பதற்கு காவல்துறையும் ஒரு காரணம். 

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சென்றால், போலீஸார் கேட்கும் வசவு வார்த்தைகள் காது கூச வைக்கும் அளவு இருக்கும். போலீஸாரின் இந்த அலட்சியமே போக்குதான் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருவதற்கு காரணம்.

கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பான சாலையாக மாற வேண்டும்....!



No comments:

Post a Comment