சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கி, ஒரு வாரம் கழிந்த நிலையில் அங்கு சென்றது சற்றுக் கூச்சமாக இருந்தது. ஆனாலும், களை கட்டியே இருந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது.
வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இடமில்லாததால் சற்று உள்ளே போய் தன் பைக்கை நிறுத்திவிட்டு வந்தார் என்னுடன் வந்த நண்பர். வாசகர்களில் பலரும் சுமக்க முடியாமல் புத்தகங்களை சுமந்து செல்வதைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்திருப்பது, ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மனிதர்களின் தேடலெனும் கங்கை இன்னும் வற்றிவிடவில்லை என்பது மனதிற்கு தெம்பாக இருந்தது. ஒவ்வொரு புத்தகக் கடையாகப் பார்த்துக்கொண்டே வந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் தெனாலிராமன் கதைகள், ஈசாப் குட்டிக் கதைகள், ஜென் கதைகள், பரமார்த்த குரு கதைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், ஜோதிடம் என்று பெரும்பாலான பதிப்பகங்களும் ஒரே தலைப்பில் ஒரே விஷயத்தையே புத்தகங்களாகப் போட்டு அயர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. காப்பிரைட் பிரச்னை இல்லை என்பதற்காக இப்படியா?
நல்ல மனிதர்களைக்கூட தேடிக் கண்டுபிடித்துவிடலாம் போல... நல்ல புத்தகங்களைத் தேடுவது பெரும் சிரமமாகத்தான் இருந்தது.குறிப்பாக 10 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை பலவகையான ஜென் குட்டி கதைகளின் தொகுப்புகளை கிட்டத்தட்ட எல்லா பதிப்பகங்களுமே வெளியிட்டிருந்தது சற்று வருத்தமாக இருந்தது. எல்லாவற்றிலும், ஏற்கெனவே வந்த கதைகளில் சில... வராத கதைகள் சில என்றிருந்தன. வாங்குபவர்களுக்கு இது பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தியது.
புத்தகத்திலிருந்து இணையதளத்துக்குக் கதைகளை, கட்டுரைகளை, டிப்ஸ்களை பதிவிடுகிறார்கள். மறுபடியும் இணையதளத்திலிருந்து அவற்றை புத்தகமாக தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு முடிவே இல்லாமல் போய்விட்டது. யாராவது இந்த பூனைக்கு மணி கட்டினால் நல்லது. படைப்பாளிகளுக்கு நம் நாட்டில் மரியாதை இல்லாமல் போனதுக்குக் காரணமே, தொகுப்பாளர்கள் என்கிற பெயரால், வகை தொகை யில்லாமல் குப்பைகளையும்கூட தொகுத்து, புத்தகங்களாக வெளியிட்டுக் கொண்டிருப்பதுதான். கிட்டத்தட்ட பேனா வைத்திருப்பவரெல்லாம் படைப்பாளி, எழுத்தாளர் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ... தலைப்புகளையும், எழுதியவர்களின் பெயரையும் தெரிந்து வைத்திருந்தால், ரெஃபரன்ஸ் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கிலும் பலர் வந்திருந்தனர். குழந்தைகளுக்கு வாசிப்பின் வாசனையை அறிமுகப்படுத்தவேண்டும் என்று குடும்பம் குடும்பமாக வந்தும் பலர் குவிந்திருந்தனர். இப்படி பற்பல காரணங்களால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக கண்காட்சி வளாகத்தில் புழுக்கமும் அதிகமே. அரங்குகள் இன்னும் விசாலமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சமுதாயத்தை நல்வழிப்படுத்தக்கூடியவை புத்தகங்கள் என்பதற்காகத்தான் அரசாங்கமே நூலகங்களை கட்டி அமைத்திருக்கிறது. இதற்கு உதவுவதற்காகத்தான் புத்தகக் கண்காட்சி போன்ற நல்ல விஷயங்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இத்தகைய நன்முயற்சிக்கு அரசாங்கங்கள் ஆதரவு தரும்போது, அதன் வீச்சு இன்னும் அதிகமாகவே இருக்கும். பெரும்பாலான மக்களையும் சென்றடையும். எனவே, சென்னை, நந்தம்பாக்கத்திலிருக்கும் டிரேட் சென்டர் போன்ற பிரமாண்ட வளாகங்களை புத்தகக் கண்காட்சி நடத்த அரசாங்கம் இலவசமாகவே தந்து உதவ முன்வந்தால், அது எதிர்கால சமுதாயத்தை நல்வழியில் இட்டுச் செல்வதற்கு உதவியதாகவும் இருக்கும்.
அதேபோல, கண்காட்சி நடத்துபவர்கள் புதிய வரவுகளுக்காக மட்டும் தனியாக ஒரு அரங்கம் அமைத்திருந் தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. வாடிக்கையாளர்கள் புத்தகங்களைத் தேடுவதற்கான நேரத்தை நிச்சயம் அது குறைக்கும்.
படைப்பாளிகள்தான் ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்படி முன்னெடுத்துச் செல்லும் படைப்பாளிகளுக்கு மேலை நாடுகளிலெல்லாம் நல்ல மரியாதை இருக்கிறது. நம் நாட்டில் குறிப்பாக, தமிழ்நாட்டில் அது நூறு சதவிகிதத்தை இன்னும் எட்டாமலேயே இருக்கிறது. அரசாங்கத்திற்கும் இந்த அக்கறை இருந்தால் நூறு சதவிகிதம் என்பது நிறைவேறக்கூடும்! |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
23 Jan 2015
புத்தகக் கண்காட்சி: அயர்ச்சியும்... ஆயாசமும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment