சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Apr 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.ஆச்சார்யாவை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞரான பவானி சிங் ஆஜராகி வந்தார். இதனிடையே, பவானி சிங்கை நீக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று  அதிரடியாக தீர்ப்பளித்தது.


மேலும், கர்நாடக அரசு 28ஆம் தேதிக்குள் (இன்று) 50 பக்கங்களில் எழுத்துமூலம் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். அன்பழகன் தரப்பும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு, அவரது வாதத்தை 90 பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை பரிசீலித்த பின் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.ஆச்சார்யாவை நியமித்து கர்நாடக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது. அவருக்கு உதவியாக சந்தேஷ் சவுட்டாநியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அரசு தரப்பின் எழுத்துபூர்வ வாதங்களை மாலை 4 மணிக்கு ஆச்சார்யா தாக்கல் செய்ய உள்ளார்.
 
ஏற்கனவே ஆஜரானவர் ஆச்சார்யா
ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு,  விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் ஆச்சார்யா.
அப்போது ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் வழக்கை இழுத்தடிப்பதாக பலமுறை குற்றம் சாட்டிய ஆச்சார்யா,  இவ்வழக்கு விசாரணை துரிதமாக  நடக்க ஆர்வம் காட்டினார். ஆனால் இழுத்தடிப்புகள் தொடர்ந்ததால் மனம் வெறுத்துபோன ஆச்சார்யா ஒருகட்டத்தில் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார்.
அதன் பின்னரே அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி
இந்நிலையில் ஆச்சார்யாவை மீண்டும் அரசு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது ஜெயலலிதா உள்ளிட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக முன்னர் ஆஜரான ஆச்சார்யா, அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகும் அளவுக்கு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக 22.8.12 ல்  ஜூனியர் விகடனுக்கு அளித்த  பேட்டியில் கூறியிருந்தார். 
அந்த பேட்டி இங்கே...
 
ச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர். 
14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர். அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!
''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''
''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).
''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''
''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''
''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'
''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர். ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட். இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''
''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''
(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!''  
''அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''
''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''

''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''
''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''
''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''
''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''
''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''
''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''
''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''
''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''
''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''
''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''
''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''
''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''
''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''
''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''
''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''

''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.
'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!


இன்று நேபாளம்... நாளை ? மிரட்டும் பூகம்பம்... மிரளும் தமிழகம்

றந்தவர்களின் எண்ணிக்கையைச் சரியாகக் கணிக்கக்கூட முடியாத அளவில் பூகம்பத்தின் கோரப் பிடியில் சிக்கியிருக்கிறது நேபாளம். பாரபட்சம் காட்டாமல் அனைத்துக் கட்டடங்களையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்க... அதன் அதிர்வலைகள் தமிழகம் வரை பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறோமா நாம்?

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜனிடம் பேசினோம். ‘‘இயற்கைச் சீரழிவிலே மிகக் கொடூரமானது பூகம்பம்தான். அது, உயிர்களைக் கொல்வதுடன் நிற்காமல், அடுக்குமாடிக் கட்டடங்களையும் சுக்கு நூறாக்கிவிடும். அத்தகைய வீரியம் அதற்கு உண்டு. கடந்த காலங்களில், இந்தியாவின் வட மாநிலத்தில் லத்தூர் மற்றும் பூஜ் ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய பூகம்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதில், ஒரு கட்டடம்கூட மிஞ்சவில்லை. அனைத்தும் தரைமட்டமாயின. அந்த கோரச் சம்பவத்தைத் தொடந்து மத்திய அரசானது, கட்டடங்களுக்கான ஒரு வரைமுறையை (National Building Code) வெளியிட்டது. அதன்படி, ஒரு கட்டடத்தை இப்படித்தான் கட்ட வேண்டும் என்ற விதிகளை அரசு வகுத்திருக்கிறது. ஆனால், இன்று வரை அந்த விதிமுறைகளை யாருமே பின்பற்றுவதில்லை. அதைக் கண்காணிக்கவும் மத்திய அரசு தவறிவிட்டது.
1934-ல் இமயமலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுகுறித்த ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காலம் காலமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் அந்த முயற்சி கிடப்பிலே இருந்ததுதான் மிச்சம். கடந்த ஆண்டு, மியாமி பல்கலைக்கழகத்தினர் வெளியிட்ட ஆய்வு, அனைவரையும் திகில் அடைய வைத்திருக்கிறது. அதில், இந்தியப் பெருங்கடலில் நீண்டகாலமாக பாறைகளுக்கு அடியில் அழுத்தம் ஒன்று உருவாகி வருகிறது. அது நாளுக்கு நாள் அதிகரித்து தன் ஆற்றலை வீரியப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த அழுத்தம் வெளிப்படும்போது, 9.8 ரிக்டர் அளவு நில நடுக்கமும், 130 அடி அளவுள்ள அலைகளும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டு உயிர்ச் சேதம் கடுமையாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற இயற்கைப் பேரழிவின்போது நம்மை காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன என்பதையும் நாம் அறிந்திருக்கவில்லை. இதனை முறையாகக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டியது நம் அரசுதான். அதன் விளைவுதான் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகள். இயற்கையை சிதைத்து பாறைகளைக் குடைந்து ஆய்வுக் கூடங்கள் அமைப்பதுகூட பின்னாளில் கடுமையான சீரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. பெரிய திட்டங்களால் என்றுமே பெரிய ஆபத்துகள் காத்து இருக்கின்றன’’ என்று எச்சரிக்கை செய்கிறார் அவர்.
மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான வெற்றிச்செல்வனிடம் பேசினோம். “குஜராத் பூகம்பம் மற்றும் தமிழகத்தில் சுனாமிக்குப் பிறகு விழித்துக்கொண்ட மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை என்ற ஆணையத்தை உருவாக்கியது. அதன்மூலம் மாநில முதல்வர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த மாநிலங்களில் இந்த ஆணையம் செயல்படுத்தப்பட்டது. மாவட்டம்தோறும் கலெக்டர்கள் இதன் பொறுப்பாளர்களாக அங்கம் வகிக்கின்றனர். இயற்கைப் பேரழிவின்போதுதான் இவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்பதில்லை. அதற்கு முன்பே முன்னெச்சரிக்கைத் திட்டங்களை வகுத்திருக்க வேண்டும். மேலும், வருடத்துக்கு மூன்று முறையாவது இந்தக் குழு கூடி  ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். இது எதுவும் தமிழகத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலை விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட ஒத்திகையின்போது அதில் பங்கெடுத்த அரசு அதிகாரிகளுக்கு யாருக்கு என்ன உத்தரவு கொடுக்க வேண்டும்  என்பதுகூட தெரியாமல் திணறியதை நேரில் கண்டோம். அவர்கள் பயன்படுத்திய வாக்கி டாக்கிகளும் வேலை செய்யவில்லை.
பேரழிவு காலத்தில் பொதுமக்களை மீட்பதற்கு சிறப்புக்குழு ஒன்று அரக்கோணத்தில் இருக்கிறது. அதில், மொத்தம் 1,500 பேர் இருக்கின்றனர். தமிழகத்தில் எங்கு இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும் இந்தக் குழுதான் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருக்கிறது. மேலும், இதுபோன்ற காலகட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய விழிப்பு உணர்வு இல்லாமல் உயிர்ச் சேதம் அதிகமாகிறது. அதற்கு உதாரணம்  தானே புயலால் 44 உயிர்களை வாரிக் கொடுத்ததுதான்.
எங்களுடைய கோரிக்கை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு பேரிடர் காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு பேரிடர் மேலாண்மை அவர்களுடைய  பாடத்திட்டங்களில் கட்டாயம் இடம்பெற்றுள்ளது. நம் கல்வித் துறையும் அதைப் பின்பற்றி அரசுப் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்பு உணர்வு வகுப்புகளை எடுக்க முன்வர வேண்டும்.
இந்த பேரிடர் மேலாண்மையில் அரசு காட்டும் அலட்சியம் இயற்கை சீற்றங்களின்போது உயிர்ச்  சேதத்தை அதிகப்படுத்தும்.
2005-ல் மத்திய அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதோடு சரி. அதன் பிறகு, எந்தவொரு கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மாநில அரசானது அதற்கேற்றார்படி புதிய விதிகளை இயற்ற வேண்டும். 10 வருடங்களைக் கடந்த நிலையில் தமிழகத்தில் அந்தச் சட்டத்தில் எந்தவொரு புதிய சட்ட விதிகளும் வடிவமைக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்’’ என்றார் அவர்.
‘வரும் முன் காப்போம்’ என்று வெறும் வாசகங்களை எழுதி வைத்தால் மட்டும் போதாது!

டேஞ்சர் மண்டலம் மூன்றில் சென்னை!
இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில், எங்கே நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட்டாலும்... உடனே விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுடுகிறவர்கள் யார் தெரியுமா? தேசிய பேரிடர் மீட்புப் படை (நேஷனல் டிஸ்ஸாஸ்டர் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ்). இந்த டீமில் ஒரு பகுதியினர்தான் தற்போது நேபாளத்தில் மீட்புப் பணிக்காக சென்றிருக்கிறார்கள். இந்தப் படை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் இருக்கின்றன. 10 பட்டாலியன்களில் மொத்தமாக 11 ஆயிரத்து 500 வீரர்கள் இருக்கிறார்கள். சகலவித மீட்புப் பணிகளில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இந்தப் படைப் பிரிவின் தற்போதைய டி.ஜி.பி-யாக இருப்பவர் ஓ.பி.சிங். இதே பிரிவில் ஐ.ஜி-யாக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். தமிழகத்தில் இந்தப் படையினர், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் முகாம் அமைத்து இயற்கையின் நடவடிக்கையை கண்காணிக்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர், ‘‘மிகவும் டேஞ்சர் மண்டலம் 5-ல் இருப்பது அந்தமான் தீவுகள். மிகத்தீவிர வாய்ப்புள்ள இடம் அது! கடலுக்கடியில் ஃபிளேட்டுகளில் ஏற்படும் உராய்வுகள் அடிக்கடி நிகழ்கின்ற இடம். எங்களுக்கு போர்ட்ப்ளேயரில் ஒரு முகாம் உள்ளது. டேஞ்சர் மண்டலம் 3-ல் சென்னை, கோவை வருகின்றன. மற்ற முக்கிய ஊர்கள் டேஞ்சர் மண்டலம் 2-ல் வருகின்றன. இவை எந்த லெவலில் இருந்தாலும், அதையெல்லாம் சமாளிக்கும் வகையில் எங்களிடம் தேர்ந்த வீரர்களும் அதற்கான கருவிகளும் இருக்கின்றன. ‘எப்போதும் பேரிடர் சேவையில்’ என்பதுதான் எங்களது தாரகமந்திரம். க்ளைமேட் எப்படி இருந்தாலும், அதை எதிர்கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும்.
திடீரென ஓர் ஆற்றை கடக்க தற்காலிக பாலம் அமைக்க வேண்டுமா? எங்களால் நிச்சயமாக முடியும். மௌலிவாக்கத்தில் நடந்த பில்டிங் விபத்தில் 12 பேர்களை உயிருடன் மீட்டோம். 52 உடல்களை மீட்டோம். 72 மணிநேரத்துக்குப் பிறகு எங்களது மோப்பநாய் உதவியுடன் மௌலிவாக்கத்தில் ஒடிசா இளைஞர் ஒருவரை உயிருடன் மீட்டோம். நிலநடுக்கம் மட்டுமல்ல! கெமிக்கல் கசிவு, கதிரியக்க பொருட்களின் ஆபத்து, நியூக்லியர் வீச்சு போன்ற மிக மோசமான விபத்துகளில்கூட நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆபத்தில் உதவுவதுதான் எங்கள் வேலை’’ என்று சொல்கிறார்.


இமயமலை வளர்கிறது!
80 வருடங்களுக்கு ஒருமுறை நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும் என்பது நேபாள மக்களைப் பொறுத்தவரை ஒரு செவிவழிச் செய்தியாக உலவிவருகிறது. 1934-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 12 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு சிறிய நிலஅதிர்வுகள் ஏற்பட்டாலும், பாதிப்பு அதிகம் இல்லை. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ‘இளைஞர்கள் தாங்கள் தப்பிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த வேளையில், நிச்சயம் பெரிய அளவில் நிலநடுக்கம் வரும்’ என்றே முதியவர்கள் கூறியுள்ளனர். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இது  உண்மையாகிவிட்டதாகத் தகவல்கள் பரவுகின்றன. இதன் பின்னணியில் அறிவியல் உண்மை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள், ‘‘இந்திய புவித்தட்டு, எப்போதுமே யூரோ - ஏசியன் புவித்தட்டை அழுத்தியபடி மேலே எழும்பியுள்ளது. எனவேதான், இமயமலை ஆண்டுக்கு 5 மி.மீ வீதம் உயர்ந்து வருகிறது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அழுத்தத்தை, ஒரு நிலநடுக்கத்தின் மூலம், குறைத்துக்கொள்வது பூமியின் இயல்பு’’ என்கின்றனர்.

முற்றுப்புள்ளி வைத்த ஜப்பான்!
“உலகின் எந்தவொரு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதை முழுமையாகத் தடுக்க முடியாது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகமும் கேரளமும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. தற்போது நமக்கு பெரும் சவாலாக இருப்பது பூகம்பத்தின்போது கட்டடங்கள் இடிந்து விழுவது. ஜப்பானில் நீண்ட ஆய்வுக்குப் பிறகு அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். தடுப்பு கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்குமே தவிர தரைமட்டமாகாது. அதேபோல், மண் பரிசோதனை செய்வது என்பது மிக முக்கியம். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பிரமாண்ட கட்டடங்களைக் கட்டுவதற்கு புவியியல் நிபுணர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இயற்கைப் பேரழிவின்போது உயிர்சேதத்தைத் தவிர்க்க முடியும்’’ என்கிறார் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் புவியியல் துறைத் தலைவர் மணிமாறன்.



மே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்!

னைத்து மாநில மக்களின் அடைக்கலமாக சென்னை விளங்குகிறது. வேலை வாய்ப்புகளுக்காகவும், கல்விக்காகவும் சொந்த மாநிலங்களையும், ஊர்களையும் விட்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இதனால் சென்னைக்குப் பலமுகங்கள் இருக்கின்றன. சென்னையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

கடந்த 2013ல் 47,54,499 பேரும், 2014ல் 47,92,949 பேரும், 2015ல் 48,28,853 பேரும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,903 பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால் சென்னையின் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி மாறிக் கொண்டு இருக்கிறது.


நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் விரிவாக்கம் அடைந்து அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாகி வருகின்றன. குறுகிய இடங்களில் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. வேறுவழியில்லாததால் தேனீக்களைப் போல வாழ மக்களும் பழகி கொண்டனர். பல்வேறு காரணங்களுக்கான சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு எளிதில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பத்துக்கு பத்து அறை கொண்ட இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் கூட ஆயிரக்கணக்கில் வாடகைக்கு விடப்படுகிறது.

சென்னையின் முக்கியப்பகுதிகளாக விளங்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், கிண்டி, ராயபேட்டை, கீழ்ப்பாக்கம், ஆலந்தூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வாடகையை கேட்டால் பலருக்கு தலைசுற்றுகிறது.

மேலும் வி.ஐ.பி. வசிக்கும் பகுதிகளான போயஸ்கார்டன், சாலிகிராம், கிழக்கு கடற்கரை சாலை குடியிருப்பு பகுதிகள், கோபாலபுரம், அடையாறு போர்ட்கிளப், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை.

மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு பெட் ரூம் கொண்ட வீடுகள் குறைந்தபட்சம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகின்றன. சிங்கிள் பெட் ரூம் வீடுகள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகிறது. வாடகை ரூபாய் இடத்துக்கு இடம், வீட்டின் உரிமையாளர் விருப்பத்துக்கு ஏற்ப வேறுபடுகின்றன. அதோடு வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு என்று தனியாக எழுதப்படாத சட்டத்தையும் சில வீட்டின் உரிமையாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

திருமணமாகதவர்களுக்கு வாடகைக்கு வீடுகளை கொடுக்க பலர் முன்வருவதில்லை. அப்படியே கொடுத்தாலும் மற்றவர்களை விட கூடுதலாக ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்படுகிறது. இதை விட சில மேன்சன்களில் பகல் கொள்ளை நடக்கிறது. ஒரே அறையை இரண்டு, மூன்று அல்லது ஐந்து பேருக்கு கொடுத்து தலா மூவாயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அந்த அறைகளுக்கு வாடகை அதிகம், வசதிகள் குறைவு. காலை நீட்டியும், புரண்டு கூட படுக்க முடியாது என்கிறார்கள் அதில் தங்கியிருந்தவர்கள்.

வாடகை வீட்டுக்கான அட்வான்ஸ் வாங்கும் போது முகம் மலரும் வீட்டின் உரிமையாளர்கள் அதன்பிறகு தங்களது சுய ரூபங்களை சிலர் வெளிகாட்ட தொடங்கி விடுகிறார்கள். வாடகைக்கு விடும் போதே இரவு 10 மணிக்கு மேல் வரக்கூடாது. உறவினர்கள் இரவில் தங்க கூடாது. அதிகம் சப்தம் போட்டு பேசக் கூடாது. குடித்து விட்டு சண்டை போடக்கூடாது, தினமும் 2 அல்லது மூன்று குடம் தான் நல்ல தண்ணீர் பிடிக்கணும், தண்ணீரை அதிகமாக செலவழிக்க கூடாது என்று கண்டிசன் போடுவதுண்டு.

இதைத்தவிர மின்கட்டணம் ஒரு யூனிட் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வசூலிக்கும் வீட்டின் உரிமையாளர்களும் இருக்கிறார்கள். இது தவிர குடிவந்து 5 அல்லது 6 மாதங்களே ஆனாலும், அதற்கு முன் வருட கணக்கில் சேர்ந்த செப்டிக் டேங் கழிவுகளை எடுக்க ஆகும் செலவுகளையும் ஆயிரம், இரண்டாயிரம் என நமது தலையிலேயே கட்டி விடுகிறார்கள். இது தவிர வீட்டை காலி செய்யும்போதும் வீட்டு அட்வான்ஸ் தொகையில் அதே காரணத்திற்காக பணத்தை பிடித்தம் செய்துகொண்டுதான்  மீதியை தருகிறார்கள்.
இப்படி வீட்டின் உரிமையாளர்கள் போடும் அத்தனை கண்டிசன்களுக்கும் கட்டுப்பட்டு குடியிருந்தாலும் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டை காலி செய்ய சொல்வது சில உரிமையாளர்களின் வாடிக்கை. இதுவும் வாடகை உயர்வுக்குத்தான். அதுவும் மே மாதங்களில்தான் வாடகையை உயர்த்துவது வீட்டு உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். காரணம், பெற்றோர்கள் பள்ளியை மாற்றுவது மற்றும் அரசு ஊழியர்கள் டிரான்ஸ்பர்கள் மே மாதங்களில் நடக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஏற்கனவே இருப்பவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வைக்கின்றனர்.

வீட்டை காலி செய்தவுடன் அந்த வீடு, ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை கூடுதல் வாடகைக்கு விடப்படுகிறது. தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், கிண்டி, ஆலந்தூர், வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் புரோக்கர்கள் இல்லாமல் வாடகைக்கு வீடுகள் கொடுக்கப்படுவதில்லை. புரோக்கர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகையை கமிஷனாக கொடுக்க வேண்டும். இதுவும் வாடகை வீட்டுக்கு செல்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

குறைந்த சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்கள்,  இடைநிலை ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் நிலைமை அந்தோ பரிதாபமாக இருக்கிறது. வீட்டின் வாடகை ஒவ்வொரு ஆண்டும் ஜெட் வேகத்தில் உயர்த்தப்படுவதால் வீட்டின் தேவைகளுக்காக ஒருவரும் (கணவனும்), வாடகை கொடுப்பதற்காக இன்னொருவரும் (மனைவியும்) வேலைக்கு செல்ல வேண்டிய நிலை பல குடும்பங்களில் இருக்கின்றன. சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்றால் அங்கு வேலைவாய்ப்பு என்பதே இல்லை. இதனால் வேறுவழியின்றி சென்னையில் பல நடுத்தர வர்க்கங்கள் கௌரவத்துக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். போதிய வருவாய் இல்லாததால் கடன் சுமையிலும் பல குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றன.


வாடகை வீடுகளின் பிரச்னை இது என்றால் பெண்களுக்கான தனியார் விடுதிகளில் நிலைமை பரிதாபம். முன்பதிவு ரயில் பெட்டிகளில் இருப்பதை போல அடுக்கடுக்காக படுக்கைகள் (பெட்) ஒரே அறையில் ஏற்படுத்தப்பட்டு அதில் தங்க வேண்டியதுள்ளது. அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை பசிக்காக சாப்பிட்டு வாழ்நாளை பலர் கடத்தி வருகின்றனர். தனியாக வீடு எடுத்து தங்கினால் பாதுகாப்பில்லை என்பதற்காகவே பல பெண்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

வாடகைத்தாரருக்காக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா கூறுகையில், "வீடுகளை வாடகைக்கு விடப்படும் போது 11 மாதங்கள் மட்டுமே அக்ரிமென்ட் போட முடியும். ஒப்பந்தத்தில் அடிப்படை உரிமைகள் மீறாமல் இருக்க வேண்டும். ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்க கூடாது. மூன்று மாத காலஅவகாசம் வீட்டின் உரிமையாளர், வாடகைதாரர் கொடுக்க வேண்டும். மின்வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது. இதை மீறும் வீட்டின் உரிமையாளரை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி பெறலாம்" என்றார்.



உத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்

பல தடைகளை மீறி உத்தம வில்லன் படம் வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் கதை, திரைக்கதை எழுத , கமல், கே பாலசந்தர், ஆண்ட்ரியா, ஊர்வசி, பூஜா குமார், பார்வதி, கே.விஸ்வநாத், ஜெயராம், நாசர், என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தம வில்லன்’.
படத்திற்கு இசை ஜிப்ரான். ‘வாகை சூடவா’ படத்தின் சர சர பாடல் கேட்டு ஜிப்ரானின் இசை பிடித்துப் போக ‘விஸ்வரூபம், ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, மற்றும் ’விஸ்வரூபம் 2’ என தொடர்ந்து கமல் படங்களில் ஜிப்ரானின் இசை இடம்பிடித்து வருகிறது. இதை ஆண்ட்ரியாவே ’உத்தம வில்லன்’ இசை வெளியீட்டு விழாவில் பதிவு செய்தார்.
2013ம் ஆண்டு லிங்குசாமியிடம் மூன்று கதைகளை சொன்ன கமல் கடைசியாக பல சந்திப்புகளை அடுத்து இந்த படம் உருவானது. மேலும் இதில்  லிங்குசாமி ஓகே சொன்னது வேறு கதை என்பதுதான் சுவரஸ்யம்.

முதலில் இப்படத்தை இயக்க பரிந்துரைக்கப்பட்டவர் ராஜேஷ். பின்னரே அது ரமேஷ் அரவிந்த் கைக்கு சென்றது. இதே பாணியில் இப்படத்தின் இசைக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் யுவன் ஷங்கர் ராஜா. பின்னரே ஜிப்ரான் வசம் சென்றது.கௌதமி காஸ்டியூம் டிசைனராக இந்த படத்தில் பொருப்பேற்றார். விஜய் ஷங்கர் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.   பாலசந்தரிடம் அடுத்து கதை சொல்லப்பட்டு படத்தில் ஒரு ரோல் நடித்தாக வேண்டும் என கமல் கூற நான் பாதியிலேயே போயிட்டா என்னடா பண்ணுவ என அப்போதே கேட்டுள்ளார் பாலச்சந்தர். மேலும் பல நிகழ்ச்சிகளில் எப்படா படத்தை ரிலீஸ் செய்யப்போற என கே.பி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல கமல் படமென்றாலே பிரச்னைகள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கும்   இந்து மகா சபா, மற்றும் இஸ்லாமிய கட்சிகள் என இரண்டும் ஒன்று சேர்ந்து பிரச்னைகள் கொடுத்தன. எனினும் சென்சார் குழு சான்றிதழ் கொடுத்த பின்னர் எந்த காரணத்திற்காகவும் படத்தின் சீன்களை கத்தரிக்க இயலாது என் திட்டவட்டமாக கூறினார் கமல். அதன்படி படமும் தற்போது மே 1ம் தேதி வெளியாக உள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு மனுவும் தள்ளுபடியாகியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்திற்கு இரண்டு இல்லாமல் மூன்று டிரெய்லர்கள் வெளியானது இந்த படத்திற்குத்தான். அதே போல் பாடல்களை ஆராய்ந்து பட்டிமன்றம் நடத்தியதும் இந்த படத்திற்குத்தான். மொத்தம் 17 ட்ராக்குகள் அதில் 8 பாடல்கள் , மற்றவை கரோக்கிகளாகவும், இசை வடிவிலும் உள்ளன. இதில் பிரச்னை வந்த பாடல் .இரணிய நாடகம் என்ற பாடலுக்குத்தான்.
‘உத்தம வில்லன்’ என்ற தலைப்பு லோகோ வில்லுப்பாட்டு இசையை கண்முன் கொண்டுவரும். பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கமல் டாப் ஹீரோவாகவும், மற்றவர் 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும் என இரு வேடங்களில் வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 50 கோடி.படத்தின் நீளம் 2 மணிநேரம் 53 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியாகும் படங்களொடு ஒப்பிடுகையில் இப்படத்தின் நீளம் சற்று அதிகம் தான்.

சமீப காலமாக ஸ்டுடியோ கிரீன் பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். கடந்த 1ம் ம் தேதி தங்களது சொந்த தயாரிப்பான ‘கொம்பன்’ படத்தை வெளியிட்டனர். அடுத்ததாக மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தையும் ஏப்-17ல் ரிலீஸ் செய்தனர் தற்போது கமலின் உத்தம வில்லன் படத்தையும் வரும் மே-1ம் தேதி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் வெளியிடுகிறது. இதே நாளில் ‘வை ராஜா வை’ படத்தையும் இவர்கள் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. எனினும் 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்திற்கு பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 


28 Apr 2015

நெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய்!

ந்தியா முழுவதும் எதிர்ப்பையும், விவாதத்தையும் உண்டாக்கிய நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையதள சமவாய்ப்பு தொடர்பாக, இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்களை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்களுடன் அதை பகிர்ந்து கொண்டவர்களின் இ-மெயில் முகவரிகளும் வெளியிடப்பட்டது சர்ச்சைக்கு இலக்காகி உள்ளது.

இணையத்த்தில் எந்த ஒரு தளத்தையும் அல்லது சேவையையும் பாரபட்சமாக நடத்தாமல் இருப்பதற்கு வழி செய்யும் நெட் நியூட்ராலிட்டி எனும் இணையதள சமவாய்ப்பு தொடர்பாக டிராய் அமைப்பு, தொடர்புடைய அனைவரின் கருத்துக்களையும் கேட்டிருந்தது. இணைய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இணையவாசிகளும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இணையதள சமவாய்ப்பு தொடர்பான விவாதம் எழுந்தது. இணைய சமநிலை இல்லாவிட்டால் இணைய சேவை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உண்டாகும் என்றும், இணையவாசிகள் தஙகளுக்கு விருப்பமான இணையதளங்களை பார்க்கும் உரிமை பறிபோகும் என்றும் இணைய வல்லுனர்கள் எச்சரித்தனர்.

எனவே இணைய சமநிலைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு, இது மாபெரும் இணைய இயக்கமாகவும் உருவானது. இது தொடர்பாக எளிதாக கருத்து தெரிவிக்க சேவ்தி இண்டெர்நெட் எனும் இணையதளத்தில் வழி செய்யப்பட்டிருந்தது. இந்த இணையதளம் மூலம் லட்சக்கணக்கான இணையவாசிகள் மெயில் மூலம் கருத்துக்களை அனுப்பி வைத்தனர்.

கருத்து தெரிவிக்க கெடு விதிக்கப்பட்ட 24-ம் தேதிக்குள் பத்து லட்சம் மெயில்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இணையவாசிகளின் கருத்துக்கள், இணைய சேவை நிறுவனங்களின் கருத்துக்கள் உள்ளிட்டவற்றை பரிசீலித்த பின், டிராய் தனது பரிந்துரையை தொலைத்தொடர்பு துறையிடம் வழங்க உள்ளது.

இந்நிலையில், இதுவரை இணையதள சமவாய்ப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை டிராய் அமைப்பு, தனது இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்கள் 3வது பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்துக்களுக்கு பதில் கருத்து தெரிவிக்கலாம் என்றும், மே 8-ம் தேதி வரை இதற்கான அவகாசம் உண்டு என்றும் டிராய் தெரிவித்துள்ளது. பதில் கருத்துக்கள் பெறப்பட்ட பின் டிராய் தனது பரிந்துரையை இறுதி செய்ய உள்ளது.

இணையதள சமவாய்ப்பு தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இந்த கருத்துக்களுடன், அதை பகிர்ந்து கொண்டவர்களின் இ-மெயில் முகவரிகளும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான இணையவாசிகளின் இ-மெயில் முகவரிகளை பொதுவெளியில் வெளியிட்டதன் மூலம், அவர்கள் முகவரிகள் விளம்பர நிறுவனங்கள் கையில் கிடைக்க வழி செய்யப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் இணையவாசிகள், குப்பை மெயில்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட இணைய நிறுவன சேவை நிறுவனத்திற்கு எதிராக இவ்விவகாரத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தது, அந்த நிறுவனத்தின் சேவையையே ஒருவர் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவரது இமெயில் முகவரி மூலம் அவர் யார் என்பதை அறிந்து அந்த நபருக்கான இணைய சேவையை அந்த நிறுவனம் துண்டிக்க வாய்ப்பு உள்ளது. 

கருத்துக்களை வெளியிட்டவரின் பெயரை குறிப்பிட்டதில் தவறில்லை என்றாலும், அவர்களின் இ-மெயில் முகவரி அடையாளம் தெரியாமல் மறைத்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரிலும் பலர் தங்கள் டிராயின் இந்த பொறுப்பற்ற தன்மை குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.



நிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்கள்!

நேபாளத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து,  இந்தியாவின் முக்கிய 38 நகரங்களில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நிகழ்ந்த நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 200 ஐ தாண்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் நில அதிர்வுகள் இன்றும் அங்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நேற்றிரவு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. 
ரிக்டர் அளவு கோலில் 7.5 புள்ளிகளாக பதிவான இந்த பூகம்பத்தால் பயங்கர உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தை குறி வைத்த இந்த நிலநடுக்கம் இந்தியா முழுவதும் உணரப்பட்டது. இதிலிருந்து  நேபாள பூகம்பத்தின் சக்தியை உணர்ந்து கொள்ளலாம். இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இந்த  நிலநடுக்கம் காரணமாக 62 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தை ஒட்டிய பீகார் மாநிலத்தில் அதிக உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்தில்,பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் உறவினர்களையும்  இழந்துள்ளனர்.சர்வதேச நாடுகளின் உதவிக்கு நேபாளம் தள்ளப்பட்டுள்ளது.இந்த பாதிப்பிலிருந்து அந்நாடு மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் வட மாநிலங்களில் 38 நகரங்கள் நிலநடுக்க ஆபத்தில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் அருகே உள்ள மாநிலங்களுக்கு கடுமையான ஆபத்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருபதாயிரம் பேர் பலி ஆயினர். அதே போல 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, பல்லாயிரக் கணக்கானோர் உயிரி ழந்தனர். அதன் பிறகு மிக லேசாக இந்தியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் தற்போது நேபாளத்தில் பலமாக ஏற்பட்டு மனித உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் 38 நகரங்கள் நிலநடுக்கம் ஆபத்து அதிகம் உள்ள நகரங்களாக இருப்பதாக மத்திய அரசு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக  டெல்லி, கௌஹாத்தி, ஸ்ரீநகர், மும்பை, சென்னை, கொல்கொத்தா உள்ளிட்ட மாநகரங்களிலும், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நகரங்களில் உள்ள கட்டடங்களில் பெரும்பாலானவை நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டதாக இல்லை என்று கடந்த 2006 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்திற்காக ஐ.நா. சபை தயாரித்து அளித்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
 



நேபாளம் நிலநடுக்கம் ஏன்? அதிர வைக்கும் தகவல்கள்!

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்க மானியினால் (செசிஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது.
 

3 ரிக்டருக்கும் குறைவான நில நடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதே வேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் சேதத்தை ஏற்படுத்தும். பூமியின் மேற்பரப்பு (லித்தோஸ்பியர்) பெரும் பாளங்களாக அமைந்துள்ளன. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலும் உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்த பிளேட்டுகள் சுமார் 80 கி.மீட்டர் வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதன் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.

இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீட்டர் முதல் சுமார் 13 செ.மீட்டர் வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சில சமயம் எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்க செய்யும். ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை எதுவுமில்லை என்றாலும் வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள் 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். இத்தகைய நிலநடுக்கமானது அண்மையில் 2011ம் ஆண்டு சென்டாய், ஜப்பானில் நிகழ்ந்தது. பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் ஜப்பானில் பதிவான வலுவான நிலநடுக்கம் இதுவாகும். ஆழமற்ற நிலநடுக்கங்களே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும்.

ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி பிளேட்டுகளில் அமைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி, ஆசிய பிளேட்டில் இல்லாமல் தனி பிளேட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது.

மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்வதால், இந்திய பிளேட் ஆசிய பிளேட்டுடன் மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இதுதான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும், ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது யூரேசியா என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால்தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

நிலநடுக்க வகைகள்

நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பனவே அவையாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றவை கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலேயாகும். புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிக்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிக்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும்.

ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பூகம்பங்கள் பசிபிக் சமுத்திரத்தை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன. நிலநடுக்கத்தின் வீரியத்தை நிலநடுக்கப் பதிவுக் கருவி மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும். 2010ல் ஏற்பட்ட ஹெய்ட்டி பூகம்பத்தால் அழிவடைந்த கட்டடங்கள். இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது.

நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் நிலம் மற்றும் பனிப்பாறைகளின் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம். நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பெரிய தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும்.

ஆழிப்பேரலை


நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும். பொதுவாக 7.5 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004ல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கினதாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.

நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும்


சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மற்றும் அலாஸ்கா, மெக்சிக்கோ, குவாத்தமாலா, சிலி, பெரு, இந்தோனேசியா, ஈரான், பாகிஸ்தான், போர்ச்சுக்கல்லின் சில பகுதிகள், துருக்கி, நியூசிலாந்து, கிரேக்கம், இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் நியூயார்க் நகரம், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா என உலகில் எங்கும் ஏற்படலாம்.

90 சதவிகிதம் முதல் 81 சதவிகிதம் வரையான பெரிய நிலநடுக்கங்கள் அடிக்கடி பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள எரிமலை வளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளன. இமய மலையின் அடிவாரத்திலும் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலநடுக்க பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மெக்சிகோ நகரம், தோக்கியோ மற்றும் தெஹ்ரான் போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளி பதிவாகியது. இது அந்த நாட்டையே புரட்டிப்போட்டது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி, கோடிக்கணக்கில் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வால் சாலைகள், வீடுகள், கோயில்களை சிதைத்து இயற்கை கோர தாண்டவம் ஆடியுள்ளது. 
 

இது குறித்து இங்கிலாந்தின் ஓபன் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர் டேவிட் ரோத்ரி கூறுகையில், "இமயமலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பே, பல விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த அளவிற்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்படுவதற்கு மத்திய ஆசியாவில் உள்ள இந்திய-யுரேசிய தட்டுகள் (டெக்டானிக் பிளேட்) ஒன்றோடொன்று மோதுவதே காரணமாகும். நேபாளத்தில் உள்ள செயல்திறன் வாய்ந்த தட்டுகளில் நிலஅதிர்வு ஏற்படுவதற்கு வரலாற்று ரீதியான பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதிலும், ஆண்டுக்கு 45 செ.மீட்டர் அளவுக்கு பூமியின் இரு அடுக்குகள் மனிதர்கள் உணரமுடியா நிலையில் இப்பகுதியில் நகர்கின்றன.

எவரெஸ்ட் சிகரத்தில் இருக்கும் சிறிய குன்றுகளில் நிலஅதிர்வுக்கு இன்னும் அதிக வாய்ப்புகளும், அவ்வாறு நில அதிர்வு ஏற்படும் போது, கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. இந்திய தட்டுகளில் இமயமலைப்பகுதி தட்டுகள் மிகவும் செயல்திறன் உடையவை. அதிலும் 2 அல்லது 3க்கும் மேற்பட்ட செயல்திறன் வாய்ந்த அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகள் நகரும் போது, இதுபோல கடுமையாக நில அதிர்வுகள் ஏற்படும்.

மேலும், இமயமலைப்பகுதியில் வெளிஉலகம் உணரமுடியா அளவிற்கு அவ்வப்போது, பூமிக்குள்ளே சிறுசிறு நிலஅதிர்வுகள் ஏற்படும். அதில் ஏற்படும் சக்திகள் ஒன்றாக திரட்டப்பட்டு, இதுபோன்ற நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக ஏற்படக்கூடும். இதற்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கணிப்பின்படி, ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளி வரை ஏற்படவாய்ப்பு இருந்துள்ளது. இது போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் முதலில் உயிர்சேதம் குறைவாக இருப்பதாக தெரியும், ஆனால், படிப்படியாக உயரும்" என்றார்.

இமயமலைப்பகுதியில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில், அதிக அளவு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர் 

இதற்கு முன் நடந்த விபத்துக்களில் சில...

கடந்த 1905ல் ஏற்பட்ட கங்கரா நிலஅதிர்வு, ரிக்டர் அளவு கோலில் 7.5 பதிவானது. 1934ல் பீகாரில் ஏற்பட்ட நில அதிர்வு 8.1 ரிக்டர் அளவு பதிவானது. 2005ல் காஷ்மீர் நில அதிர்வு. இதில் 7.6 ரிக்டர் அளவு பதிவானது. இதில் கடைசியாக நிகழ்ந்த இரு நிலஅதிர்வுகளால் ஒரு லட்சம் மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கில் மக்கள் வீடுகள், உடமைகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் நியமனமும்!

ந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், இன்று டெல்லி உச்சநீதி மன்றம் பரபரப்பு உத்தரவை வழங்கியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் முழுக்க முழுக்க ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.எனவே, இந்த மேல்முறையீட்டை மீண்டும் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது,.
 


உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் அளித்த தீர்ப்பிலும் இதையே தெரிவித்திருந்தார். ஆனால், கால தாமதத்தை தவிர்க்கும் நோக்குடன் இவ்வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது. இந்த உத்தரவு தமிழகம் மட்டுமில்லாது இந்திய அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பவானி சிங் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது ஏன்? அவரது நியமனத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் உண்டாகியுள்ளது என்பது குறித்தும் பவானி சிங் இந்த வழக்கில் கொண்டிருக்கும் தொடர்பையும் அறிவது அவசியமாகிறது. 

ஜெயலலிதா முதன் முறையாக கடந்த 1996 ஜூன்  முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் தமிழக முதல்வராக   பதவி வகித்த காலத்தில்,  ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.பின்னர் நடந்தவை: 

1996 ஜூன் 27- விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு நீதிபதி உத்தரவு.

1996 ஆக.14- விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதா சென்னை ஹைகோர்ட்டில் மனு.

1996 செப்.7- வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமனம்.
1996 செப்.18- ஜெயலலிதா மீது வழக்குபதிவு.

1996 செப்.19- ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி வீடுகளில் போலீசார் சோதனை.

1996 டிச.7- ஜெயலலிதா கைது, ஊழல் வழக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. 

ஜெயலலிதா வீட்டில் 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்புகள், 214 சூட்கேஸ்கள், 26 கிலோ தங்கம் வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு. தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்ததாக ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு.

1997 ஜனவரி 3 ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை; வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைப்பு, விசாரணை தொடக்கம்.

1997 ஜூன் 4 ஊழல் தடுப்பு சட்டம் 1988, இந்திய தண்டனைச் சட்டம் 120-பி, 13(2), 13(1) (இ) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல். 

1997 அக்.1- சொத்து குவிப்பு வழக்கு தொடர அனுமதித்த கவர்னர் பாத்திமா பீவியின் உத்தரவுக்கு எதிரான மனு உள்ளிட்ட 3 மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி. 

1999 நவம்பர் 19 ஆம் தேதி முதல் 2001 ஜூலை 18 ஆம்  தேதி முடிய விசாரணை, 259 சாட்சியங்கள் பதிவு, வாக்குமூலம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை.

2001 மே.15 தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி. முதல்வராக ஜெயலலிதா தேர்வு. டான்சி வழக்கில் 2000 ஆம்  ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக்  காரணம் காட்டி அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு. 

ஜெயலலிதா முதல்வராக  நியமனம் செய்யப்பட்டது, செல்லாது என உச்ச நீதிமன்றம்  அறிவிப்பு. 

2001 செப்.21 உச்ச நீதிமன்றம்   உத்தரவை ஏற்று முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகல்.

2002 பிப் 21- டான்சி வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி.
2002 மார்ச் 2- தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்பு.
அரசு வக்கீல்கள் 3 பேர் பதவி விலகல். அதைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சென்னை தனி கோர்ட்டில் 79 சாட்சிகளிடம் மறு விசாரணை. அரசு தரப்பு சாட்சிகள் சிலர் பிறழ்சாட்சி. 


2003 ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றதால் வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்றகோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில்  மனு.


2003 நவ. 18  சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம்   உத்தரவு.

2003 டிச.27 ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூரில் தனி கோர்ட்டு அமைப்பு, ஏ.எஸ்.புச்சாபுரே நீதிபதியாக நியமனம். 

2005 பிப். 19 பி.வி.ஆச்சார்யா அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமனம்.

2005 மே 9- லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றை ஒன்றாக விசாரிக்க கோரி ஜெயலலிதா மனு. ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்பு.

2005 ஜூலை 14- லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கை ஒன்றாக விசாரிக்க கூடாது என கோரி க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ். 

2010 - தமிழில் இருந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு, வழக்கு ஆவணங்கள் 88 ஆயிரம் பக்கங்கள், குற்றப்பத்திரிகை 13 ஆயிரத்து 600 பக்கங்கள். 252 அரசு தரப்பு சாட்சிகள், 99 எதிர்த் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு.

2011 - குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறக்கோரி அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா மனு.

2011 அக். 20, 21- ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம்.

2011 நவ. 21, 22- மீண்டும் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம், தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி வாக்குமூலம்.

2012 அக். 12- அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பதவி ராஜினாமா. 

2013 பிப்.2 - அரசு சிறப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம்.

2013 ஆக. 13- அரசு தரப்புடன் தி.மு.க. விடுத்த கோரிக்கையை நீதிபதி 
பாலகிருஷ்ணா ஏற்பு.

2013 ஆக. 23- குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கும்படி தி.மு.க. கர்நாடக உயர்நீதி மன்றத்தில்  மனு.

2013 ஆக. 26- அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவு. நீக்கத்தை எதிர்த்து பவானி சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

2013 செப்.30  பவானி சிங்கை நீக்கிய கர்நாடக அரசின் உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் ரத்து. தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் 25 நாட்கள் இறுதி வாதம். 

சசிகலா வக்கீல் மணிசங்கர் 9 நாட்கள்,

சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பு வக்கீல் அமித் தேசாய் 8 நாட்கள் இறுதி வாதம். 

தொடர்ந்து பவானி சிங் 15 நாட்கள் இறுதி வாதம்.

2014 ஆக.28- சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம்  தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவிப்பு. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராக உத்தரவு.

2014 செப். 16- சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் தேதி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அறிவிப்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தனி கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவு.

2014 செப்.27- சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு.

பின்னர் நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பால் ஜெயலலிதா சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டனர்.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் மேல்முறையீடு மனு செய்தது ஜெயலலிதா தரப்பு.அதில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து அது தொடர்பான வழக்கு தீவிரமடைந்தது.

இந்நிலையில், உச்ச நீதி மன்றம் பவானி சிங் நியமிக்கப்பட்டது  குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. ‘‘ பவானிசிங்கின் நியமனம் சட்டவிரோதமானது; வழக்கை திசை திருப்பும் நோக்கம் கொண்டது. இவ்வழக்கில் அவசர அவசரமாக பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக கர்நாடக அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் இல்லாத குழப்பமான சூழ்நிலையைத்  தமிழக அரசு அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பவானிசிங்கை நியமித்தது மிகவும் துரதிருஷ்டவசமானது’’ என்று கூறி இருக்கிறது.


அதே நேரத்தில் தமிழக எதிர்க் கட்சிகள், பவானிசிங் நியமனத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்காக அவரது வழிகாட்டுதலில் நடைபெறும் அரசே அரசு வழக்கறிஞரை நியமித்தது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இதற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது சட்டத்தை வளைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதியும்,நீதி நிலைக்க வேண்டும். இன்றைக்குக் கிடைத்த தீர்ப்பை நேர்மைக்கும், நியாயத் திற்கும் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்னொரு பாய்ச்சலுக்குச்  சென்றுள்ளது.