சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jan 2015

கேமரா எமன்கள்!



பிரசாத்தும் சரண்யாவும் கல்லூரியில் படிக்கும்போதே காதலிக்க ஆரம்பித்தவர்கள். படிப்பு முடிந்தவுடன் இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் ஆடம்பரமாகத் திருமணம் நடைபெற்றது. தங்களின் முதலிரவை ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில்தான் நடத்த வேண்டும் என்பது, திருமணத்துக்கு முன்பே அவர்கள் இருவரும் ஆவலுடன் எடுத்த முடிவு. அதன்படி, ஹைதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் முதலிரவைக் கொண்டாடினர்.

ஒன்றரை மாதங்கள் கழிந்த நிலையில், அந்த புதுமணத் தம்பதியரை பேரதிர்ச்சி ஒன்று தாக்கியது. அவர்களின் முதலிரவு காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருந்தது. உடனடியாக, காவல் துறையில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட நட்சத்திர விடுதியின் மேலாளர் உள்ளிட்ட அனைவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பிரசாத்  சரண்யா முதலிரவு கொண்டாடிய அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று முழுமையாக ஆய்வு செய்தனர்.

ஆனால், எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. கடைசியாக சந்தேகம் வந்து .சியைக் கழற்றிப் பார்த்தபோது, அதற்குள் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். ஆனால், அது பற்றி விடுதி நிர்வாகிகள் யாருக்கும் தெரியவில்லை. .சி சர்வீஸ் பொறுப்பாளராக இருந்த இளைஞரைப் பிடித்து உலுக்கியவுடன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். போலீஸார் அவனை கைதுசெய்து தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, அந்த விடுதியில் தங்கிய ஏராளமான ஜோடிகளின் அந்தரங்க உறவுகளைப் படம் பிடித்து விற்பனை செய்ததாக உண்மைகளைக் கக்கினான்.

செல்போன் கேமராக்களும் ரகசிய கேமராக்களும் மலிவாகக் கிடைக்கிற சூழலில், தனிமனிதர்களின் சுதந்திரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. நட்சத்திர விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் உள்ள விடுதிகளுக்குள் அச்சமின்றி நுழைய முடியவில்லை. துணிக்கடைகளில்கூட ஆடைகள் அணிந்து பார்க்கும் டிரையல் ரூம்கள் பாதுகாப்பானவை என்பதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. பிரபலமான ஒரு நடிகையின் குளியல் காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டனர் சிலர். அதைப்போல முன்னாள் கதாநாயகி ஒருவர், வெளியூர் படப்பிடிப்பில் ஆடைமாற்றும்போது திருட்டுத்தனமாக அதை வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டனர். பிரபலங்கள் அல்லாத பல அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்களும் அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடும் அயோக்கியத்தனம் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகின்றன.

''சி.சி.டி.வி எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள், ஸ்பை கேமரா எனப்படும் உளவு பார்க்கப் பயன்படுத்தப்படும் கேமராக்கள் என விதவிதமான நவீன கேமராக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. மலிவான விலையிலும் அவை கிடைக்கின்றன. ஒருபுறம், அவை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், மற்றொரு புறத்தில் தனிமனிதர்களின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. நமக்கு சம்பந்தமே இல்லாத யாரோ சிலருடைய பார்வையின் ஊடுருவலில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். எங்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவிட்டது. எனவே, அதைப் புரிந்து கொண்டு நாம்தான் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்' என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை பேராசிரியர் ஜெய்சங்கர்.

யாருக்கும் தெரியாமல் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் ரகசிய இடங்களில் ஒளித்து வைத்து, தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கங்களை படம் பிடிப்பவை ரகசியக் கேமராக்கள். இது சட்டவிரோதமானது. பிறரை உளவு பார்ப்பதற்காகவோ, சிலரின் வக்கிர நோக்கங்களுக்காகவோ இந்த ரகசியக் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை எல்லாம் தடுப்பதற்கு நம் நாட்டில் போதிய சட்டங்கள் உள்ளனவா?

தூணிலும் துரும்பிலும்!
எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் படம் பிடிக்கிற திறன்கொண்டவை 'ஸ்பைகேமராக்கள். அது இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதிலே இரண்டு வகைக்கள் இருக்கின்றன. வயர்ட் மற்றும் வயர்லெஸ். தற்போது பெரும்பாலும் வயர்லெஸ் ஸ்பை கேமராக்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பேனா, கண்ணாடி, சாவிக்கொத்து, கைக்கடிகாரம், செல்போன் சார்ஜர், பூ ஜாடி, கால்குலேட்டர், டீ.வி ரிமோட், இடுப்பு பெல்ட், சட்டை பொத்தான், கழுத்துப் பட்டை, விளையாட்டுப் பொம்மைகள், ப்ளக் பாயின்ட், விளக்குகள், தொப்பி, டீ ஷர்ட், எம்.பி 3 பிளேயர், பாத்ரூம் ஃபிட்டிங்ஸ், புத்தகம், ஏர் ப்யூரிஃபையர், .சி, போட்டோ ஃப்ரேம் போன்ற பொருட்களில் மறைத்து வைத்து துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.

வீட்டுக்குள் வில்லங்கம்!
ஒரு சூயிங்கம் பாக்கெட்டில் வைத்து ரகசியமாக வீடியோ பதிவு செய்யக்கூடிய குட்டி கேமராக்கள் நம் நாட்டில் எல்லா பெருநகரங்களிலும் கிடைக்கின்றன. அந்தக் குட்டி கேமராக்கள், ஆறு மணிநேரம் வரை வீடியோ பதிவு செய்யக்கூடியவை. தங்கள் குடும்ப உறவுகளை கண்காணிப்பதற்காகவும் இந்த கேமராக்களை பலர் வாங்கிச் செல்கின்றனர். ''பேனா வடிவில் உள்ள கேமரா, முன்பு 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. இப்போது, 10 மடங்கு அளவுக்கு அதன் விலை குறைந்துவிட்டது. மிகவும் எளிதாகவும் அதைக் கையாள முடியும்' என்று நம்மிடம் சொன்னார் சென்னையைச் சேர்ந்த மின்னணு பொருட்கள் வியாபாரி ஒருவர்.

போனில் 'அதுவேண்டாம்!

இளம் காதலர்கள் தனிமையில் இருக்கும்போது, முத்தமிட்டுக்கொள்வது உள்ளிட்ட இன்ப தருணங்களை தங்களின் செல்போன் கேமராவில் ஆர்வத்துடன் பதிவு செய்கிறார்கள். அதைப்போல, கணவனும் மனைவியும் தங்களுடைய அந்தரங்க உறவுகளை செல்போன் கேமராவில் பதிவு செய்துகொள்கிறார்கள். புகைப்படங்களாக, வீடியோவாக எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து கிளுகிளுப்பு அடைகின்றனர். பின்னர், எச்சரிக்கையுடன் அந்தக் காட்சிகளை செல்போன் கேமராவில் இருந்து அழித்துவிடுகின்றனர். ஆனால், படங்களை அழித்துவிட்டோம் என்று யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த செல்போன் பழுதாகிவிட்டால், பழுதை நீக்குவதற்காக மொபைல் ரிப்பேர் கடைகளில் கொடுப்போம். அழிக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை மீட்பதற்கான ரெக்கவரி சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி, நம்மால் அழிக்கப்பட்ட எல்லா படங்களையும் எடுத்துவிடுவார்கள். அதுபோல, மொபைல் கடைகளில் மீட்கப்பட்டு இன்டர்நெட் மூலம் பரவிய அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. அது தெரியவந்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. எனவே, இப்படி படம்பிடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

இப்படிச் செய்யுங்க!
துணிக் கடைகளில் உடைமாற்றும் அறைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் பெரிய கண்ணாடிகள் இருக்கும். அந்தக் கண்ணாடிகளின் பின்புறத்தில் ரகசியக் கேமராக்கள் இருக்கலாம். அந்த வகை கண்ணாடிகளுக்கு ரிஃப்ளெக்டிங் கிளாஸ் (Reflecting Glass) என்று பெயர்.

இதைக் கண்டுபிடிப்பதற்கு பிரத்யேகக் கருவிகள் உண்டு. அடிக்கடி நட்சத்திர விடுதிகளில் தங்கும் பிரபலங்கள், அத்தகையக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். லேசர் ஹிட்டன் கேமரா டிடெக்டர் (Laser hidden canera detector), வயர்லெஸ் கேமரா ஹன்ட்டர் (Wireless camera hunter) என்று அழைக்கப்படும் அந்தக் கருவிகள் பெரும்பாலும் டெல்லியில் மட்டுமே கிடைக்கின்றன. அதன் விலை சுமாராக 15 ஆயிரம். ஓர் அறையில் எந்த இடத்தில் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும், இந்தக் கருவிகளின் மூலமாக கண்டுபிடித்துவிட முடியும்.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது, சிறிய டார்ச் விளக்கு ஒன்றை கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற கண்ணாடிகளில் டார்ச் விளக்கால் அடித்துப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்குள் ஒளி ஊடுருவவில்லை என்றால் அது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடி. ஒளி ஊடுருவினால் அது ரிஃப்ளெக்டிங் கிளாஸ்.

உடை மாற்றும் அறைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் உள்ள கண்ணாடிகளை நம்முடைய விரலை வைத்தும் சோதித்துப் பார்க்கலாம். கண்ணாடி மீது உங்கள் ஆள்காட்டி விரலை வையுங்கள். விரலின் நுனிக்கும் கண்ணாடியில் தெரிகிற அந்த விரல் பிம்பத்தின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும். நுணுக்கமாகப் பார்த்தால் அதை கவனிக்க முடியும். அப்படியான இடைவெளி இருந்தால், அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. நம் ஆள்காட்டி விரலுக்கும் கண்ணாடியில் தெரியும் பிம்ப விரலுக்கும் இடைவெளி தெரியவில்லை என்றால், அது ரிஃப்ளெக்டிங் வகை கண்ணாடி.


அறையின் வெளிச்சம் உள்ளே வராத அளவுக்கு கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட வேண்டும். பிறகு, உங்கள் செல்போன் கேமராவை ஆன் செய்யுங்கள். சாதாரணமாக புகைப்படம் எடுக்கும்போது வெளிப்படும் 'ஃப்ளாஷ்வெளிச்சத்தை அணைத்துவிட்டு, அந்த அறையில் உள்ள நான்கு புறங்களின் சுவர்களையும் சுவற்றில் உள்ள அலங்காரப் பொருட்களையும் வரிசையாகப் புகைப்படம் எடுங்கள். பின்னர் அந்தப் படங்களை ஆராயும்போது ஊசிமுனை அளவுள்ள ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தாலும், இருட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிகப்பு நிறப் புள்ளிகளாகத் தெரியும். அதை வைத்தே உங்கள் அறையினுள் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை அறிந்துகொள்ளலாம்.



No comments:

Post a Comment