சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jan 2015

சவால் விடுக்கும் கெஜ்ரிவால்...நழுவும் கிரண்பேடி!


டெல்லி சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. அனல் பறக்கும் பிரச்சாரம் டெல்லி நகர  வீதிகளில் மட்டும் அல்ல, இணையத்தில் சமூக ஊடகங்களிலும் எதிரொலிக்கிறது. முன்னணி வேட்பாளர்கள் வாக்காளர்களை சென்றடைய மட்டும் அல்லாமல் , பரஸ்பரம் சவால்விடவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது முன்னாள் சகாவும் எதிர்கட்சியான பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான கிரண் பேடிக்கு டிவிட்டர் மூலம் சவால் விடுத்துள்ளார்.
கெஜ்ரிவால்- கிரண் பேடி இடையிலான சவால் டிவிட்டர் உலகில் பரபரப்பான விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, டிவிட்டரில் தான் பின் தொடர அனுமதிக்குமாறும் கேட்டிருக்கிறார். இது டிவிட்டர் உலகில் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலும் , கிரண் பேடியும் அன்னா ஹசாரேவில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர்கள். அதன் பிறகு கருத்து வேறுபாடால் பிரிந்து விலகி விட்டனர். கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து டெல்லி முதல்வராகி, ராஜினாமா செய்து இப்போது மீண்டும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார். 

கெஜ்ரிவால் செயல்படும் வித்ததை விமர்சித்து வந்த கிரண் பேடி, இப்போது பாஜகவில் சேர்ந்து அதன் முதல்வர்  வேட்பாளாராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் நாற்காலிக்கான போட்டியில் தனக்கு எதிராக கிரண் பேடி வந்து நிற்கும் நிலையில், கெஜ்ரிவால் அவரை டிவிட்டரில் சவாலுக்கு அழைத்திருக்கிறார்.

கெஜ்ரிவால் மற்ற விஷயங்களில் எப்படியோ,விவாத களத்தில் மனிதர் தீவிரமாக இருப்பவர். மக்களவை தேர்தலின் போதே , வராணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டு தன்னோடு போது விவாதத்திற்கு தயாராஎன சவால் விடுத்தார்.
இப்போது கிரண் பேடிக்கு எதிராகவும் இதே போல சவால் விடுத்திருக்கிறார்.

கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், கிரண் பேடிக்கு முதல்வர் வேட்பாளரானதற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, என்னோடு பொது விவாத்ததிற்கு தயாரா? என்றும் கேட்டிருந்தார். மூன்றாவது நபர் ஒருவர் நடுவராக இருக்கட்டும், டிவியில் நேரடி விவாதமாக இதை நடத்தலாம் என கூறியிருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்த சவால் டிவிட்டரில் 3 ஆயிரக்கணக்கானோரால் ரிடிவீட் செய்யப்பட்டது. ஆனாலும் கூட கிரண் பேடி நேரடியாக பதில் சொல்லவில்லை. என்ன சிக்கல் என்றால், டிவிட்டரில் கெஜ்ரிவால் விடுத்த சவாலை அவர் நேரடியாக பார்க்கவில்லை என்பதுதான். ஏனெனில் , டிவிட்டரில் கெஜ்ரிவால் தன்னை பின் தொடர முடியாதபடி அவரை கிரண் பேடி பிளாக் செய்து வைத்திருக்கிறார்.

எனினும் கெஜ்ரிவால் அப்படியும் சளைக்காமல், கிரண் அவர்களே உங்களை நான் டிவிட்டரில் பாலோ செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை பிளாக் செய்து விட்டீர்கள். தயவு செய்து என்னை அன்பிளாக் செய்யுங்கள்என்று அவர் டிவிட்டர் மூலமே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பலரும் இந்த குறும்பதிவை சுட்டிக்காட்டி கிரண் பேடியை விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பான ஹாஷ்டேகும் டிவிட்டரில் பிரபலமாகி இருக்கிறது.

ஆனால் கிரண் பேடி, நாம் சட்டமன்றத்தில் விவாதிப்போம் என்று புத்திசாலித்தனமாக பதில் அளித்திருக்கிறார். கெஜ்ரிவால் வெறும் விவாதங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளவர் என்று கூறியுள்ள கிரண்பேடி, எதிர்மறையான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வந்ததால்தான் கெஜ்ரிவாலை டிவிட்டரில் பிளாக் செய்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
இதே காரணத்திற்காக மற்ற சிலரையும் பிளாக் செய்திருப்பதாக கூறியுள்ளார். எது எப்படியோ இப்போது கிரண் பேடி பிரசாரத்தில் தீவிரமாக இருக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்வது உட்பட அனைத்தையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

கெஜ்ரிவாலும் அதே போல தனது பிரச்சார விவரங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய குடும்பத்தினருடன் செல்வது பற்றி குறிப்பிட்டிருந்த கெஜ்ரிவால், அரசு ஊழியர் என்பதால் மனைவி உடன்வர முடியவில்லை என்றும் ஏக்கம் தெரிவித்திருந்தார். அது மட்டும் அல்ல, கிரண் பேடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே, அவரை வரவேற்றும் குறும்பதிவிட்டிருந்தார்.
கிரண் பேடியை எப்போதும் நேசிக்கிறேன்.அரசியலில் சேருமாறு அவரை வற்புறுத்தியிருக்கிறேன். இப்போது வந்திருக்கிறார், வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

இதனிடையே கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கிரண் பேடி, பாஜக மற்றும் மோடியை விமர்சித்து வெளியிட்ட பழைய குறும்பதிவுகளை மீண்டும் டிவீட் செய்து அவரை கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆக, டெல்லி சட்டமன்ற தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய டிவிட்டரிலும் ஒரு கண் வைத்திருங்கள்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் டிவிட்டர் பக்கம்; https://twitter.com/ArvindKejriwal

கிரண் பேடியின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/thekiranbedi

No comments:

Post a Comment