சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Aug 2015

கூகுளை வழிநடத்தப்போகும் சென்னை தமிழர்!

கூகுளுக்கு புதிய தாய் நிறுவனம் ஆல்பபெட் உதயம்; சுந்தர் பிச்சை புதிய சி.இ.ஓ

இணைய உலகின் புகழ் பெற்ற நிறுவனமான கூகுளின் அமைப்பில் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஆல்பபெட் எனும் புதிய தாய் நிறுவனம் உதயமாகியுள்ளது. கூகுள் இதன் துணை நிறுவனமாக இயங்கும் என்றும், இதன் சி.இ.ஓவாக இந்தியரான சுந்தர் பிச்சை செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி தேடியந்திரமாக விளங்கி வரும் கூகுள் , தேடல் தவிர வீடியோ, பிரவுசர், ஆண்ட்ராய்டு இயங்குதளம் என பலதுறைகளில் வியாபித்துள்ளது, மேலும் கூகுள் பல ஆய்வு பிரிவுகளையும் பெற்றுள்ளது. பல் துணை நிறுவனங்களையும் பெற்றுள்ளது. இணைய உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க சாம்ராஜ்யமாக கூகுள் விளங்குகிறது.
 


இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் புதிய சீரமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆல்பபெட் எனும் புதிய தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தாய் நிறுவனத்தின் கீழ் துணை நிறுவனமாக கூகுள் இயங்கும். கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ், தாய் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பார். கூகுளின் துணைத்தலைவரான சுந்தர் பிச்சை இனி கூகுள் நிறுவன சி.இ.ஓ.வாக செயல்படுவார்.

தேடல் பிரிவு தவிர, யூடியூப், குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவை கூகுள் கீழ் இயங்கும். முதலீடு மற்றும் ஆய்வு பிரிவுகள், ஸ்மார்தோம் பிரிவான நெஸ்ட், டிரோன் பிரிவு உள்ளிட்டவை ஆல்பபெட் கீழ் இயங்கும். இணை நிறுவனரான செர்ஜி பிரின், தாய் நிறுவனத்தின் தலைவராக செயல்படுவார். 
கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ், இந்த சீரமைப்பு பற்றி நிறுவன வலைப்பதிவில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சீரமைப்பிற்கான நோக்கத்தையும் விளக்கி உள்ளார்.

கூகுளில் உள்ள மகத்தான வளர்ச்சி வாய்ப்புகளில் கவனம் செலுத்த இந்த சீரமைப்பு உதவும் என்று அவர் கூறியுள்ளார். எங்கள் நிறுவனம் இன்று சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. எனினும் இதை மேலும் எளிமையானதாகவும், கணக்குகள் நோக்கில் வெளிப்படையானதாகவும் ஆக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் வழக்கமான நிறுவனம் அல்ல என்றும், அதே விதத்தில் தொடர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

கூகுளின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி கராக்பூரில் படித்தவர். பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையில் உயர் கல்வி பெற்றார். 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த அவர், மிக வேகமாக அந்நிறுவனத்தில் உயர் பதவிக்கு வந்தார். கூகுள் நிறுவனர்களின் நம்பிக்கையை பெற்ற சுந்தர் பிச்சை, அதன் மூத்த துணைத்தலைவரானார். தற்போது சீரமைக்கப்பட்ட பிறகு கூகுளின் சி.இ.ஓ.வாக ஆகியிருக்கிறார்.

கூகுளின் புதிய சீரமைப்பு,  நிறுவனத்திற்குள் உள்ள மகத்தான வாய்ப்புகள் மீது கவனம் செலுத்த உதவும். இதில் சுந்தர் பிச்சை முக்கிய அங்கம் வகிப்பார். சுந்தர் பிச்சையின் ஆற்றல் மற்றும் ஈடுபாடு,  எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக  உள்ளது என்று  கூறியுள்ள லார் பேஜ்,  சுந்தர் பிச்சை போல திறமை வாய்ந்த ஒருவர், கூகுள் நிறுவனத்தை வழிநடத்த கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்றும்  பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்டின் சி.இ.ஓ.வாக, இந்தியரான சத்யா நாதெள்ள இருக்கும் நிலையில், கூகுளின் சி.இ.ஓவாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 

லாரி பேஜின் அறிவிப்பு;
 https://abc.xyz/





No comments:

Post a Comment