சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Oct 2015

ஏர்டெல் விளம்பரத்துக்கு தடை! நிறுவனங்கள் என்ன செய்யக்கூடாது?

சமீபத்தில் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்ட விளம்பரங்களில் ஒன்று, ஏர்டெல் நிறுவனத்தின் 4G விளம்பரம். ஏர்டெல் 4G-யைவிட வேகமான நெட்வொர்க் உங்களிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் மொபைல் பில்லை ஏர்டெல் ஏற்கும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். 

இந்த விளம்பரம் தவறாக அர்த்தம் கற்பிப்பதாக உள்ளதாக வந்த புகாரின் பேரில் இந்திய விளம்பர தர ஆணையம் (ASCI) இந்த விளம்பரத்தை உடனடியாக நிறுத்தும்படி ஏர்டெல் நிறுவனத்திடம் கூறியது.இதனை அடுத்து ஏர்டெல் நிறுவனம் அந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றிருக்கிறது.
 
 
ஏர்டெல் விளம்பரம் மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 82 விளம்பரங்கள் விதிமுறைக்கு மாறாக இருந்துள்ளதாக சொல்லி திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் மிகவும் பிரபலமான சில விளம்பரங்கள் இதோ...
 
ஃப்ளிப்கார்ட் நிறுவனம்:  

ஆஃபர் என்று கூறி குறைவான விலையுள்ள பொருளை அதிக விலை ஆஃபரில் குறைவு என அறிமுகம் செய்தது. ஆனால், உண்மையிலுமே அந்த பொருளின் விலையும், ஆஃபர் விலையும் ஒன்றுதான் என தெரியவர, ஃப்ளிப்கார்ட் அந்த விளம்பரத்தை திரும்ப பெற்றது.
 
லாரியல்:
இந்த நிறுவனத்தின் கார்னியர் நீம்-துளசி ஃபேஷ்வாஷ் 99.9% முகப்பருக்களை நீக்குகிறது என்ற விளம்பரமும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அந்த விளம்பரமும் திரும்பப் பெறப்பட்டது. 

உபேர்:
உபேர் நிறுவனம், 'நீங்கள் குடித்து விட்டு வாருங்கள். நாங்கள் இருக்கிறோம், வாகனம் ஓட்ட' என்ற வாசகத்துடன் செய்த விளம்பரமும் மக்களை தவறாக வழிநடத்துகிறது என்ற அடிப்படையில் நிறுத்தப்பட்டது. இதேபோல் 82 நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 
 
ஒரு நிறுவனம் தயாரிக்கும் விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என பிராண்ட்.காம் நிறுவனத்தின் சிஇஓ ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம்.
 
''விளம்பரங்கள் தயாரிக்கும்போது முக்கியமாக ஐந்து விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவைதான் விளம்பரங்கள் சர்ச்சையின்றியும், மக்களை சென்றடையவும் வசதியாக இருக்கும். 

 
1. உண்மைத்தன்மை!
 
ஒரு விளம்பரத்தின் உண்மைத் தன்மையை எக்காரணத்துக்காகவும் இழக்கக்கூடாது. தயாரிப்பு அல்லது சேவை குறித்து உள்ளபடி என்ன சொல்லி விற்க வேண்டுமோ, அதை சொல்லி விற்றால்தான் நீங்கள் தயாரிக்கும் பொருளின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். ஒருவேளை பொய்யான தகவலை கூறி விற்று, அதன்படி அந்தப் பொருள் இல்லை என்றால், அதனால் வாடிக்கையாளரிடம் அந்த பொருள் பற்றி மிக மிக தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும். 
 
2. நிருபியுங்கள்!
 
ஒரு பொருள் பற்றிய புள்ளிவிவரங்களை தெரியப்படுத்தும்முன் அவை என்ன என்பதை சரியாக தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, உங்கள் தயாரிப்பு மற்ற தயாரிப்புகளை விட பத்து மடங்கு அதிக திறன் கொண்டது என்றால் முதலில் அதனை நிருபியுங்கள். உங்களால் அதை நிருபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் சொல்வது பொய்யாகவே இருக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமே அடைவார்கள். 

 
3. கற்பனையும் நிஜமும்!
 
ஒரு பொருளைப் பற்றி விளம்பரம் செய்யும்போது கற்பனை, புதுமைகள் இடம்பெறவேண்டியது அவசியம்தான். ஆனால், எங்கு கற்பனையை பயன்படுத்த வேண்டும், எங்கு நிஜத்தை கூற வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப விளம்பரத்தை தயாரிக்க வேண்டும் .இதனை தவறாக புரிந்துகொண்டால் விளம்பரம் மக்கள் மனதில் தவறான புரிதலுக்கு உள்ளாகிவிடும்.
 
4. ஆராய்ச்சி தகவல்கள்!
 
ஒரு விளம்பரத்தில் ஆராய்ச்சி குறித்த தகவல்கள் அவசியம் இடம்பெற வேண்டும். உதாரணமாக, கோல்கேட் விளம்பரத்தில் இது இந்தியன் டெண்டல் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறப்பட்டிருக்கும். இன்னும் சில விளம்பரங்களில் இது ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெற்றது என்று கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற தகவல்களை விளம்பரத்தில் வைக்கும்போது அது நம்பகத்தன்மையோடு மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பிடிக்கும்.

5. பயமுறுத்தக்கூடாது!
 
ஒரு விளம்பரமானது வாடிக்கையாளரை பயமுறுத்தி பொருளை வாங்க வைப்பதாக இருக்க கூடாது. அவர்களின் எமோஷனல் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உதாரணமாக, சஹாராவின் க்யூ ஷாப் விளம்பரத்தில் சச்சின் இறுதி சடங்கு செய்வது போலவும், சேவக் ஐசியூவில் இருந்து ஒருவரை தள்ளி விடுவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு விளம்பரமானது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், அதேசமயம் கற்பனை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.
 
விளம்பரங்கள் கற்பனைதான் என்றாலும் அவற்றை எடுக்கும்போது சில விஷயங்களை கவனித்து எடுத்தால் பல கோடி செலவழித்து எடுத்த விளம்பரம் தடையில்லாமல் ஒளிப்பரப்பாகும்.

No comments:

Post a Comment