''காதலுக்கு கண்
இல்லைன்னு சொல்வாங்க. எங்க
ரெண்டு பேருக்கும் கண்பார்வை இல்லை.
ஆனா, மனசு முழுக்க காதல் இருக்கு'' - பாபு எழில் குணாளன் பேசுவதைக் கேட்டபடி பரவசமாக அமர்ந்திருக்கிறார் அவரது காதல் மனைவி கற்பகவள்ளி. அருகில் விளையாடிக்கொண்டிருக்கிறான், அவர்களின் ஒரு வயது மகன் சிவ சர்வீன்.
''இன்னைக்கு இவனுக்குப் பிறந்த நாள். கோயிலுக்குப் போயிட்டு இப்பதான் வந்தோம். நீங்க வேற வர்றேன்னீங்களா... அதான் சேல்ஸுக்கு இன்னைக்குப் போகலை'' என்கிற குணாளன், ஆவடி டு சென்ட்ரல் மின்சார ரயிலில் பர்பியும் கடலைமிட்டாயும் விற்கிறார். பி.ஏ தமிழ் இலக்கியம் படித்தவர். இவரது மனைவி கற்பகவள்ளி, மாநிலக் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறார்.
இருவருக்கும் பார்வை இல்லை; கணவர் மின்சார ரயிலில் பர்பி விற்கிறார்; மனைவி கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார்; ஒரு துறுதுறு குழந்தையை வளர்க்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும்... கேட்கும்போதே மலைப்பாக இருக்கிறது. எப்படிச் சமாளிக்கின்றனர்?
திருநின்றவூரில் குடியிருக்கும் இவர்களை, ஒரு மதிய நேரத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் சந்தித்தேன். பேரன்பும் பெரும் சோகமும் நிரம்பியது இவர்களின் கதை. பேசத் தொடங்கினார் வள்ளி.
''திருச்சி டால்மியாபுரத்துலதான் எங்க வீடு. அம்மா, பால்வாடி டீச்சர்; அப்பா, டெய்லர். கொஞ்சம் வசதியான குடும்பம்தான். சின்ன வயசுல எந்தப் பிரச்னையும் இல்லை. ஏழு, எட்டாவது படிக்கும்போது எல்லாம் கண்களுக்கு முன்னாடி ஏதோ பனிப்படலம் மாதிரி வெள்ளையா மறைக்கும். டாக்டர்கிட்ட போனதுக்கு கண்ணாடி போடச் சொன்னாங்க. நான் அப்ப வெட்கப்பட்டுக்கிட்டுப் போடாம இருந்தேன். அப்படியே மெள்ள, மெள்ள பார்வை குறைய ஆரம்பிச்சது. என்னோட 20 வயசுல கிட்டத்தட்ட சுத்தமா கண் தெரியாமப்போச்சு. எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கின சொந்தக்காரங்க. சொந்தத்துக்குள்ளேயே மாத்தி மாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுனாலதான் எனக்கு இப்படி ஆகியிருச்சுனு டாக்டர் சொன்னார். அதுக்குப் பிறகு எத்தனையோ டாக்டர்கள் பார்த்தாச்சு. 'ரெட்டினாவுல பிரச்னை. சரிபண்ண முடியாது’னு சொல்லிட்டாங்க. இப்படியே வாழப் பழகிட்டேன்'' என்கிற வள்ளி, 10-ம் வகுப்பில் 400-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்.
''நல்லாப் படிப்பேன். பார்வை இல்லாமப்போனதும்தான் ரொம்பக் கஷ்டமாயிடுச்சு. 2009-ல் அம்மா இறந்துட்டாங்க. வீட்டுல மத்தவங்க இருந்தாலும் என் அம்மாதான் எனக்கு இருந்த ஒரே ஆதரவு. அதுக்குப் பிறகு என்னைக் கவனிச்சுக்க யாரும் இல்லை. அப்ப திருச்சி ரேடியோவுல 'பூவையர் பூங்கா’னு ஒரு நிகழ்ச்சி வரும். அதுல திருச்சி, மன்னார்புரத்துல இருக்கும் 'விழி இழந்தோர் மகளிர் மறுவாழ்வு மையம்’ பற்றி சொன்னாங்க. நான் அங்கே போய்ச் சேர்ந்தேன். அதுதான் இன்னைக்கு எனக்கு இன்னொரு தாய்வீடா இருக்கு. மேற்கொண்டு படிச்சது, தையல், வொயர் கூடை பின்னுறது எல்லாம் அங்கே கத்துக்கிட்டேன். அங்கதான் இவரையும் பார்த்தேன்'' - மகிழ்ச்சி மின்னச் சொல்கிறார் வள்ளி.
குணாளனுக்கும் திருச்சிதான் சொந்த ஊர். வசதியான குடும்பத்தில் பிறந்த ஐந்தாவது பிள்ளை.
''எங்க வீட்டுல எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்னை. நல்ல சூரிய வெளிச்சத்துல பார்த்தா, எதிர்ல இருக்குற உருவம் ஒரு புள்ளியாட்டம் அசையுறது தெரியும். ரயில் வருதுன்னா, ஒரு கோடு நகர்றதுபோல தெரியும். அதுக்குமேல எதுவும் தெரியாது. தஞ்சாவூர் மேம்பாலத்துக்குக் கீழே இருக்கும் பிளைண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். பிறகு, திருச்சி நேஷனல் காலேஜ்ல பி.ஏ தமிழ் இலக்கியம் படிச்சேன். ஆர்க்கெஸ்ட்ராவுக்குப் போவேன். சில இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாசிப்பேன். அப்படி வள்ளி படிச்ச மன்னார்புரம் ஹாஸ்ட்டலுக்கும் போனேன். அப்பதான் வள்ளி அறிமுகம் ஆச்சு. அந்த ஹாஸ்ட்டல்ல இருக்கும் நாலைஞ்சு பேரை எனக்குத் தெரியும். அவங்க மூலமா வள்ளியைப் பத்தி கேள்விப்பட்டு, ஒருகட்டத்தில் மனசுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஒருநாள் 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு கேட்டேன். வள்ளி பதிலே சொல்லலை. ஒரு வருஷம் அலையவிட்டு, அதுக்குப் பிறகுதான் சம்மதிச்சாங்க...'' என்கிறார்.
''அப்புறம் என்ன சார், நம்ம வாழ்க்கையே பெரிய கஷ்டத்துல இருக்கு. இதுல இவர் யார், எப்படிப்பட்டவர்னு எதுவுமே தெரியாது. எதை நம்பி இவரைக் கல்யாணம் பண்ணிக்கிறது? ஆனா, இவருக்காக பெரிய பெரிய ஆளுங்கல்லாம் ரெக்கமென்ட் பண்ணாங்க. கடைசியில எங்க ஹாஸ்ட்டல் மதர் சொன்ன பிறகுதான், ஓ.கே சொன்னேன்'' எனச் சிரிக்கிறார் வள்ளி. இருவரின் காதலும் இருவீட்டாராலும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை.
''எங்க வீட்டுல பிள்ளைமார் சாதி. இவர் எஸ்.சி. அதனால சாதியைக் காரணம்காட்டி எங்க வீட்டுல உள்ளவங்களுக்குப் பிடிக்கலை. இவர் வீட்டுல 'கண் தெரியுற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்’னு பிடிவாதம். அதனால, அவங்களும் சம்மதிக்கலை. ஆனா, நாங்க கல்யாணம் பண்ணிக்கிறதுல உறுதியா இருந்தோம். அப்பதான் எனக்கு சென்னை பிரசிடென்சி காலேஜ்ல பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்க ஸீட் கிடைச்சது. ரெண்டு பேரும் கிளம்பி சென்னைக்கு வந்தோம்'' - நம்பிக்கையின் சுடரைப் பற்றிக்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சென்னை வந்து இறங்கியபோது, வாழ்க்கைக்கான எந்த உத்தரவாதமும் இவர்களிடம் இல்லை. ஆனாலும் வந்தார்கள். ஒரு விடுதியில் தங்கி, கல்லூரிக்குச் சென்றுவந்தார் வள்ளி. இன்னொரு விடுதியில் தங்கிக்கொண்டு குணாளன், மின்சார ரயிலில் பர்பி விற்க ஆரம்பித்தார்.
''டெய்லி சேல்ஸுக்குக் கிளம்பிடுவேன். கிடைக்கிற காசுல எனக்கும் வள்ளிக்கும் செலவுபோக மீதிக் காசைச் சேர்த்துவைப்பேன். ஒரு வருஷம் கழிச்சு கையில கொஞ்சம் காசு சேர்ந்துச்சு. திருநின்றவூர்ல 2,000 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சோம். 2013-ல் சென்னையிலயே ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு வீட்டுக்கும் சொன்னோம். யாரும் வரலை. ஃப்ரெண்ட்ஸ் மட்டும் வந்திருந்தாங்க. அடுத்த வருஷமே ஒரு குழந்தை. பிரசவ சமயத்துலகூட உதவிக்கு யாரும் இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டோம். கடவுள் புண்ணியத்துல குழந்தை ஆரோக்கியமா இருக்கான். ஆனா, இந்த வாழ்க்கையை ஓட்டுறதுதான் ஒவ்வொரு நாளும் போராட்டமா இருக்கு'' என்கிறார் குணாளன்.
இப்போது கல்லூரியில் இறுதி செமஸ்டர் எழுதப்போகிறார் வள்ளி. ''வருகைப்பதிவு பத்தலைனு எக்ஸாம் எழுதவிட மாட்டாங்களோனு பயமா இருக்கு. தினசரி காலையில 4 மணிக்கு எழுந்திருப்பேன். குழந்தைக்கு பால் காய்ச்சி ஒரு பாத்திரத்துல வெச்சிருவேன். சுடுதண்ணீர், செரிலாக் எல்லாம் தயார் செஞ்சு தனிப் பாத்திரத்துல வெச்சிருவேன். எங்க ரெண்டு பேருக்கும் காலை, மதியத்துக்கு சாப்பாடு செஞ்சிருவேன். குளிச்சு ரெடியாகி 6.15 மணிக்குக் கிளம்புவேன். அப்போ குழந்தை தூங்கிக்கிட்டிருப்பான். டிரெயின்ல போனா, காலேஜுக்கு லேட்டாயிடும். ஆவடி வரைக்கும் ஒரு பஸ், அங்கேருந்து பீச் ரோட்டுக்கு இன்னொரு பஸ். 8.15-க்கு காலேஜ். பெரும்பாலும் போய்ச் சேர 9 மணி ஆயிடும். 1 மணிக்கு காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சேரகுறைஞ்சது 3 மணி ஆயிடும். நான் உள்ளே நுழைஞ்ச உடனேயே பிள்ளையை என்கிட்ட விட்டுட்டு, இவர் சேல்ஸுக்குக் கிளம்பிடுவார். திரும்பி வர நைட் 11 மணி, 11.30 மணி ஆயிடும்.
ஒவ்வொரு நாளும் இப்படித்தான் போகுது. என்ன பிரச்னைன்னா, பல நாள்ல டிராஃபிக்ல மாட்டி காலேஜுக்குப் போக ரொம்ப லேட்டாயிருது, இல்லேன்னா போகவே முடியலை. இடையில, ஒரு இடத்துல ஆட்டோவுக்கு தினசரி 40 ரூபாய் இருந்தா, நேரத்துக்குப் போயிடலாம். ஆனா, எங்க வருமானத்துக்கு எல்லா நாளும் ஆட்டோவுல போக முடியாது. இதைவிட, எங்களோட முக்கியப் பிரச்னை வீடுதான். திருநின்றவூர்ல குடியிருக்கிறதுதான் பெரிய பிரச்னை. சிட்டிக்கு உள்ளே குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு மாதிரி ஏதாவது ஒரு இடத்துல வீடு குடுத்தாங்கன்னா, நாங்க எப்படியும் உழைச்சுப் பிழைச்சுக்குவோம். அது ஒண்ணு மட்டும் எங்களுக்கு இருந்துட்டா போதும்'' என்கிறார் வள்ளி.
இப்போதைக்கு குணாளனின் வருமானத்தை நம்பிதான் இவர்கள் வாழ்கிறார்கள். ''குழந்தையை வெச்சுக்க வேண்டியிருக்கிறதால தினசரி மதியத்துக்கு மேலேதான் சேல்ஸுக்குக் கிளம்ப முடியும். நைட் 11 மணி வரைக்கும் சேல்ஸ் பார்த்தா, 250 ரூபாய் லாபம் வரும். வீட்டு வாடகை 2,500, அரிசி 1,000 ரூபாய், மளிகைப் பொருள் 1,500 ரூபாய்... அப்படி, இப்படின்னு செலவு சமாளிக்க முடியலை. குழந்தைக்கு உடம்பு சரியில்லாமப்போச்சுனா, சேல்ஸுக்கும் போக முடியாது. டாக்டர் செலவு வேற. வள்ளிக்கு காலேஜ்ல பரீட்சை இருந்தா, அன்னைக்கும் சேல்ஸுக்குப் போக முடியாது. கஷ்டமாதான் இருக்கு. கந்துவட்டிக்கு எல்லாம் கடன் வாங்கியிருக்கேன். என்ன பண்றது? நான் போன வருஷம் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 எக்ஸாம் பாஸ் பண்ணிட்டேன். ஆனா, என்னோட மொத்த சர்ட்டிஃபிகேட்ஸும் மார்க்ஷீட்டும் காணாமப்போயிருச்சு'' என்கிறார் குணாளன்.
இப்போது இவர்களுக்குப் பெரிய செலவாக இருப்பது குழந்தைக்கான டயப்பர் வாங்குவதுதான். பார்வை இல்லை என்பதாலும், குணாளன் மட்டும்தான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார் என்பதாலும், எப்போதும் டயாப்பர் போட்டு வைத்திருக்கவேண்டிய சூழல்.
''இப்ப நாலஞ்சு மாசமா ஒரு சார் குழந்தைக்கு டயப்பரும் செரிலாக்கும் வாங்கித் தர்றார். சீக்கிரமே நான் காலேஜ் முடிச்சிருவேன். அதுக்குப் பிறகு இவரால முழுநேரம் சேல்ஸுக்குப் போக முடியும். ஏதாவது ஒரு ஆபீஸ் வேலை கிடைச்சதுன்னா, பிள்ளையை வளர்த்துக்கிட்டு ஒரே இடத்துல நிம்மதியா இருப்போம். நாங்க பரிதாபத்தை எதிர்பார்க்கலை. உழைச்சு வாழ ஒரு வாய்ப்பு கிடைச்சாப் போதும்'' - நம்பிக்கையுடன் பேசுகிறார் வள்ளி.ஆவடி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் இருந்து சென்ட்ரல் நோக்கி கிளம்பிய ரயிலில் நாங்கள் ஏறினோம். அடுத்த நாள் வியாபாரத்துக்கு பர்பி வாங்குவதற்காக குணாளனும் வள்ளியும் அதே ரயிலில் வந்தார்கள். துறுதுறுவென ஓடத் துடிக்கும் சின்னஞ்சிறு குழந்தையை இழுத்துப் பிடித்தபடி, அவன் வாயில் எதையும் எடுத்துவைத்துவிடாமல் இருக்க, வாயின் அருகே ஒரு கையை வைத்துக்கொண்டு வள்ளி அமர்ந்திருக்க... அம்மாவின் விரல்களை, பால்பற்களால் கடித்துச் சிரிக்கிறான் அந்தக் குட்டிப் பையன். மகனின் அழகை, குறும்பை மழலைக் குரல் வழியே ரசிக்கிறார் அம்மா.
இந்த மகிழ்ச்சியின் தருணங்கள் இவர்களுக்கு என்றென்றைக்குமாக நிலைத்திருக்க... உங்களால் முடிந்தால், உதவுங்களேன்!
No comments:
Post a Comment