சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Aug 2015

சசிபெருமாளின் மரணமாவது தமிழக அரசின் மனச்சாட்சியை உலுக்குமா?

2013 ஆம் ஆண்டு ஜனவரி 30- ஆம் தேதி, காந்தி நினைவு நாள். மெரினா கடற்கரையில் காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழக அமைச்சர்கள், பள்ளி மாணவர்​கள், பொதுமக்கள், சமூக சேவகர்கள் என்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்திச் சென்றனர். 

அதேநேரத்தில், நவ இந்திய நிர்மாணிகள் இயக்கத்தின் மாநில அமைப்​பாளரான 57 வயதான சசிபெருமாள், தேசியக் கொடியை உயர்த்தியபடி காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காந்தி காலடியில் அமர்ந்தார். ''தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்து'' என்று கோஷம் எழுப்பி​னார். தமிழக லட்சியக் குடும்பம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவருக்கு ஆதரவாக அங்கேயே அமர்ந்தனர். 'போலீஸ் டி.ஜி.பி. ஆபீஸ் எதிரிலேயே உண்ணா​விரதமா?' என்று அதிர்ச்சி அடைந்த போலீ​ஸார், உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கூறினர். சசிபெருமாள் மறுத்துவிட்டதால், பொது​மக்களுக்கு இடையூறு செய்கிறார் என்று, வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது​ செய்தனர்.


பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட சசிபெரு​மாள், அங்கேயும் யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்து மதுவுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். சிறைத் துறை அதிகாரிகள், சிறை மருத்துவர்கள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை எடுபடவே இல்லை. நாளாக, நாளாக அவரது உடல்நிலை மோசமானது. இதனால், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர். 18 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கைதிகள் வார்டில் கொண்டு வந்து அவரைச் சேர்த்தனர். அங்கு அவருக்கு கட்டாய​மாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஆனாலும், குடிநீரைத் தவிர வேறு எதையும் எடுத்துக் கொள்ள மறுத்து ​விட்டார்.

இந்த நிலையில், பிப்ரவரி 23 ஆம்  தேதி மதியம் ராயப்​பேட்டை மருத்துவமனையில் இருந்து அவரை விடுதலை செய்தனர். மறுநாள், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதாலோ என்னவோ, திடீரென விடுவிக்கப்​பட்டார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்வேன் என்று கூறிய சசிபெருமாள், மீண்டும் மெரினா கடற்கரை காந்தி சிலைக்குச் சென்று உண்ணாவிரத்தைத் தொடர்ந்தார். சசிபெருமாளுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்த, அரசின் உறுதிமொழி கிடைத்தால்தான் உண்ணா​​வி​ரதத்தைக் கைவிடுவேன் என்று உறுதியாகக் கூறினார்.

இதையடுத்து, '108’ ஆம்புலன்ஸில் அவரை ஏற்றிய போலீஸார், ராஜீவ்காந்தி அரசுப் பொதுமருத்துவ​மனையில் சேர்த்தனர். அவரது மகன் விவேக், காந்திய​வாதி காந்திமதியம்மாள் மற்றும் லட்சியக் குடும்பம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து சசிபெருமாளைக் கவனித்து வந்தனர். இந்தநிலையில், பிப்ரவரி 25 ஆம் தேதி, 'மருத்துவ  சிகிச்சை வேண்டாம்’ என்று கூறிவிட்டு சசிபெருமாள் டிஸ்சார்ஜ் ஆனார். மயிலாப்பூரில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணி வீட்டுக்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்​தார்.

மார்ச் 3 ஆம் தேதி அன்று, 'சசிபெருமாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து பலவீனமாகக் காணப்படுகிறது’ என, அவரைப் பரிசோதித்த மருத்துவர் கூறினார். 12 முறை ரத்த வாந்தி எடுத்து, ஓரிரண்டு முறை மயக்கம் அடைந்து தெளிந்த பின்னும், தனது போராட்டத்தை விடாமல் தொடர்ந்தார் சசிபெருமாள். உணவு உட்கொள்ளாததால், கிட்னியில் உப்பு அதிகமாகி பாதிக்கப்பட்டது. தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தவர், பின்னர் தண்ணீரையும் குடிக்க மறுத்தார். 

சசிபெருமாளின் போராட்டத்துக்குப் பல்வேறு திசைகளில் இருந்தும் ஆதரவு பெருகுவதை உணர்ந்த அரசாங்கம், தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற போலீஸார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவ​மனையில் சேர்த்து, குளுக்கோஸ் ஏற்றினர். மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, 4 ஆம் தேதி மாலை உண்ணாவிரதத்தை முடித்தார் சசிபெருமாள்.
மதுவுக்கு எதிரான சசிபெருமாளின் போராட்டத்துக்கு இது ஒரு சாம்பிள்தான். மது குடிப்போரின் கால்களில் விழுந்து பிரசாரம், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மதுவுக்கு எதிரான நடைபயணம்... என்று சசிபெருமாளின் போராட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி மதுவுக்கு எதிரான போராட்டத்திலேயே தனது இறுதி காலத்தைக் கழித்த சசிபெருமாள், இப்போது மார்த்தாண்டத்தில் போராட்ட களத்திலேயே இறந்துபோனது சோகம்தான். 

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசு இயந்திரம் செவிசாய்க்காத நிலையில், கடையை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, கடையை அகற்ற உத்தரவும் பெற்றார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் டாஸ்மாக் கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் தேதிக்குகள் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் தேதி வரை டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் 31ஆம் தேதி போராட்டத்தில் குவித்தனர். அப்போது, மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

சேலம் மாவட்​டம் இளம்பிள்ளை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சசிபெருமாள். அவருடைய தந்தை மூலம் சிறு வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்​பட்டார். விவசாயமும் சித்த மருத்துவமும் செய்து வந்தார். ''அப்பாவிடம் சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகள் குடிகாரர்களாகவே இருந்தனர். அவர்களைத் திருத்த அப்பா ரொம்பவும் கஷ்டப்பட்டார். சம்பாதித்த பணத்தை எல்லாம், மது குடிப்ப​வர்களைத் திருத்தவே செலவு செய்தார். ஆனாலும், அவருடைய முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகள் பெருகிக்கொண்டே​ போக, பலரும் சம்பாதித்த பணத்தை எல்லாம் குடும்பத்துக்குத் தராமல் குடிக்கவே செலவு செய்தனர். மதுவால் ஏராளமானோர் பாதிக்​கப்படுவதை, அப்பாவால் தாங்கிக்கொள்ள முடிய​வில்லை. இவர்கள் எல்லாம் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால், பூரண மதுவிலக்குத் தேவை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார்'' என்கிறார் சசிபெருமாளின் மகள் விவேக். 

மதுக்கடைகளை உடனே மூடச்சொல்லி சசிபெருமாள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாலும், முதலில், தீவிர மதுக்கட்டுப்பாட்டையாவது கொண்டுவாருங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தார். ''மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். விற்கும் நேரம் குறைக்கப்​பட வேண்டும். புதிய இடங்களில் கடைகள் திறக்கப்படக் கூடாது. பார்களை மூட வேண்டும். பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்களின் அருகில் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும். ஐந்தாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரையிலான பாடப் புத்தகங்களில் மதுவின் தீமைகளைப் பாடமாக வைக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது. குடிநோயில் இருந்து மீண்டுவர விரும்புவர்களை மீட்டெடுக்க மாவட்டம்​தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்க வேண்டும்'' - இப்படி சில கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்.
தனது கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் எழுதி இருந்தார். ''மதுக்கடைகளை முற்றிலுமாக ஒரே மூச்சில் மூடிவிட முடியாது என்பது யதார்த்த உண்மை. எப்படி எய்ட்ஸை விரட்ட போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டதோ... எவ்வாறு போலியோவும், தொழுநோயும், அம்மையும் ஒழிக்கப்பட்டதோ... அவ்வாறு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்​படுத்த வேண்டும்'' -இது கடிதத்தில் இடம்பெற்று இருந்த வாசகங்கள். இதனையும் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. 

“எல்லா அரசு அலுவலகங்களிலும் அம்மாவின் படம் உள்ளது. டாஸ்மாக்கும் அரசுத் துறைதானே. டாஸ்மாக் கடைகளில் அம்மா படம் ஏன் இல்லை?” என்று காட்டமாக கேட்டு வந்த சசிபெருமாள், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடவும் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது. 

இப்படி மதுவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் இறங்கிய சசிபெருமாள், மார்த்தாண்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போதே மறைந்ததாவது அரசாங்கத்தின் மனச்சாட்சியை உலுக்குமா? 



No comments:

Post a Comment