குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த 2013-ம் ஆண்டு திண்டிவனத்தைச் சேர்ந்த கர்ணர்ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டாவது குழந்தை ராகுலுக்குத்தான் இந்த வினோதம் நடந்தது.
உடலில் தானாகத் தீப்பற்றி எரிவதற்கான காரணத்தை அறிய சென்னை கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட ராகுலுக்கு, 'ஸ்பான்டேனியல் ஹுயுமன் கம்பஷன்’ என்ற அதிசய நோய் இருப்பதாகவும் அவனது உடலில் இருந்து வெளியேறும் வாயுதான் தீப்பற்றுவதற்கு காரணம், என்றது மருத்துவக் குழு. பின்னர் ஒருமாதம் கழித்து, 'ராகுலுக்கு எந்த நோயும் இல்லை. எனவே தீப்பற்றுவதற்கான காரணத்தை காவல் துறைதான் கண்டுபிடிக்க வேண்டும் என்று கைவிரித்தது. அதன் பிறகு ராகுலுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால், அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில் அந்தக் குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையையும் தீ தொற்றிக்கொண்டுவிட்டது.
குழந்தையின் தாய் ராஜேஸ்வரியிடம் பேசினோம், ''ராகுலுக்கு எந்த நோயும் இல்லனு டாக்டர்ங்க சொன்னபிறகும் தீப்பிடிச்சதுக்கான மர்மம் தெரியாமலேயே இருக்குது. ராகுலுக்கு திரும்பவும் தீப்பிடிக்கவே இல்லை. கடந்த 9-ம் தேதி எங்களுக்கு மூணாவதா ஓர் ஆண் குழந்தை பொறந்துச்சு. நான் குழந்தைக்கு பால்கொடுத்து தூங்கவெச்சிட்டு டாய்லெட்டுக்கு போய் திரும்பி வந்து பாத்தா, குழந்தைமேல போட்டிருந்த துணி திகுதிகுனு எரிஞ்சிட்டிருந்துச்சு. உடனே தீய அணைச்சு ஆம்புலன்சு மூலமா ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். குழந்தைக்கு தானா தீப்பிடிக்க எந்த நோயும் இல்லனு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க. ராகுல் பொறந்து ஒன்பதாவது நாள் தீப்பிடிச்ச மாறி இந்தக் குழந்தைக்கு ஏழாவது நாளே தீப்பிடிச்சிருக்கு. நான் சொல்ற உண்மைய டாக்டருங்க நம்பாம, என்மேல சந்தேகப்படுறாங்க. கஷ்டப்பட்டு குழந்தைய பெத்த எனக்கு, எப்படி கொளுத்த மனசு வரும்? ராகுல் எரிஞ்சப்ப வீடும் சேர்ந்து எரிஞ்சிடுச்சு. வீட்டுல இருந்த எல்லாமே எரிஞ்சி போச்சு. அரசாங்கம் இலவச வீடு கட்டி தரேன்னு சொன்னாங்க. அதுக்கும்
50,000 ரூபாய் பணம் கொடுத்தோம். இதனால வீடு பாதியிலேயே நிக்குது. இப்ப ஒதுங்கக்கூட இடம் இல்லாம இருக்கோம். குழந்தைங்களுக்கு பால் வாங்கக்கூட முடியாம கஷ்டப்படுறோம்'' என்றார்.
நெடிமொழியனூர் கிராம மக்கள சிலரிடம் பேசினோம். ''ராஜேஸ்வரியின் குழந்தை மருத்துவமனையில் இருக்கும்போது எரியாமல், வீட்டில் தனியாக இருக்கும்போது மட்டும் எரிவது சந்தேகத்தை எழுப்புகிறது. முதல் குழந்தை எரிந்தபோதே இவர்களை ஒழுங்காக விசாரிக்காமல், சலுகைகள் மட்டும் தந்துள்ளனர். இப்போது மூன்று சென்ட் நிலம் தரப்போவதாக பேச்சு அடிபடுகிறது. குழந்தையின் பெற்றோர்களை முறையாக விசாரித்தால் முழு உண்மையும் வெளியே வரும்'' என்றார்கள்.
''ராகுலுக்கு வாயு வெளியேறும் நோய் இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு இந்தக் குழந்தைக்கும் அந்த நோய் இருக்க வாய்ப்பில்லை. குழந்தை எரியும் போதெல்லாம் கடைசியில் அம்மாதான்கூட இருந்துள்ளார். எனவே அவருக்கு மனோதத்துவ கவுன்சிலிங் அளிப்பது அவசியம். காவல் துறைதான் இதில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதற்கிடையில் கடவுள் அனுப்பி வைத்ததாகக் கூறி கர்ணர்ராஜேஸ்வரி தம்பதியைச் சந்தித்த ஜீசஸ் நெப்போலியன் என்ற பாதிரியார், ''டாக்டரால் இதைக் குணப்படுத்தவே முடியாது. தன்னால் மட்டுமே முடியும். மூதாதையர்களின் ஆவிகள்தான் குழந்தைகளைக் கொளுத்திவிடுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றால் குழந்தைகள் மேல் உள்ள ஆவிகளை விரட்டிவிடுவேன்’ என்று சத்தியம் செய்திருக்கிறார்.
காவல் துறையினரிடம் விசாரித்தபோது, ''எங்களைப் பொறுத்தவரை இது விசித்திரமான வழக்கு. யாராவது யார் மேலாவது தீயை வைத்தால், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால், இந்த வழக்கில் புகார்தாரரும் இல்லை. சாட்சியங்களும் இல்லை. சந்தேகத்தின் பேரில் போலீஸார் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தால், நாங்கள் வரம்பு மீறி செயல்படுகிறோம் என்பார்கள். இந்த வழக்கை பக்குவமாக கையாள்கிறோம்'' என்றனர்.
மர்மம் என்று விலகுமோ?
No comments:
Post a Comment