பணம் காய்க்கும் மரமா பொதுமக்கள்?
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று மீண்டும் உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியதன் மூலம் உலக சந்தையில் எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வரும் நிலையில் அதன் பயன்களை மக்களுக்கு அளிப்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்க வில்லை. அதுமட்டுமின்றி, அவ்வப்போது கலால் வரியை உயர்த்துவதன் மூலம், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் மத்திய அரசு தடுத்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் நேற்று முதல் பெட்ரோல் விலை 3.22 ரூபாயும், டீசல் விலை 3.00 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை குறைக்காத மத்திய அரசு இரு எரிபொருட்களின் மீதான கலால் வரியையும் தலா ரூ.2 உயர்த்தியுள்ளது. கடந்த 50 நாட்களில் கலால் வரி உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு 3.75 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டது. கலால் வரி உயர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கும் மேல் குறைக்க முடியும் என்ற போதிலும் அதை செய்யாமல் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் குவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110.42 அமெரிக்க டாலராக ( ரூ.6636) இருந்தது. நேற்றைய நிலவரப்படி அதில் பாதிக்கும் குறைவாக, அதாவது 53.53 அமெரிக்க டாலராக (ரூ.3390) குறைந்திருக்கிறது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.93 ஆகவும், டீசல் விலை ரூ.61.12 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்து விட்டதால் பெட்ரோல் விலை ரூ.38 ஆகவும், டீசல் விலை ரூ.30 ஆகவும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இரு எரிபொருட்களையுமே அவற்றின் இயல்பான விலையை விட லிட்டருக்கு ரூ.25 அதிக விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது. இதுதான் மக்கள் நலன் விரும்பும் மத்திய அரசுக்கு அழகா?
எரிபொருட்கள்
மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 68,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். மறைமுகமான விலை உயர்வுகளையும் கருத்தில் கொண்டால், மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தனியார் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 3 லட்சம் கோடி வரை கூடுதலாக லாபம் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதை செய்யாமல் ரூ. 3 லட்சம் கோடி லாபம் ஈட்ட மத்திய அரசு துடிக்கிறது. மக்களை பணம் காய்க்கும் மரமாக கருதி அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயல்வது சரியல்ல.
எனவே, பெட்ரோல், டீசல் மீது தேவையில்லாமல் வரிகளை சுமத்தி மக்களை வதைப்பதை தவிர்க்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 25 குறைக்க வேண்டும்.
No comments:
Post a Comment