சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Aug 2015

ஆகஸ்ட் 5: இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்! - சிறப்பு பகிர்வு

சந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாமு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!
காமராஜருக்கு அறிமுகமான குடும்பம். பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில், சிறுவனான சந்திரபாபுவை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

சந்திரபாபுவுக்கு ஆங்கில அதிகாரிகள், பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள், பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேன்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!
மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது, ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது - பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸ்க்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா!
முதல் படம், 'தன அமராவதி' (1947), கடைசிப் படம் 'பிள்ளைச் செல்வம்' ( 1974). 50-களில் தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!
ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார். எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!
எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!
ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!
'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும்போதும் அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
எஸ்.எஸ்.வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். 'நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது' என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார்!
சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். 'சகோதரி' படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு'. ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!
ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின்போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!
நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது முதல் பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல; அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதவைத் தாழிட்டுக்கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்!
மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்'' என்றவர்!
'பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு' என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, 'ஓ ஜீசஸ்!' என்று சொல்லியபடிதான் நுழைவார்!
ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட... உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு. 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ... உற்சாகமானபொழுது அது!
'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!
நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஓவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும்கூட. 'ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்!

'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்' என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒருநாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!
'என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம்!' என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!


No comments:

Post a Comment