சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

வருவாயை பெருக்கினால் மதுவிலக்கு சாத்தியமே!

மூக நலக் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி அணைந்துபோன காந்தியவாதி ஒருவரின் உயிர்த்தீ, இன்று பெருநெருப்பாக மீள்தெறிப்புக் கண்டு, தமிழ்நாடு முழுவதையும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது! 

தமிழினப் படுகொலை குறித்த விழிப்புணர்வுக்கு முத்துக்குமார், ராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கச் செங்கொடி, நமது மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட சங்கரலிங்கனார் என இப்படி நம் சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும். இவ்வரிசையில் மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி  தன் உயிரையே விட்டிருக்கிறார் காந்தியவாதி சசிபெருமாள்.

இன்றில்லை, நேற்றில்லை, 46 ஆண்டுகளாக, அதாவது ஏறத்தாழ அரை நூற்றாண்டாக மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்திருக்கிறார் சசிபெருமாள். இறுதியில், அந்தக் கோரிக்கைக்காகத் தன் உயிரையும் தந்து விட்டார். ஆனாலும், இன்று வரை, இதை நான் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை அவர் கோரிக்கை பற்றிப் “பரிசீலிக்கப்படும்” எனவோ, “விரைவில் முடிவெடுக்கப்படும்” எனவோ நாகரிகத்துக்காகக் கூட ஓர் அறிக்கை வெளியிட முன்வரவில்லை தமிழ்நாடு அரசு. 

தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனும் ஒரே காரணத்துக்காக, சமூகத்துக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத எத்தனையோ பேர்களின் உயிரிழப்புக் குறித்து அன்றாடம் இரங்கல் அறிக்கை வெளியிடும் முதல்வருக்கு, இந்தச் சமூகத்துக்காகப் போராடிப் போராடிக் கடைசியில் தன் உயிரையே விட்டவருக்கு இரங்கல் தெரிவிக்க மனம் இல்லை. 

ஆனால், அரசு எனும் இரும்பு இயந்திரத்தை அசைக்க முடியாத சசிபெருமாள் அவர்களின் தியாகம், மக்கள் மனத்தை உருக்கி விட்டது. இதோ, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும் மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார்கள். ஆக, சசிபெருமாள் அவர்களின் கனவு நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என நாம் நம்பலாம்.

ஆனாலும், தமிழ்நாடே திரண்டு போராடுகிறது என்பதற்காக உடனடியாக எல்லா மதுக்கடைகளையும் இழுத்துப் பூட்டி விட முடியுமா? அது முடியும் என்றாலும் அப்படிச் செய்வது சரியா? அதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும்? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? இவற்றை யெல்லாம் பற்றி நடுநிலையான பார்வையில் சிறிய ஓர் அலசல் இதோ...

மதுவிலக்குக்கு எதிரான தடைகளும் அவற்றைத் தகர்க்கும் வழிகளும் மதுவிலக்குக்கு எதிராகப் பேசுபவர் கள் அதற்கு முன்வைக்கும் காரணங்கள் இரண்டு. அவற்றில் முதலாவது, கள்ளச்சாராயச் சாவுகள் பெருகும் என்பது. உண்மைதான்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில், ‘கள்ளச்சாராயம் குடித்து இத்தனை பேர் பலி’, ‘கள்ளச் சாராயம் அருந்தி யதால் இத்தனை பேருக்குப் பார்வை பறி போனது’ என்பன போன்ற செய்திகள் தமிழ்நாட்டில் அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெற்று வந்தன. கள்ளச் சாராயத்தை ஒழிக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் முடியாததால்தான் அதற்கு நிலையான ஒரு தீர்வு காணும் நோக்கில் (!?) அரசே மலிவு விலையில் தரமான மதுவை விற்க முடிவெடுத்து டாஸ்மாக்  மூலம் அதைச் செயல்படுத்தியது. 

இந்த முறையற்ற முடிவு இன்று ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டது. அதேசமயம் கள்ளச் சாராயம் என்பதே முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதையும்  ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!

அதற்காகக் கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசே நல்ல சாராயம் விற்பதை ஒருபொழுதும் ஏற்க முடியாது. கள்ளச் சாராயம் காய்ச்சுவது சட்டப்படி குற்றம். குற்றங்களை ஒடுக்கி மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அரசு என்கிற ஒன்றை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால், குற்றத்தை ஒடுக்க வகையில்லாத அரசு தானே அந்தக் குற்றத்தை வீரியம் குறைந்த அளவில் செயல்படுத்துகிறேன் என இறங்குவது அருவெறுப்பானது!

குண்டர் தடைச் சட்டங்களை அரசு மீண்டும் மீண்டும் எவ்வளவோ வலுப்படுத்திக் கொண்டுதான் வருகிறது. ஆனாலும், இதுவரை கூலிப்படைத் தாக்குதல்களையோ, போக்கிரிகளின் அடாவடித்தனங்களையோ, தாதாத்தனங்களையோ கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியவில்லை. அதற்காக அரசே குண்டர் படை ஒன்றை உருவாக்கி அரசியலாளர்களுக்கும் பணக்காரர்களுக்கும் குறைந்த வாடகைக்கு விட்டுக் குற்றங்களை அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வந்து முறைப்படுத்தலாம் என இறங்கினால் நன்றாக இருக்குமா?
முழு மதுவிலக்கை அமல்படுத்தும் முறை
வெறுமே அரசு மதுக்கடைகளுக்கு மூடுவிழா நடத்துவதோ, மது அருந்துவதற்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதோ, “இன்று முதல் மது விற்பனை தடை செய்யப்படுகிறது” எனக் கொட்டை எழுத்தில் அறிவித்து விடுவதோ முழுமையான மதுவிலக்கு ஆகி விடாது.
முதலில் “மது, புகையிலைப் பொருட்கள் முதலான எந்தப் போதைப்பொருளும் இல்லாத மாநிலத்தை உருவாக்குவதே குறிக்கோள்! அதுவே இந்த அரசின் போதைப்பொருள் கொள்கை!” எனத் திட்டவட்டமாக அறிவித்து, அதுவே தமிழ்நாடு அரசின் நிலையான கொள்கை முடிவாக நடுவணரசின் ஒன்பதாம் எண் பட்டியலில் சேர்க்க வேண்டும். 

அடுத்ததாக, மதுப்பழக்கத்திலிருந்து மக்களைத் திருத்தும் முன்,  அரசு தான் திருந்தும் முகமாக, இலக்கு வைத்து மது விற்பனை செய்யும் வழக்கத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் கைவிட வேண்டும்!

அடுத்து, மது இல்லாத மாநிலத்தை உருவாக்குதல் எனும் நோக்கத்தைச் செயல்படுத்துவதன் முதற்கட்டமாக,  வழிபாட்டு இடங்கள், கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டுமல்லாமல் பொது இடங்களில் இயங்கும் எல்லா மதுக்கடைகளையுமே ஒதுக்குப்புறமான இடங்களுக்கு மாற்ற வேண்டும். 
மாநிலத்தில் மொத்தம் எத்தனை குடிகாரர்கள் இருக்கிறார்கள் என்பதை முதலில் மதுக் கடைகள் மூலமாகவே கணக்கெடுத்து, அனைவருக்கும் இலவசப் புகைப்பட அடையாள அட்டை ஒன்றைப் பதிவு எண்ணுடன் வழங்கி, அது இல்லாமல் யாருக்கும் மது விற்கப்படாது எனச் சட்டம் கொண்டு வர வேண்டும். 

இதன் மூலம் வயதில் குறைந்தவர்களுக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கலாம்.

இவை போக, கல்லூரி மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பறக்கும் படை ஒன்றை அரசு அமைத்துப் பொது இடங்களில் அமைந்துள்ள மதுக் கடைகள், வயது குறைந்தவர்களுக்கு மது விற்கும் கடைகள் எனச் சட்டத்துக்குப் புறம்பான வகைகளில் செயல்படும் அரசு, தனியார் மதுக் கடைகளைப் பூட்டி அவற்றின் உரிமத்தைப் பறிமுதல் செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். 

திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும்பொழுது ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என அறிவிப்பு இடம்பெறுவது போல, குடிப் பழக்கத்தைத் தூண்டும் வகையிலான உரையாடல்கள் இடம்பெற்றால் அவற்றை நீக்கவும் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்!
இவை அனைத்துக்கும் மேலாக, மது எப்படிப்பட்ட தீங்குகளை அருந்துபவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பல வகைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குடிப் பழக்கம் குறித்து விழிப்புணர்வுக் குறும்படங்கள் எடுக்க மாணவர்களை ஊக்குவிக்கலாம்.

புகழ் பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தலைவர்கள் ஆகியோரைக் குடியின் கொடுமை பற்றிப் பேச வைத்துப் படமாக்கித் தொலைக்காட்சிகளின் விளம்பர இடைவேளைகளிலும், திரையரங்குகளில் இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கும்பொழுதும் ஒளிபரப்பலாம்.

திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன்னர் புகையிலைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் படம் திரையிடுவதோடு கூட இனி குடி பற்றியும் விழிப்புணர்வுப் படங்களைத் திரையிடக் கட்டாயச் சட்டம் கொண்டு வரலாம்.

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரித் திரண்டு எழுந்திருக்கும் மாணவ ஆற்றலை அதற்காகவே பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் மாணவர்களை வைத்துக் குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை வீடுதோறும் கொண்டு சேர்க்க ஆவன செய்யலாம்.

இவை தவிர, குடிப்பழக்கத்திலிருந்து மக்களை மீட்க இலவச மருத்துவ முகாம்களை மாநிலம் முழுவதும் அரசு அவ்வப்பொழுது நடத்த வேண்டும். ஆங்கிலம், சித்தம், ஆயுர்வேதம், ஓமியோபதி என எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடி மீட்பு மருத்துவச் சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும்

மேலும், குடிகாரர்களைத் திருத்தும் தனிநபர் அல்லது அமைப்புகளுக்கு சசிபெருமாள் அவர்களின் பெயரில் விருது வழங்கிச் சிறப்பிக்கவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்!

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மதுக்கான சந்தையை ஒழித்து விட்டு அதன் பிறகு அரசு மதுக் கடைகளையும் ஆலைகளையும் மூட வேண்டும்! தனியார் மது உற்பத்தி செய்ய – விற்க, மாநிலத்துக்கு வெளியிலிருந்து மதுவைக் கொண்டு வர ஆகியவற்றுக்கும் நிரந்தரத் தடை போட வேண்டும்.

இந்தக் கடைசி மூன்று பரிந்துரைகள் எப்பொழுது நிறைவேற்றப்படுகின்றனவோ அப்பொழுதுதான் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதாகப் பொருள்படும். இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக அரசு மது விற்பனையையே நம்பியிருக்காமல் மின்சாரத்துறையை மீட்டெடுப்பதன் மூலமும், வேளாண்மைக்குப் புத்துயிர் கொடுப்பதன் மூலமும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதை விட மாநில உற்பத்தியை ஊக்குவிப்பது, தற்சார்புப் பொருளியல் (self economic) போன்ற சரியான பொருளியல் (economic) கொள்கைகளைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலமும் நிலையான வருவாயைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் மது இல்லாத, எந்தப் போதைப்பொருளும் இல்லாத தமிழ்நாடு என்கிற சசிபெருமாள் அவர்களின் கனவும், போராடும் மாணவர்களின் கோரிக்கையும் நிறைவேறும். உண்மையான அக்கறையோடு இவற்றைச் செயல்படுத்தினால், நான் முன்பே குறிப்பிட்டது போல அந்தக் கனவு பலிக்கும் நாள் தொலைவில் இல்லை.No comments:

Post a Comment