சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Aug 2015

தீரர் சத்திமூர்த்தியின் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தில் 1887ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி பிறந்தவர். அவருக்கு எட்டு சகோதரர்கள். சத்தியமூர்த்தியின் இளம் வயதிலேயே அவரது தந்தை காலமானார். தன்னுடைய தாய் மற்றும் சகோதரர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இவருக்கு அதிகமானது.

1906ம் ஆண்டு ‘சென்னை கிறித்துவ கல்லூரியில்’ வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 
பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற அவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஸ்ரீ.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரின் கீழ் சட்டப் பயிற்சி மேற்கொண்டார்.தனது கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்றது அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பையும் அரசியலில் ஈடுபடவும் வழிவகுத்தது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார். கட்சியில் நன்மதிப்பையும் பெயரையும் பெற்றவர், பிறகு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம் மற்றும் ரவுலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதாட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.

பின்னர் 1923ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகவும் ஆனார். சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு போன்றவர்கள் தொடங்கிய ‘சுயராஜ்ஜியக் கட்சி’யில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் அமைவதற்கு உறுதுணையாக இருந்தார். 1937ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று சென்னை மாகாண கவுன்சிலரானார்.


1939ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக பணியாற்றியபொழுது, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்திற்கான ஒப்புதல் பெற்று பணிகள் உடனே தொடரவும் தீவிரம் காட்டினார்.

பின்னர், சுதேசி இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு செயல்பட்ட அவர், 1940ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டார்.சத்திய மூர்த்தி, 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவர். திறம்பட செயல்பட்ட காமராஜரின் ஆட்சிக்காலம் தமிழக அரசியலில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரைத் தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமல்ல, அவரது தலைமையின்கீழ் செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்! அவர் சென்னை நகர மேயராக இருந்தபோதுதான் இன்றைய பூண்டி நீர்த்தேக்கத்தை, ஆங்கில அரசுடன் வாதாடி அமைத்தார். ஆனால், அந்தப் பணிகள் நிறைவடைவதற்குள் அவர் காலமானதால்,பின்னர் காமராசர் அந்த நீர்த்தேக்கத்திற்கு“சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம்“ என்றே பெயரிட்டார்.

நாட்டுக்காகப் பாடுபட்டதோடு, பாரதி பாட்டுக்காகவும் அவர் போராடினார். பர்மா அரசு, நமது பாரதி பாடல்களைத் தடைசெய்ததோடு, பாடல் நூல்களைப பறிமுதல் செய்யவும் ஆணையிட்டதைக் காரணம் காட்டி அன்றைய நம் “சென்னை ராஜதானி“ பாரதி பாடல்களைத் தடைசெய்து, பறிமுதலும் செய்ய சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. அதை எதிர்த்து முழங்கிய தீரர் சத்தியமூர்த்தி, “நீங்கள் தாராளமாக எங்கள் பாரதியின் பாடல்களைத் தடைசெய்து கொள்ளலாம், பாரதியின் பாடல் நூல்களையும் பறிமுதல் செய்து எரிக்கவும் செய்யலாம்... எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை“ என்று தன் பேச்சைத் தொடங்கினார்.

எல்லாரும் அதிர்ந்து போனார்கள்... தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் அது வெட்டி வேலை. ஏனெனில், பாரதி பாடல்கள் அனைத்தும் எங்கள் தேசபக்தி மிக்க தமிழர்களுக்கு மனப்பாடம்! நாங்கள் ஊர்ஊராகப் பாரதியைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவோம்.. மனப்பாட சக்தியைப் பறிமுதல் செய்யும் புதிய எந்திரம் எதையும் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், உங்களால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அதனால் நீங்கள் பாடல்களைத் தாராளமாகத் தடைசெய்து கொள்ளவோ எரிக்கவோ கூட ஆணையிடலாம்...ஆனால் அது வீணான வேலை என்பதை கனம் சர்க்கார் புரிந்து கொண்டால் நல்லது” என்று முழங்கினார். பின்னர் பாரதி பாடல்களைத் தடைசெய்யும் முயற்சியை அன்றைய சென்னை மாநில அரசு கைவிட்டது என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை.

1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொது செயலாளராகவும் நியமித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றி, தன்னுடைய குருவின் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர் முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார். மேலும், அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்கு ‘சத்தியமூர்த்தி பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பூண்டி நீர்த்தேக்கம் இவரால் தொடங்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

1942 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைதுசெய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், முதுகு தண்டு காயத்தினால் அவதிப்பட்ட சத்தியமூர்த்தி, 1943ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி சென்னை மருத்துவமனையில் தன்னுடைய 55 வது வயதில் காலமானார்.நாட்டுக்காகவே உழைத்த  தீரர் சத்தியமூர்த்தி அவர்களை போற்றி வணங்குவோம்!!




No comments:

Post a Comment