சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Aug 2015

'இலக்கு 2016’ பஞ்சதந்திர வியூகம்

ன்னும் சரியாக  10 மாதங்கள். புதிய ஆட்சி பிறந்துவிடும். அதற்கான கூட்டணிக் கரு  உருவாகத் தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள், மக்கள் கையில் இருந்தாலும் அதற்கான உத்திகள் தலைவர்களின் கைகளிலேயே இருக்கின்றன. என்ன நடக்கிறது அந்தரங்கத்தில்..?
தனி மனுஷி!
நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 37 இடங்களைத் தனித்து நின்று வெற்றிபெற்ற ஜெயலலிதா, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனியாகத்தான் நிற்பார். அந்த முடிவில் அவர் உறுதியாக இதுவரை இருக்கிறார். அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வைக் கூட்டணிக்கு இணைத்துவிடுவதன் மூலமாக, அந்தக் கட்சிக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையைப் பெற்றுவிடுவதற்கு ஒரு குழு கடுமையாக வேலைபார்க்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பல காரியங்களை அந்தக் குழு செய்துவருகிறது. ஆனால், அதற்கு ஜெயலலிதா இடம் அளிக்கவில்லை.
சமீபத்தில் ஜெயலலிதாவின் இல்லம் தேடி வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் பதவியைக் குறிவைத்துச் செயல்பட்ட காலத்திலேயே ஜெயலலிதாவுடன் இணக்கம்காட்ட விரும்பாத மோடி, இன்று இறங்கிவருவதற்குக் காரணம்... இதன் மூலமாக தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை பலப்படுத்துவது மட்டும்தான். ஆனால், ஜெயலலிதா பிடிகொடுக்கவில்லை. 'தமிழ்நாடு, விரைவில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. எனவே, நிதி ஆதாரங்களை எங்களுக்கு ஏற்படுத்தித் தாருங்கள்’ என ஜெயலலிதா கேட்டார். இந்தப் பேச்சை கூட்டணிப் பக்கமாக ஜெயலலிதா திருப்பியதாகத் தெரியவில்லை. மோடியைப் பொறுத்தவரையில், இது நோக்கம் நிறைவேறாத சந்திப்புதான்.

பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு ஜெயலலிதா உடன்படாததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.
பா.ஜ.க-வை இணைத்துக்கொண்டால், சிறுபான்மையினரின் வாக்குகள் மொத்தமாக தி.மு.க-வுக்குப் போய் விடும் என ஜெயலலிதா நினைக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இடங்களை வாங்கிக்கொள்ள பா.ஜ.க தயாராக இருந்த நிலையிலும், கூட்டணி வேண்டாம் என நினைத்ததற்குக் காரணம் இதுதான்.
இரண்டாவது காரணம், பா.ஜ.க-வுடன் இன்று விஜயகாந்த் இணக்கமாக இருக்கிறார். பா.ஜ.க-வை தாம் இணைத்துக்கொண்டால் விஜயகாந்த், தி.மு.க பக்கமாகச் சாயக்கூடும். தி.மு.க - தே.மு.தி.க கூட்டு அமைவது அ.தி.மு.க- வுக்கு நல்லது அல்ல என ஜெயலலிதா நினைக்கிறார். பா.ஜ.க -தே.மு.தி.க இணைந்தால், எதிர்க்கட்சி வாக்குகள் உடையும் என நினைக்கிறார். இவைதான் அவரது தேர்தல் வியூகங்கள்.
ஒருவேளை விஜயகாந்த், காங்கிரஸ், வைகோ... என ஓர் அணியைக் கட்டுவதில் தி.மு.க வென்றால், தனது முடிவுகளை மாற்றிக்கொண்டு ஜெயலலிதாவும் கூட்டணிக்கான முயற்சிகளை எடுக்கலாம். அப்போதும் பா.ஜ.க-வைச் சேர்ப்பாரா எனத் தெரியவில்லை. த.மா.கா தயாராக இருக்கிறது. இடதுசாரி கட்சித் தலைவர்களோடு பேசலாம். இவை அனைத்தும் தி.மு.க-வின் முடிவைப் பொறுத்தே அமையும். மற்றபடி சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து நின்று வென்றேன் எனக் காட்டுவதுதான் ஜெயலலிதாவின் அதீத ஆசை!
கோபாலபுரம் அழைக்கிறது!
'வருக... வருக...’ என கோபாலபுரம் வீட்டு வாசலில் தோரணம் கட்டி ஒரு வருடம் ஆகிவிட்டது. சுக மேடைகளிலும் துக்க வீடுகளிலும் நடக்கும் சந்திப்புகள் எல்லாமே கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. 'அடுத்து தி.மு.க ஆட்சிதான்’ என கருணாநிதியும் ஸ்டாலினும் உறுதியாக நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் 1989, 91, 96, 2001, 2006, 2011 ஆகிய ஆறு தேர்தல்களிலும் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க- வுக்கும் மாறிமாறி வாக்களிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். இப்போது அ.தி.மு.க ஆளுகிறது. அடுத்து தி.மு.க- வுக்குத்தான்  வாய்ப்பு வரும் என்பது அவர்களின் லாஜிக்.
கருணாநிதி ஒரு கருத்தில் முடிவாக இருப்பவர். 'ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கக் கூடாது என முடிவெடுக்கும் மக்கள், நமக்குத்தான் வாக்களிப்பார்கள்; மற்றவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்’ என்பது அவர் சிந்தனை. எனவே, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பெறும் பலம் தி.மு.க-வுக்கு மட்டுமே இருப்பதாக அவர் நினைக்கிறார். இவை இரண்டும் பொதுவானவை என்றால், நடைமுறைக்கு அவசியமான ஒரு கூட்டணிக் கணக்கை கருணாநிதியும் ஸ்டாலினும் போட்டுவைத்துள்ளனர்.
விஜயகாந்த், காங்கிரஸ், வைகோ ஆகிய மூன்று சக்திகளையும் தி.மு.க குடையின் கீழ் ஒருங்கிணைப்பதுதான் திட்டம். தென்மாவட்ட தி.மு.க-வினர் காங்கிரஸும் ம.தி.மு.க-வும் நம்மோடு இருந்தால் நல்லது என தலைமைக்குச் சொல்லியிருக்கிறார்கள். வட மாவட்டங்களுக்கு, விஜயகாந்த் பயன்படுவார்.
'உங்களுக்கு எதிரி ஜெயலலிதா. அவரை நீங்கள் தனியாக நின்று வீழ்த்த முடியாது. தி.மு.க-வின் துணையோடுதான் செய்தாக வேண்டும்’ என விஜயகாந்துக்குத் தூண்டில் போட்டுவருகிறது தி.மு.க. இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணாநிதியைச் சந்தித்ததில் இருந்து அவர்களோடு முரண்படாமல் இருக்கும் விஜயகாந்த், மதுவிலக்குப் போராட்டத்தின்போது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் வலிந்து நன்றி சொல்லியதை மனமாற்றமாகவே பார்க்கிறது தி.மு.க.
இந்த அணிக்குள் விடுதலைச் சிறுத்தைகளை இணைப்பதில், தி.மு.க முன்னணியினர் மத்தியில் கருத்துவேறுபாடு உள்ளது. ராமதாஸ் தனியாக நிற்பதால் வன்னியர் ஓட்டு பா.ம.க-வுக்குப் போய்விடும். சிறுத்தைகளைச் சேர்த்தால் தி.மு.க-வுக்கு வாக்களிக்கும் வன்னியர்கள்கூட வாக்களிக்க மாட்டார்கள் என ஒரு தரப்பும், பா.ம.க இல்லாதபட்சத்தில் வட மாவட்டங்களில் சிறுத்தைகளின் வாக்குகள் இருந்தால்தான் சமாளிக்க முடியும் என இன்னொரு தரப்பும் கூறிவருகிறது. சிறுத்தைகள் பற்றி இன்னும் தி.மு.க முடிவெடுக்கவில்லை. விஜயகாந்த் விஷயத்தில் தெளிவு பிறந்த பிறகு மட்டுமே தி.மு.க தெளிவுபெறும்!
தடுமாறும் கேப்டன்!
கடந்த வாரம் வரை விஜயகாந்த் குழப்பம் இல்லாமல்தான் இருந்தார். பா.ஜ.க-வுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாகவும் இருந்தார். ஆனால், மோடி - ஜெயலலிதா சந்திப்பு அவரை புரட்டிப்போட்டுவிட்டது. அது ஒரு நாட்டின் பிரதமருக்கும் மாநிலத்தின் முதலமைச்சருக்குமான சந்திப்பு, கட்சிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பம்மாத்துக்களை எல்லாம் விஜயகாந்த் நம்பத் தயாராக இல்லை. சென்னை வரும் மோடி ஜெயலலிதாவைச் சந்திக்கிறார். அதுவும் வீட்டுக்குச் சென்று சந்திக்கிறார் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு ரஜினி வீட்டுக்கு மோடி போனதையே விமர்சித்தவர் விஜயகாந்த். இந்த மரியாதையைக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு ஏன் தரவில்லை என அப்போதே கேட்டதாகத் தகவல்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கம் உள்ளதாக விஜயகாந்த் காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். இளங்கோவனை வலியப்போய் பார்த்ததும், காங்கிரஸ் பிரமுகர்கள் இவரை வந்து பார்ப்பதும் அதில் இருந்து தொடங்கியது. கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் வெளிப்படையாக நன்றி சொன்னார் விஜயகாந்த். இவர் கைதாகி இருந்தபோது பேசிய இடதுசாரித் தலைவர்களிடம், 'நாம் விரைவில் சந்தித்துப் பேசுவோம்’ என்றும் சொல்லியிருக்கிறார். விஜயகாந்த் மனம் மாறுவது தெரிந்ததும், அவரது உண்ணாவிரத மேடைக்கு பா.ஜ.க தலைவர்கள் தமிழிசை, மோகன் ராஜுலு வந்ததும் நடந்தது.
தன்னோடு இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டு சேர்ந்துவிடும் என விஜயகாந்த் நினைக்கிறார். அப்படிப் போக மாட்டோம் என்றால், இப்போதே சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுடன் கூட்டணி என அறிவியுங்கள் என்கிறார் விஜயகாந்த். அதற்கு பா.ஜ.க தயாராக இல்லை.
கடந்த முறை அ.தி.மு.க-விடம் வாங்கிய தொகுதிகளை இந்த முறை தி.மு.க-விடம் வாங்க வேண்டும் என்றும், தி.மு.க-வுடன் சேர்ந்தால்தான் ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என்றும் தே.மு.தி.க முன்னணியினர் நினைக்க, வழக்கம்போல் விஜயகாந்த்தின் மனக்குழப்ப மௌனம் தொடர்கிறது.
பஞ்ச பூதங்கள்!
தமிழ்நாட்டு அரசியலில் திடீரெனக் கிளம்பியுள்ளன பஞ்சபூதங்கள். ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இந்தக் கூட்டணிக்கு 'பஞ்ச பூதங்கள்’ எனப் பெயர் சூட்டியவர் திருமாவளவன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் தி.மு.க ஏற்படுத்திய கசப்பு காரணமாக அவர்களிடம் இருந்து தானாக விடுவித்துக்கொண்டது விடுதலைச் சிறுத்தைகள். 'கூட்டணி மட்டும் போதாது; கூட்டணி ஆட்சி வேண்டும்’ எனப் புது முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனை, திருமாவளவன் சந்தித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன் விசாகப்பட்டினத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநாட்டில், 'கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளுடன் தொடர்ந்து தேர்தல் உடன்பாடு வைத்து வந்தது, நமது சுயேச்சையான வளர்ச்சியையும் அரசியல் செல்வாக்கையும் மோசமாகப் பாதித்துள்ளதா என்பதைப் பரிசீலிக்கவேண்டியது அவசியம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை ஜி.ஆர்., திருமாவுக்குச் சொன்னார்.
'கொள்கை முரண்பாடு உள்ளவர்களோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதைவிட, கொள்கை உடன்பாடு உள்ளவர்களோடு கூட்டணி வைப்பதே சிறப்பானது. இன்று இல்லாவிட்டால் என்றாவது நோக்கம் நிறைவேறும்’ என ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு வைகோவை ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றுதான் முதல் கட்டப் பேச்சுவார்த் தைகளில் முடிவெடுக்கப்பட்டது.
தி.மு.க-வுடன் இணக்கம் காட்டும் வைகோ, தங்களோடு வருவாரா என்ற தயக்கம் இடதுசாரித் தலைவர்களுக்கும் திருமாவளவனுக்கும் இருந்தது. அடுத்தகட்ட சந்திப்புகளில், 'இதுவே தேர்தல் கூட்டணியாக வேண்டும்’ என்றும் பேசப்பட்டது. 'கலைஞர் இல்லாமல் ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என நினைக்கிறீர்களா?’ என வைகோ கேட்க, 'மாற்றம் விரும்பும் ஓர் அணியில் இருந்து குறிப்பிடத்தக்கவர்கள் சட்டமன்றத்துக்குள் உள்ளே நுழைய முடியுமே’ என இடதுசாரித் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இதை இடதுசாரித் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்ல, வைகோவும் திருமாவளவனும் வழிமொழிந்துள்ளார்கள். 'நோக்கம் நல்ல நோக்கம். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பயன்படாது’ என்பது இந்தக் கட்சிகளில் இருக்கும் முன்னணியினர் பலரின் கருத்து. இதுவரை இருந்ததுபோலவே இந்தத் தேர்தலும் தி.மு.க - அ.தி.மு.க-வுக்கான போட்டியாகத்தான் இருக்கப்போகிறது. இதில் 3-வது அல்லது 4-வது அணி என்பது யாரையோ வெற்றி பெறவைக்கப் பயன்படுமே தவிர, வெற்றி பெறாது என்பதே யதார்த்தம். அல்லது இந்த அணி பலப்படுத்தப்பட வேண்டும். விஜயகாந்த், ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இதோடு இணைக்கப்பட்டால், இரண்டாவது இடத்தைக் குறிவைத்து மோதலாம்.
தனி மனிதர்!
தமிழ்நாட்டு அரசியலில் அதிகமாகச் சத்தியம் வாங்கியவர் எம்.ஜி.ஆர்-தான். எம்.ஜி.ஆர் என்னிடம் அந்தச் சத்தியம் வாங்கினார், இந்தச் சத்தியம் வாங்கினார் என ஜெயலலிதாவும் ஆர்.எம்.வீரப்பனும் திருநாவுக்கரசரும் அந்தக் காலத்தில் தினம் ஒரு கதை சொல்வார்கள்.
அதேபோல், தமிழ்நாட்டு அரசியலில் அதிகப்படியான சத்தியங்கள் செய்துகொடுத்தவர், ராமதாஸ். நூற்றுக்கணக்கான சத்தியங்கள். ஆயிரக்கணக்கான மேடைகளில் சொல்லியாகிவிட்டது. கடந்த வாரத்தில் மதுரைக்குப் போன ராமதாஸ், அங்கு இருந்த நிருபர்களுக்குச் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறார். மரண பயத்தில் இருக்கிறார்கள் மதுரை நிருபர்கள், 'இவர் சத்தியத்தை மீறினால், தங்கள் தலை வெடித்துவிடுமோ’ என்று!
'திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை’ என்பது அவரது கால் நூற்றாண்டு சபதம். அதைப் பலமுறை அவரே மீறியும் இருக்கிறார். ஆனால், இந்த முறை 'அன்புமணிதான் முதலமைச்சர் வேட்பாளர்’ என்ற கோஷத்தில் உறுதியாக நிற்கிறார்கள்.  
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவு பலமான கூட்டணி வைத்து தர்மபுரியில் வென்றதை, தனது தனிப்பட்ட சொந்த செல்வாக்காகவே பா.ம.க பார்க்கிறது. அதே  செல்வாக்கை சட்டமன்றத் தேர்தலிலும் பெறுவதுதான் பா.ம.க-வின் இலக்கு. எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் 23 தொகுதிகள் பெற்று 15 வெல்வதற்கு, தனியே நின்று அதே 15 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மரியாதையாவது மிஞ்சுமே என காலம் கடந்து யோசித்ததன் விளைவு இது. 'மகனே உன் சமர்த்து’ என மனப்பூர்வமாக இறக்கிவிட்டு விட்டார் ராமதாஸ்.
இதுதான் இந்த வாரத்து பஞ்சதந்திரம்! 



No comments:

Post a Comment