சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Aug 2015

மதுவிலக்கு: அரசை நிர்ப்பந்திக்கும் அதிசய போராட்டம்!

மிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்த துவங்கி 12 ஆண்டுகள் கடந்தாகி விட்டது. இத்தனை காலங்களில் மதுவுக்கு எதிரான குரல்கள் எழுந்த போதும், போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் நடந்து வந்தது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள், மக்கள் திரள் போராட்டங்களாய் மிகுந்த எழுச்சியுடன் நடக்கத் துவங்கியுள்ளது. அரசியல் கட்சிகளோடு நிற்காமல் அமைப்புகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மதுவுக்கு எதிராய் அணி திரண்டு போராடத்துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மதுவுக்கு எதிராய் போராட்டங்கள் புதிதல்ல. கள்ளுக்கடைக்கெதிரான போராட்டங்கள் துவங்கி, மதுவுக்கு எதிராய் கடுமையாக போராடிய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. ஆனால், மது என்பது நாகரீக வளர்ச்சியாக பார்க்கப்படும் தற்போதைய நேரத்தில், மதுவுக்கு எதிராய் நடக்கும் போராட்டங்கள் நிச்சயம் அதிசயமான போராட்டம்தான்.

போராட்ட வடிவத்திலும் இது வித்தியாசம்தான். 'மதுவை தடை செய்... மது கடைகளை மூடு!' என வெறும் முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டம் நடத்தி, மறியல் செய்து யாரும் கலைந்து விடவில்லை. மாறாக மதுபான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. மதுபாட்டில்கள் எல்லாம் உடைத்து எறியப்பட்டது. தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இப்படி போராட்டம் நடத்துவது என்பது சாதாரணம் கிடையாது. ஜாமீனில் வெளிவராத சட்டங்களில் நீங்கள் கைது செய்யப்படலாம். அரசின் சொத்துக்கு சேதம் (?) விளைவித்ததாக கூறி, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் கூட உங்கள் மேல் பாயலாம் என பல மிரட்டல்களுக்கிடையே நடந்தது இந்த போராட்டம். இத்தனை மிரட்டல்களுக்கிடையேயும் இவர்கள் உறுதியுடன் களத்தில் நின்று போராடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் நடத்திய டாஸ்மாக் கடை முற்றுகை, அதைத்தொடர்ந்த போலீசாரின் தடியடி, தாக்குதல், தள்ளுமுள்ளு போன்றவைகளால் தமிழகமே குலுங்குகிறது. உடல்நலம் சரியில்லை எனச்சொல்லி பல நாட்களாய் ஓய்வில் இருக்கும் முதல்வரை, வேறு வழியே இல்லாமல் தலைமை செயலகம் வர வைத்தது சென்னை மாணவர்களின் போராட்டம்தான்.

இப்படி மதுவுக்கு எதிராய், மது விற்பனைக்கு எதிராய் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழத்துவங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுதான் மிக மோசமானதாக இருக்கிறது. மது ஆலைகளுக்கு எதிராக போராட்டம் தீயாய் பரவத்துவங்கியுள்ள நிலையில், என்ன நடந்தாலும் மதுக்கடைகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லாமல் சொல்கிறது தமிழக அரசு.

சாராயம் விற்றால் துரத்தி துரத்தி கைது செய்து வந்த அல்லது கைது செய்ய வேண்டிய போலீஸ், மதுக்கடைகளுக்கு ஆதரவாய், மதுபான விற்பனைக்கு ஆதரவாய் மதுக்கடை முன்பு காவல் காத்து நிற்கிறது. அதோடு, மதுவிற்பனைக்கு எதிராய் போராடும் மக்களை அடித்து உதைத்து கைது செய்ததுதான் இதன் உச்சம். சென்னையில் மாணவர்களை நடுரோட்டில் விரட்டி விரட்டி தாக்கியது போலீஸ்.  கோவையில், மாணவர்களை மக்கள் முன்னிலையில் மிக மோசமாய் தாக்கி இழுத்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலீசார் நடந்து கொண்ட விதத்தை விவரிக்கவே முடியாது.
மதுக்கடையை மூட வேண்டும் என திடீரெனச் சொல்லி யாரும் போராட்டம் நடத்தி விடவில்லை. 'மதுக்கடைகளை மூடிடுக!' என பல மாதங்களாக மெல்ல மெல்ல போராட்டங்கள் தீவிரம் பெற்று வந்தன. சசிபெருமாள் இறந்த பின்னராவது இதில் தமிழக அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் மக்களின் கோரிக்கைகளுக்கு அல்லது போராட்டங்களுக்கு அடிபணிந்தாவது மதுகடைகளை தற்காலிகமாவது அரசு மூடியிருக்க வேண்டும். அதைவிடுத்து என்ன நடந்தாலும் மதுவிற்பனை நடக்கும் என்பதாகச் சொல்லி, மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதை என்னச் சொல்லி விவரிக்க.

ஆனால், இதையெல்லாம் மீறித்தான் இந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. போராடுபவர்களுக்கு ஆதரவாய் மக்களும் வீதியில் இறங்கி போராடத் துவங்கி விட்டனர். கோவையில் மதுவுக்கு எதிராக போராடிய மாணவர்களை போலீசார் தாக்கியதை கண்ட பொதுமக்கள், மாணவர்களுக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டது இதனை வெளிப்படையாக உணர்த்தியது.

அடர்த்தியான உள்ளடக்கத்தோடு இந்த போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழகமும் இதற்கு இணங்கி நிற்கிறது. போராட்டத்தின் நியாயங்கள் யாராலும் மறுத்து பேச முடியாதபடி எல்லா தளங்களிலும் சரியாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மதுபான ஆலைகளை மூடி, மதுவிற்பனையை நிறுத்த வேண்டும் என்பதுதான் அது. உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மது விற்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அரசின் காவல்துறையும், மதுவை நிர்பந்தப்படுத்தி மக்களுக்கு ஊட்டிவிட முயல்வதுதான் வேடிக்கை.

மக்களின் போராட்டம் அரசையும், காவல்துறையையும் திகைத்த வைத்துள்ளது. மக்கள் ஒரு அணியாய் திரளத்துவங்கி விட்டதை, ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் உணரத்துவங்கிவிட்டன. மீதமுள்ளது ஆளுங்கட்சி மட்டும்தான். இனி அவர்களுக்கும் வேறு வழியில்லை. மதுவுக்கு எதிராக அணி திரளும் மக்களுக்கு ஆதரவாக  இருப்பது ஒன்றே அரசுக்குள்ள ஒரே வழி.
மது இல்லாத தமிழகம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.



No comments:

Post a Comment