கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தப்படவில்லை என வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.. நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்பட பைனான்சியர் ரமேஷ், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட 10 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்றது. மொத்தத்தில் புலிக்குழுவினர் 25 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 35 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் புலி பட குழுவினர் வீடுகளில் இருந்து மொத்தமாக 2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
அதே போன்று சில ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. நடிகர் விஜய் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட பைனான்சியர்கள் 6 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment