சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

ஜல்லிக்கட்டு: நேற்று... இன்று... நாளை...?

"ண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க, யாராச்சும் ரோஷமிருந்தா  மாட்டுப்பக்கம் வாங்க...." "அண்ணனுக்கு ஜே... காளையனுக்கு ஜே..." என்று தென்மாவட்ட கிராமப்புறங்களில் ஸ்பீக்கர்களில் பாடல்களை ஒலிக்கவிட்டு, பொங்கலுக்கு முன்பே உற்சாகமாக வளைய வருவார்கள் நம் மக்கள். இப்போது அந்த கிராமங்களில் சோகம் படர்ந்திருக்கிறது.
"இந்த வருஷம் பொங்கல் வைக்கலாமா வேண்டாமா, புது டிரஸ் எடுக்கலாமா வேண்டாமா...?" என்று, ஊர் மந்தையில் அமர்ந்து கவலையுடன் பேசி வருகிறார்கள். இன்னொரு பக்கம் "எத்தனை சட்டம் போட்டால் என்ன, நாம கொண்டாடுறதை கொண்டாடிடணும்’’ என்று இளவட்டங்கள் கச்சை கட்டி வருகிறார்கள். இதற்கு காரணம் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த விதித்திருக்கும் தடைதான்! 
 

80 சதவீத மக்கள், உணவுக்காக விலங்குகளை கொன்று குவிக்கிற நாட்டில், விளையாட்டுக்காக காளைகளை பயன்படுத்தக்கூடாது என்று சொல்கின்ற உத்தரவை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? தொன்றுதொட்டுவரும் மூடநம்பிக்கைகளைகூட நம் மக்கள் விட்டுவிடுவார்கள், ஆனால், வீரம், பண்பாடு சம்பந்தப்பட்ட பழக்கத்தை எப்படி கைவிட முடியும்? இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டுமென்பதால், மத்திய, மாநில அரசையும், நீதிமன்றத்தையும் இன்றுவரை மலைபோல் நம்பியுள்ளனர் மக்கள். 

நம் மக்களை மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட விடுவார்களா, அல்லது அத்து மீறி ஜல்லிக்கட்டு நடத்தி சட்டம், ஒழுங்கு கெட்டுவிடும் சூழல் ஏற்படுத்துவார்களா என்பதை பார்ப்பதற்கு முன், ஜல்லிக்கட்டை பற்றியும், அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.


சங்க காலம் மட்டுமல்ல, பூமியில் தமிழ் இனக்குழு தோன்றிய காலத்திலிருந்து ஜல்லிக்கட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்கள் தமிழரின் வாழ்வில் இரண்டறக் கலந்தது. கால்நடைகளை கடவுளாக மட்டுமல்ல, விவசாய வேலைகள் செய்யும் வேலைக்காரனாகவும் தன்னுடன் விளையாடும் நண்பனாகவும் தமிழன் பார்த்திருக்கிறான். அதனால்தான் தமிழர்கள் அதிகம் வணங்கும் சிவபெருமான், காளையை அடக்கி அதை தன் வாகனமாக பயன்படுத்தினார் என்று ஒரு ஆன்மீக கதையையும் உருவாக்கிக்கொண்டான்.
சிந்துவெளி நாகரீகத்திலும் காளை விளையாட்டு இருந்ததாக கூறுகிறார்கள். மனித இனம் தோன்றிய பல நாடுகளில், காளை விளையாட்டு இருந்திருக்கிறது. இன்றும் பல முன்னேறிய நாடுகளிலும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது.
 

ஜல்லிக்கட்டுக்கு ஆதிகாலத்திலிருந்து ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், எருதுகட்டு என்று பல பெயர்கள் இருந்தாலும், நடைமுறையில் ஜல்லிக்கட்டு என்றும் சில பகுதிகளில் ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது. ஏறுதழுவுதல் முல்லை நில மக்களின் பண்பாட்டை சார்ந்தது என்றும், முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் காலப்போக்கில் அது தமிழக மக்கள் அனைவருக்குமான விளையாட்டாக மாறியது.
இன்று மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, சிவகங்கை மாவட்டங்களில் தொடர்ந்து நடத்தப்படும் விழாவாக இன்று மாறிவிட்டது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை சிராவயல், கண்டிப்பட்டி போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் எப்போதும் பிரபலமானது. ஜல்லிக்கட்டு காளைகளை பெற்ற பிள்ளைகளுக்கு மேலாக சகல வசதிகளுடன் வளர்ப்பவர்கள் இந்த பகுதியில் அதிகம். அந்த காளைகள் இறந்து விட்டால், அடக்கம் செய்த இடத்தில் கோயில் கட்டி வழிபடுவதும் தொடர்கிறது.

பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதலைப்பற்றி சங்க இலக்கியங்களில் சொல்லும்போது, வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று மோதி விளையாடுவதும், அதற்குப்பின் எருதுகளுடன் இளைஞர்கள் மோதி விளையாடி அதை அடக்குவார்கள் என்றும், ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். இளம்பெண்கள் ஏறுதழுவும் வீரன் வெற்றிபெற பாடுவர்கள் என்றும் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட ஜல்லிக்கட்டு அதே வழிமுறைகளுடன் இப்போதும் நடத்தப்படுகிறதுபிரிட்டிஷ் காலத்து நாணயங்களான சல்லிக்காசுகளை மாலைபோல மாட்டின் கொம்பில் கட்டி விடுவார்களாம். மாட்டை அடக்கியபின் அந்த வீரர் சல்லிகளை எடுத்துக்கொள்ளலாம். அதனால் இவ்விளையாட்டுக்கு சல்லிக்கட்டு என்று பேர் வந்தது, அது மருவி ஜல்லிக்கட்டு ஆனதாக சொல்கிறார்கள். 
 

முல்லைக்கலி என்ற இலக்கிய நூலில் ஜல்லிக்கட்டை பற்றி அதிகமாக விவரிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு காயங்கள், உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. காளையை அடக்கினால்தான் பெண் கட்டுவது போன்ற சென்டிமெண்டுகள் அப்போது சமூகத்தில் நிலவியதால், இளைஞர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இறந்துள்ளனர். தற்போது அதுபோன்ற நிலை இல்லையென்றாலும், ஜல்லிக்கட்டு மீதான காதல் மட்டும் யாருக்கும் குறையவில்லை. பாரம்பரியமான வீர விளையாட்டு என்று சொல்வதில் நம் எல்லோருக்கும் பெருமை.
ஆரம்பத்திலிருந்தே ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. காளைகளுக்கு  ஒவ்வாத பொருட்களை உண்ண கொடுக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறது என்றும், அது மட்டுமில்லாமல் மாடு பிடிக்கும் வீரர்கள் பலர் படுகாயமடைந்தும், இன்னும் பலர் கொடூரமாக இறந்தும் போகிறார்கள், அதனால் அவர்கள் குடும்பம் நிர்கதியாகிறது என்றும், இன்னும் சில பகுதிகளில் சாதி பெருமை பேசி சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கிறது என்றும், அதனால் இந்த ஜல்லிக்கட்டு விழாவை தடை செய்ய வேண்டுமென்று பல தன்னார்வ அமைப்புகள் கூறி வந்தன. சாராயம், போதை வஸ்துகளை சிலர் காளைகளுக்கு கொடுப்பதாகவும் அப்போது சர்ச்சைகள் கிளம்பின. 


இந்த நேரத்தில்தான் சில வருடங்களுக்கு முன் அலங்காநல்லூரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச்செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார் ரங்கசாமி.
இவ்விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதோடு, காளைகளும் துன்புறுத்தப்படும் என்பதால் இவ்விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்பதை அவருடைய மனுவில் தெரிவித்திருந்தார். அவரது மனுவை ஏற்று நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இத்தீர்ப்பினால் இவ்விளையாட்டின் மீது ஈடுபாடு கொண்ட தெற்கத்தி மக்களுக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டது. தடையை நீக்கக்கோரி உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதே போல்தான் 2௦௦1ல் ஜெயலலிதா முதல்வராக வந்தபோது கோயில்களில் ஆடு, கோழி பலியிடக் கூடாதென்று அவசர சட்டம் ஒன்றை போட்டார். இதனால் தமிழ் மக்கள் கொதித்தெழுந்தனர். அந்த எதிர்ப்பை கண்டு பயந்து அச்சட்டத்தை திரும்ப வாங்கினார். அதுபோல் இத்தடையும் நீங்கி விடுமென்று தமிழக மக்கள் நினைத்தார்கள். பல போராட்டங்களை இன்று வரை நடத்தி வருகிறார்கள். ஆனால், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது உச்ச நீதிமன்றம் என்பதால், ஆட்சியாளர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
அதுமட்டுமில்லாமல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதால், நீதிமன்றத்தை நிர்பந்திக்க கூடாதென்று இவ்விஷயத்தில் அமைதி காக்கிறார்கள். தமிழக அரசு தற்போது தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அட்மிட் செய்யாமல் இருக்கிறது நீதிமன்றம்.
 

கடந்தாண்டாவது 76 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. இப்போது அதுபோலவாது அனுமதிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படாததால், பல மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.
இந்த சூழலில்தான் சமீபத்தில் மதுரையில் கிராமப்புற மக்கள் அனைவரும் திரண்டுவந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை கடந்த 7ஆம் தேதி நடத்தினார்கள். அதில் பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் ராஜசேகரன், "தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து இந்தாண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்த உதவ வேண்டும். வெளிநாட்டுக்காரர்கள் உதவியுடன் இயங்கும் பீட்டா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும், இது பண்பாடு சார்ந்த விஷயம். இதில் காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டை நடக்கவில்லை என்றால், பொங்கலன்று சட்டம்- ஒழுங்கு கெட்டுவிடும் சூழல் உள்ளது’’ என்றார்.

இன்னும் சிலரோ, "வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க நாய்களை காவல்துறை பயன்படுத்துகிறது. அந்த நாய்களின் உயிர்களுக்கு ஆபத்தில்லையா... இதை ஏன் விலங்கு நல ஆர்வலர்கள் கேட்கவில்லை. பசுமாடு கன்றுக்குட்டிக்குத் தானே பால் கறக்கிறது. அதை மனிதன் கறந்து டீ, காபி சாப்பிடறது பாவமில்லையா...’’ என்ற ரீதியில் பேசினார்கள்.
 


நம்மிடம் பேசிய தேவகோட்டை இருமதி அம்பலமான துரை.கருணாநிதி, "சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 9 கிராமங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. எங்கள் ஊரான இருமதியில் அந்த காலத்திலேயே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்துவதற்கும், மக்கள் அமர்ந்து பார்ப்பதற்கும் கேலரி செட்டப்பில் திண்டு கட்டியுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்த அசம்பாவிதம் நடந்ததில்லை. பக்கத்திலிருந்து அனைத்து சமுதாயத்திலிருந்தும் விழா பார்க்க வருவார்கள். அதன் மூலம் ஒற்றுமை ஏற்பட்டிருந்தது. விளையாட்டுப்போட்டிகளில் ரிஸ்க் இல்லை என்று சொல்ல முடியுமா? அதற்காக எந்த விளையாட்டையாவது தடை செய்ய முடியுமா? பல விளையாட்டுகளில் உயிர் போவது தன்னார்வளர்களுக்கு தெரியவில்லையா..
ஒருநாளைக்கு எத்தனை ஆடு, மாடு, கோழி பறவைகள் மீன்கள் கொல்லப்படுகிறது. இவையெல்லாம் பாவமில்லையா? கிராமப்புற மக்கள் விவசாயம் செழிக்கவும், குல தெய்வங்கள், காவல் தெய்வங்களை வணங்கவும் ஜல்லிக்கட்டுவை நடத்த வேண்டுமென்பதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அரசுதான் மக்களின் நம்பிக்கையை காக்க வேண்டும்’’ என்றார்.

இவ்விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று இவ்வழக்கின் மூன்றாம் பிரதிவாதியான மதுரையின் அப்போதைய ஆட்சித் தலைவர் உதயச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், "தமிழர்களின் மரபான வீர விளையாட்டுகளின் பண்பாட்டு முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விஷயம்’’ என்று ஜல்லிக்கட்டை பற்றி மிக விரிவாக குறிப்பிட்டிருந்தார். அப்போது மட்டும் தடை விலக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால், மறுபடியும் தடை போடப்பட்டது.

சமீபத்தில் மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "பாரம்பரியங்களை காப்பற்ற வேண்டுமென்பதில் எங்கள் அரசு தீவிரமாக இருந்தாலும், நீதிமன்ற உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை’’ என்று, ஜல்லிக்கட்டுக்கு எதிராக சொல்லிவிட்டு போனார். அதிமுக அரசோ எந்த வார்த்தையும் சொல்லாமல் உள்ளது. பிரபலமான அலங்காநல்லூர், பாலமேடு ஆகியவை அடங்கியுள்ள சோழவந்தான் தொகுதி எம்.எல்.. கருப்பையாவோ, "நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்கிறார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டுமென்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறி வருகிறார்கள். பொங்கல் நெருங்க நெருங்க தென்மாவட்டத்தில் டெம்பரேச்சர் ஏறி வருகிறது.

No comments:

Post a Comment