ப்பதாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கு, 11 மதுபான உற்பத்தி நிறுவனங்களை தமிழக அரசு நம்பியிருக்கிறது. அந்த 11 நிறுவனங்களோ தாங்கள் உற்பத்தி செய்த மது வகைகளை விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபத்தை அள்ளுவதற்கு தமிழக அரசை நம்பியிருக்கின்றன.
2003 - 2004 காலகட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியாக இருந்த டாஸ்மாக் மதுபான விற்பனை, கடந்த 12 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. அரசுக்கு இவ்வளவு லாபம் என்றால், மதுபான ஆலைகளின் முதலாளிகள் எவ்வளவு கோடிகளைக் குவித்திருப்பார்கள். மதுபானங்களைத் தயாரித்து கோடிகளைக் குவிக்கும் சாராய முதலாளிகள் யார்?
ஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு சாராய ஆலை!
இந்தியாவில் உள்ள சாராய ஆலைகளில் பழைமையானது, யுனைடெட் ஸ்பிரிட்ஸ். இது, 1862-ல் மெக்டவல் என்பவரால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் சிகரெட், மதுபானங்களைத் தயாரித்து விற்று வந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, மெக்டவலிடம் இருந்து இதை வாங்கினார் விட்டல் மல்லையா. இவர், 1983-ம் ஆண்டு இறந்துவிட்டார். பிறகு, அதன் நிர்வாகத்தை ஏற்றவர் அவருடைய வாரிசான ‘சர்ச்சைகளின் நாயகன்’ விஜய் மல்லையாதான். இவரிடம் நிர்வாகம் வந்தபிறகு, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்தியாவில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மதுபான உற்பத்தி ஆலைகளை இந்த நிறுவனம் தொடங்கியது. கலர் கலராகக் கவர்ச்சிகரமான பாட்டில்களில் அடைக்கப்பட்ட விதவிதமான புதிய தயாரிப்புகள் வந்தன. அவை, குடிமகன்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆன்டிக்யூட்டி, மெக்டவல், ராயல் சேலஞ்ச் மற்றும் செல்வந்தர்களின் செல்லமாகத் திகழும் ‘பிளாக் டாக்’ ஸ்காட்ச் விஸ்கி போன்றவை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள். வோட்கா ரகங்களில் ரோமனோவ், பிங்க்கி, விளாடிவர், வொயிட் மிஸ்சிப் ஆகிய ரகங்களும் இதன் தயாரிப்புகள்தான். நடப்பு வருடத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.20 ஆயிரம் கோடிகள்.
பசிபிக் பிராந்தியத்துக்கே சப்ளை...
தமிழகத்தில் சாராயக் கடைகளால் புகழ்பெற்ற உடையார் குரூப்பில் வந்தவர், மாசிலாமணி நந்தகோபால். இவருக்கு அரவிந்த் நந்தகோபால், நடராஜன் நந்தகோபால் என இரு மகன்கள். நடராஜன் நந்தகோபால் என்பதன் சுருக்கம் ‘நட்டி நந்தா.’ நட்டி நந்தாவின் மனைவி ஷோபா. இவர்கள்தான் மோகன் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர். இதுதவிர, ப்ரூடன்ட் டிஸ்டில்லரீஸ் மற்றும் கலிஃபோர்னியாவில் ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நந்தா ஒயின்ஸ் ஆகியவையும் இவர்களுடைய நிறுவனங்கள்தான். நந்தா ஒயின்ஸின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் பார்த்துக்கொள்பவர், ஷோபா. பசிபிக் பிராந்தியங்களுக்கு இந்த நிறுவனத்தில் இருந்துதான் ஒயின் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிளாக் நைட் சூப்பர் ஸ்ட்ராங், டீலக்ஸ், கோல்டன் ஈகிள், பிரிமியம் ரக மதுபானங்கள் ஆகியவை இவர்களுடைய தயாரிப்புகள். தமிழக குடிமகன்களிடம் நன்கு பிரபலமான ஓல்டு மங்க் பிராந்தியும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். சமீப காலமாக, ஆளும் கட்சியோடு ஏற்பட்ட உரசல் காரணமாக இந்த நிறுவனத்துக்குச் சில சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனாலும், அது வியாபாரத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
ஆழ்வார் பாசுரங்கள் பாடும் அதிபர்...
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு விழாக்கள் எடுத்து, ஆழ்வார்களின் பாசுரங்களில் கருணாநிதியைப் புகழும் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனுக்கு எலைட் டிஸ்டில்லரீஸ், ஏ.எம்.புருவரீஸ் ஆகியவை சொந்தமானவை எனச் சொல்லப்படுகிறது. முந்தைய தி.மு.க ஆட்சியில், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. டிரிபிள் எக்ஸ் ரம், ரெட் சீல், இந்தியன் சம்மர் போன்ற பிராண்டுகள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்.
காங்கிரஸில் இருந்து தி.மு.க-வுக்கு...
கால்ஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வாசுதேவன். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜி.என்.எஸ் கம்பெனியின் கட்டுப்பாட்டில் கால்ஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனம் இருக்கிறது. மது வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்த அனுபவம் உடையது வாசுதேவனின் குடும்பம். இவர்கள் ஒரு காலத்தில், காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாக இருந்தவர்கள். பின்னர், வாசுதேவனின் கவனம் தி.மு.க பக்கம் திரும்பியது. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட ஸீட் கேட்டு விண்ணப்பம் செய்தார். அதற்கு, ராஜாத்தி அம்மாள் வழியாக முயற்சியும் செய்தார். ஆனால், ஸீட் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக கால்ஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனம் என்ற மதுபான ஆலையை நடத்தும் உரிமம் கிடைத்தது. விஜய் மல்லையாவின் யுனைடெட் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு செயல்படுகிறது. அதனால், இங்கு உற்பத்தியாகும் மதுபானங்கள் யுனைடெட் டிஸ்டில்லரீஸ் பிராண்டுகள்தான். அவை தவிர லா மார்ட்டின், பிளாக் பியர்ல், ரேடியம் ஹவுஸ் ரக மதுபானங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்.
டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானதல்ல?
கிங் டிஸ்டில்லரீஸ் நிறுவனம் தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலுவுக்கு தொடர்புடையதாகத்தான் இதுவரை சொல்லப்பட்டது. மதுபானத் தயாரிப்பு ஆலை, திருவாரூரில் மன்னார்குடி தாலுக்காவில் உள்ள கர்ணாவூர் கிராமத்தில் செயல்படுகிறது. ஆனால், இந்த நிறுவனம் தன்னுடையது இல்லை என்று டி.ஆர்.பாலு சத்தியம் செய்கிறார். டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான கிங் கெமிக்கல்ஸ் நிறுவனமும், கிங் டிஸ்டில்லரீஸ் நிறுவனமும் ஒரே அலுவலகத்தில்தான் இயங்குகின்றன. லீ சாரண்டி பிராந்தி, சைமன்ஸ் பிரைடு பிராந்தி, கோல்டன் சாய்ஸ் பிராந்தி, கோல்டன் வாட்ஸ், செயின்ட் லூயிஸ் ரோமன் கேஸில், செயின்ட் லூயிஸ் போன்றவை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்.
பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மருமகன்!
கோவையில் இருந்து செயல்படும் இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அன்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமானது. முழுப்பெயர் தரணிபதி ராஜ்குமார். அப்பா கிருஷ்ணசாமி கவுண்டர். இப்படிச் சொன்னால் தெரியாது. ஆனால், பிரபல தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மருமகன் என்று சொன்னால் கொங்கு வட்டாரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் புரியும். கிருஷ்ணசாமி கவுண்டருக்கு கடந்த முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் பொறுப்பைக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வி.எஸ்.ஓ.பி பிராந்தி, கோல்ட் கோஸ்ட் மால்ட் விஸ்கி, ஹாட்ரிக் ரம், இம்பீரியல் கோல்ட் விஸ்கி போன்றவை இவர்களுடைய தயாரிப்புகள்.
இதுபோல, எம்.பி டிஸ்டில்லரீஸ் என்ற நிறுவனம் எம்.பி.புருஷோத்தமன் என்பவருக்குச் சொந்தமானது. இவரது குடும்பம் நீண்டகாலமாக, மதுபான ஆலைகளையும் சர்க்கரை மில்களையும் நடத்தி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் பகுதியில் இந்த ஆலை செயல்படுகிறது. எல்கன்சோ ரம், ஆப்பிள் வோட்கா, ஓல்டு சீக்ரெட் ரம், வாஸ்கோ 1498 பிராந்தி போன்றவை இவர்களின் தயாரிப்பு.
சரக்கு ஸ்டாப்!
கோவையில் இருந்து செயல்படும் பண்ணாரி அம்மன் குரூப் நிறுவனங்களுக்குச் சொந்தமானது சிவா டிஸ்டில்லரிஸ் நிறுவனம். பண்ணாரி சர்க்கரை ஆலை தொடங்கி நிதிநிறுவனம், கல்லூரிகள் நடத்தும் பாலசுப்பிரமணியம் சரவணன்தான் சிவா டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார். இவர்களுக்கும் ஆளும் தரப்புக்கும் என்ன உரசலோ, தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் பெருமளவு செய்யப்படுவதில்லை. சிவாஸ் ஃபைன் பிராந்தி, மானிட்டர் டீலக்ஸ் பிராந்தி, கிளாசிக் கிராண்டி ரம் போன்றவை இவர்களுடைய தயாரிப்புகள். ஆனால், சமீபகாலமாக இவை எல்லாம் எந்த டாஸ்மாக் கடையிலும் கிடைப்பதில்லை.
No comments:
Post a Comment