சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jan 2015

ரோமியோ ஜூலியட்டும் ராமதாஸ் பேத்தியும்..!

 ‘ரோமியோ அண்டு ஜூலியட்’... பூகோளத்தில் அமரத்துவம் பெற்ற காதலர்களாக வர்ணிக்கப்படுபவர்களின் வரிசையில், தங்களுக்கென்று ஓரிடத்தைப் பிடித்துக் கொண்ட காதலர்கள்.
மும்தாஜை ஷாஜஹானின் கண்களால் காண வேண்டும்என்பதுபோல் ரோமியோ-ஜூலியட்டை ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளால் தரிசிக்க வேண்டும். அப்படி இல்லாமல் வேறு எப்படியும் ரோமியோவின் நாடி நரம்புகளில் எல்லாம் தெறிக்கும் காதலை... ஜூலியட்டின் பேரழகை... ஆத்திரக்காரன் டிபால்டின் முன்கோபத்தை... பால்தாஸரின் விசுவாசத்தை நாம் தரிசிக்கவே முடியாது. ஆனாலும், ரோமியோ-ஜூலியட்டை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளதுதியேட்டர் லேப்’.
சென்னை தி.நகரில் உள்ள ஜெர்மனி ஹாலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நாடகம் அரங்கேறியது.


ரோமியோ-ஜூலியட் கதை...

காதல்... கலை... இயற்கையோடு தன்னை இழைத்துக் கொண்ட பதின்பருவத்து வாலிபன் ரோமியோ. ரோஸலின் என்பவளை உருகிக் காதலிக்கிறான். அவள் ரோமியோவின் காதலை ஏற்காத நிலையில், எதேச்சையாக ஜூலியட்டைக் காண்கிறான். அதோடு அவன் மனம் ஜூலியட் வசமாகிவிடுகிறது. உருகி உருகிக் காதலிக்கிறான். பதின்பருவத்தில் இருக்கும் ஜூலியட்டும், உடனே ரோமியோவிடம் காதல் கொள்கிறாள். ஆனால், இருவரின் குடும்பங்களுக்கு இடையிலும் பரம்பரைப் பகை கனன்று கொண்டிருக்கிறது. காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் நாம் பரம எதிரியின் முகாமில் மனதைப் பறி கொடுத்திருக்கிறோம் என்ற விஷயம் இருவருக்கும் தெரிய வருகிறது.

ஆனால், அதற்காக தங்களின் காதலைப் பலியிட முடியாது என்ற நிலைக்கு சென்று விடுகின்றனர். தங்களின் இக்கட்டான நிலை பற்றி, பாதிரியார் லாரன்ஸிடம் முறையிடுகின்றனர். அவர் தற்காலிகமாக ரோமியோவுக்கும் ஜூலியட்டுக்கும் ரகசியத் திருமணம் நடத்தி வைக்கிறார்.
இந்த நிலையில் ஜூலியட்டை ஒரு தலையாகக் காதலிக்கும், அவளுடைய உறவுக்காரன் பாரிஸ், தன்னுடைய விருப்பத்தை ஜூலியட்டின் பெற்றோர்களிடம் தெரிவிக்கிறான். அவர்களும் அவனையே ஜூலியட்டிற்கு மணமகனாக முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில், எப்போதும் ரோமியோவையும், அவனுடைய நண்பர்களையும் அறவே வெறுக்கும் ஜூலியட்டின் மற்றொரு உறவினன் டைபால்ட், ரோமியோவின் நண்பன் ஒருவனை தெருச் சண்டையில் குத்திக் கொன்று விடுகிறான். தான் மிகவும் நேசிக்கும் நண்பனை, கொன்றுவிட்ட டைபால்டைத் தேடிப்போய் ரோமியோ கொலை செய்கிறான். இந்தக் கொலைகள் பற்றிக் கேள்விப்பட்ட அந்த நாட்டின் ராணி, ‘ரோமியோ உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்' என்று உத்தரவிடுகிறார். 

ஜூலியட்டின் நிலை இரு தலைக் கொள்ளி எறும்பாகிறது. நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட காதலன்... வேறொருவனுடன் தனக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள திருமணம்... என்று தீராத மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். இதையடுத்து ஆறுதல் தேடி, பாதிரியார் லாரன்ஸைச் சந்தித்து முறையிடுகிறாள். ரோமியோ-ஜூலியட் இருவருக்காகவும் வருத்தப்படும் பாதிரியார் லாரன்ஸ், அவர்களின் பிரச்னையை தீர்த்து வைக்க ஒரு யோசனையை முன் வைக்கிறார். அதன்படி, ஜூலியட்டிடம் ஒரு மயக்க மருந்தைக் கொடுத்து, 'இன்று இரவு இதை நீ அருந்திவிடு. அருந்தியதும் நீ மயக்கமடைந்து விடுவாய். அந்த மயக்கம் தெளிய 48 மணி நேரம் பிடிக்கும். ஆனால், நீ மயக்க மருந்து அருந்தித்தான் மயங்கிக்கிடக்கிறாய் என்பது யாருக்கும் தெரியாது.

அவர்கள் நீ திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக நினைப்பார்கள். உடனே, உன்னை சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்துவிடுவார்கள். நான் அந்த நேரத்தில், ரோமியோவைத் தொடர்பு கொண்டு, உண்மையைச் சொல்லி, அவனை கல்லறைக்கு அழைத்து வருகிறேன். அங்கு சவப்பெட்டிக்குள் இருந்து உன்னை மீட்டு ரோமியோவுடன் அனுப்பி வைக்கிறேன். இந்த விஷயம் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் ' என்கிறார்.

ஜூலியட் அதற்குச் சம்மதிக்கிறாள். பாதிரியார் லாரன்ஸ் சொன்னபடியே, மயக்கமருந்தை அருந்தி மயங்கி விடுகிறாள். அவளுடைய பெற்றோர், அவள் இறந்து விட்டதாக எண்ணி, அவளை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துவிடுகின்றனர். 

இதற்கிடையில், இந்த விஷயங்களை எல்லாம் விளக்கமாக எழுதி, பாதிரியார் லாரன்ஸ் ரோமியோவிற்கு கடிதம் ஒன்றை கொடுத்தனுப்புகிறார். அந்தக் கடிதம் ரோமியோவைச் சேராமல் போய்விடுகிறது. ஆனால், ரோமியோவின் நண்பன் பால்தஸர் மூலம், ஜூலியட் மரணமடைந்து விட்டாள். அவளை கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர் என்ற தகவல் ரோமியோவிற்கு தெரியவருகிறது. தனக்காக இறந்துவிட்ட காதலியோடு சேர்ந்து தானும் தன்னை மாய்த்துக் கொள்வதுதான் சரி என்று நினைக்கும் ரோமியோ, கொடிய விஷத்தை வாங்கிக் கொண்டு அவள் கல்லறைக்கு வருகிறான். அங்கு அந்த விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்.

அதன்பிறகு அங்கு வரும் பாதிரியார், ரோமியோ அவசரப்பட்டு விட்டான் என்று கண்ணீர் வடிக்கிறார். அத்துடன், மயக்க மருந்து சாப்பிட்டு இறந்ததுபோல் மயங்கிக்கிடக்கும் ஜூலியட்டையாவது காப்பாற்றுவோம் என்று நினைத்து, சவப்பெட்டிக்குள் இருந்து அவளை மீட்கிறார். வெளியில் வந்து கண் திறக்கும் ஜூலியட்டின் முன், ரோமியோவின் இறந்த உடல்தான் கிடக்கிறது. அவளுக்கு நடந்தவற்றை பாதிரியார் லாரன்ஸ் எடுத்துரைக்கிறார். அதைக் கேட்ட ஜூலியட், எனக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரோமியோவிற்காக நானும் மரிக்கிறேன் என்று சொல்லி, ரோமியோவின் குறுவாளை எடுத்து தன்னைத்தானே குத்திக் கொண்டு மரிக்கிறாள்.


நடந்தவை அனைத்தையும் பாதிரியார் மூலமும் ரோமியோவின் நண்பன் பல்தஸர் மூலமும் நாட்டின் அரசிக்கும், ரோமியோ-ஜூலியட்டின் பெற்றோர்களுக்கும் தெரியவருகிறது. தங்களின் வறட்டுக் கௌரவம் இரண்டு உயிர்களை காவு வாங்கிவிட்டதை எண்ணி மனம் வருந்தும் பெற்றோர்கள் அதோடு திருந்துகிறார்கள். நாட்டின் ராணி, ரோமியோ-ஜூலியட் காதலர்களுக்கு சிலை வடிக்கிறாள். 

ஷேக்ஸ்பியரின் இந்தக் கதையில் எந்த மாற்றமும் செய்யாமல், தமிழில் நாடகமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயராவ். நாடகம் நடத்துபவர்கள் எப்போதும் மூன்று விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும். 1. மேடையின் தோற்றம். 2. மேடையில் பாய்ச்சப்படும் வெளிச்சம். 3. கதாபாத்திரங்களின் உரையாடலை பார்வையாளர்களிடம் தெளிவாகக் கொண்டு சேர்க்கும் சப்தம். இந்த மூன்று விஷயங்களிலும் இயக்குனர் ஜெயராவ் கோட்டை விட்டிருக்கிறார்.

மேலும், மூன்றரை மணி நேரத் திரைப்படங்கள் இரண்டரை மணி நேரத் திரைப்படங்களாக சுருங்கி அரை நூற்றாண்டுகள் ஓடி விட்டன. அந்த இரண்டரை மணிநேரப் படம் மேலும் சுருங்கி, இப்போது ஒன்றரை மணி நேரம்... ஒரு மணி நேரம் என்று குறுகிவிட்டது. இந்த நேரத்தில், மொத்தமாக நாலரை மணி நேரம் பார்வையாளர்களை சற்று நெளிய வைத்துவிட்டது. 

வசனம் எழுதியவர் மிகச் சிறந்த முறையில் மொழிபெயர்த்து வசனமாக மாற்றி இருந்தார். . நாடகத்தில் நடித்தவர்கள் எல்லாம் இன்றைய இளம் தலைமுறை என்பதால், ஒரளவு நல்ல தமிழை உச்சரிப்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு இருக்கிறது 

ரோமியோவாக நடித்த குணாநிதிக்கு சோகமும், ஆக்ரோஷமும் நன்றாக கை வரப்பெற்றுள்ளது.   கொஞ்சம் ஓவராக ரொமான்ஸ் காட்டினால், அது வேறு மாதிரியாகத் தெரிந்துவிடும் என்று தயங்கித் தயங்கியே நடித்தார்.
ஜூலியட் பாத்திரத்தில் நடித்த நந்தினி என்ற பெண் சிறப்பாகவே நடித்தார். அதில் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதுபோல் ஜூலியட்டின் பணிப்பெண்ணாக வரும் நர்ஸ் பாத்திரத்தை ஏற்று நடித்த பெண்ணும், டைபால்டாக நடித்த இயக்குனர் தங்கர்பச்சனின் மகனும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு ஏற்ற அளவில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால், நாடகத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இருந்த இவர்கள் எல்லோரையும்விட நாடகத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ராணியாக வந்துபோன சங்கமித்திரை என்ற பெண் சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய தோற்றமும், கம்பீரமான குரலும், வசனங்களை அவர் உச்சரித்த விதமும் அவர் தோன்றும் காட்சிகளில் தனிச்சிறப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. விசாரித்தபோது, அவர் பா... நிறுவனர் ராமதாஸின் பேத்தி என்பதும் டாக்டர் அன்புமணி-சௌமியா தம்பதியினரின் மகள் என்பதும் தெரிந்தது.
அவரைப்போல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இன்னொரு பாத்திரம், ஜூலியட்டின் தந்தை கேப்லட்டாக நடித்த பிரபு என்ற இளைஞர் சிறப்பாக நடித்திருந்தார். காட்சிக்கேற்றவகையில் வெளிப்படுத்திய நடிப்பும், தெளிவான வசன உச்சரிப்பும் அவரை மேடையில் தனித்துக் காட்டியது. கொஞ்சம் முயற்சித்தால் திரைத்துறையில் சரியான இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம்.

நாடகத்தைப் பார்க்க, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்-சௌமியா உள்பட அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். அதுபோல, பா.மா.. முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர். அவர்கள் முன்னால் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மேடையில், காதலை உச்சத்தில் வைத்துப் பேசப்பட்ட வசனங்கள்... அந்த வசனங்களில் வந்து விழுந்த பரம்பரைப் பகை, வறட்டுக் கௌரவம், வாழ்ந்து முடித்தவர்களின் செயலால் வாழ வேண்டியவர்கள் பலியானர்கள் போன்ற வார்த்தைகள் நமக்குள் ஏனோ தர்மபுரியையும், இளவரசனையும் நினைவுக்கு கொண்டு வந்து கொண்டே இருந்தன. 

நாம் முன்பே சொன்னதுபோல் நாடகத்தின் நீளம்... மேடை, வெளிச்சம், சப்தம் போன்ற அனைத்திலும் குறை இருந்ததால் ரசித்துப் பார்க்கும்படி நாடகம் இல்லை. ஆனால், முற்றிலும் புதியவர்களை அதுவும் இளம் தலைமுறையை வைத்து, ஷேக்ஸ்பியரின் காவியத்தை முயற்சித்துப் பார்த்துள்ளதால் இப்போதைக்கு அந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டலாம். 





No comments:

Post a Comment