சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jan 2015

பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் பலனில்லை... காரணம் என்ன?


த்தியில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக  அரசு பதவியேற்று 7 மாதங்களில் இதுவரை 9 முறை பெட்ரோல் விலையும் டீசல் விலை 5 முறையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. வரவேற்க தகுந்த விசயமே என்றாலும் இந்த விலைக் குறைப்பின் பின்னால் இருக்கும் அரசியல் சற்று கவலை அளிக்கக் கூடியதே.
விலைக் குறைப்பு அறிவிப்போடு இன்னொரு செய்தியும் கலந்து வருவதே கவலை தரும் ஒன்றாக எல்லோராலும் கவனிக்கப் படுகிறது.அது பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு.

நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வே காரணம் என்று கூறப்படும் நிலையில், 9 முறை பெட்ரோலும் 5 முறை டீசலும் விலை குறைக்கப்பட்ட நிலையில் விலைவாசியும் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களும் வெகுவாகக் குறைந்து நடுத்தர ஏழை மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை அல்லவா ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

மாறாக அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் காய்கறி, பழ வகைகளும், பேருந்து ரயில் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்களும் 7 மாதங்களுக்கு முன்பிருந்த  அதே விலையிலும் பலநேரங்களில் கூடுதல் விலையிலும் இருக்கின்றன. இதுதான் புரியாத புதிராகவும் விலகாத மர்மமாகவும் இருக்கிறது.
கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு  பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய போதெல்லாம் எதிர்ப்பு காட்டிய  பாஜகவின் தலைமையில் மத்தியில் ஆட்சியை அமைத்து 7 மாதங்கள் ஆகிய நிலையிலும் விலைவாசி உயர்வில் மாற்றம் இல்லை என்கிற யதார்த்தம் சுடத்தான் செய்கிறது.   


இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணையை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணி என்பது 80 சதவீதம்  ரிலையன்ஸ் குழுமத்திடம் தான் உள்ளது.இவற்றின் மூலம் தான் டூவீலர் முதல் விமானம் வரை ஏழை எளிய நடுத்தர கோடீஸ்வர மக்களின் பயணம் நடக்கிறது. உணவுப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் மருந்துப் பொருட்கள் என்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் பரவலாக்கமும் நடைபெறுகிறது.அதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உடனடியாக மக்களை பாதிக்கிறது.
 

மன்மோகன் அரசு விலையையேற்றி மக்களை வதைத்தது என்றால் மோடி அரசு விலையைக் குறைத்து விலைவாசியின் விஷத்தின் கடுகடுப்பைக் குறைக்காமல் பார்த்துக் கொள்கிறதோ என்ற  எண்ணம் 7 மாதங்களிலே பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குரல் எழுப்பும் அளவிற்கு சூழ்நிலை எற்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியதே.

தனியார் எண்னை நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும் உள்நாட்டில் இருந்து தோண்டி எடுத்தும் எரிபொருளை அரசிற்கு  கூடுதல் விலைக்கு விற்கின்றனஇது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் மன்மோகன் சிங் அரசு, பெட்ரோல் விலையை எண்னை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சட்டம் கொண்டு வந்தது. அதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்ந்தது என்று காரணமும் அப்போது கூறப்பட்டது. 

ஆனால் தற்போது விலைக்குறைப்பு செய்யப்பட்ட போதிலும் விலைவாசியில் மாற்றம் இல்லாமல் இருக்க காரணம் லாப வெறியா அல்லது மத்திய அரசின் கலால் வரி உயர்வா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு கேள்விகள் எழுகின்றன என்றால் அது மிகை இல்லை.

தற்போது குறைக்கப் பட்ட நிலையில், சென்னை மாநகரில்  வரிகளையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.56 குறைந்து ரூ.61.38 ஆகவும், டீசல் விலை ரூ.2.44 குறைந்து ரூ.51.34 ஆகவும் உள்ளது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74 க்கும் டீசல் ரூ.54 அல்லது அதற்கு மேலும் விற்பனை செய்யப் பட்டது.
கடந்த சில மாதங்களாகவே  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருவது குறிப்பிடத் தக்கதுஅதன் தொடர்ச்சியாக நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைந்தது. அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் வரிவிதிப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.56 விலை குறைந்து  ரூ.63.94 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.61.38 க்கு விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.44 குறைந்து ரூ.53.78 ஆக இருந்த டீசல் ரூ.51.34 க்கு விற்கப்படுகிறது. இந்த விலைகுறைப்பின் மூலம் கடந்த ஆகஸ்ட்  மாதம்  முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69-ம் டீசல் விலை ரூ.10.71-ம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இப்போது வரை 9 ஆவது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 5 ஆவது முறையாகக்  குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைக்கப்பட்டது.
 
 
ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் நேரத்தில், இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தொடர்ந்து உயர்த்தப்படுவது கவனிக்கத் தக்கது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி நேற்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.00 வரை குறைந்திருக்கும்.
மத்திய அரசின்  கலால் வரி உயர்வு  காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் முழுமையான பயன்களை மக்களால் அனுபவிக்க முடியவில்லை என்பது கண்கூடான விஷயம்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பிறகு கடந்த 2 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு ரூ. 7.75  ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6.50 ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.78,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது அரசிற்குத் தான் மகிழ்ச்சியளிக்கும். மாறாக, மக்களுக்கு இதே அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதே உண்மை என்று எதிர்க் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. 

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை 4.1% என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதை சமாளிப்பதற்கு கூடுதல் வருவாய் தேவைப்படுவதால் தான் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு  விளக்கம் அளிக்கிறது. அரசின் வருவாயை அதிகரிக்க வேறு  வழிகளை ஆராயவேண்டும் என்பது சாமானியனின் எதிர்பார்ப்பு.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மீதான விலைகளை உயர்த்த வேண்டுமா? என்று மத்திய அரசு ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது அதற்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விலை கொடுத்த மக்களுக்கு, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதன் பயன்களை அனுபவிக்கவும்  வாய்ப்பு தரப்படவேண்டும். இல்லையெனில் விண்ணை முட்டி கண்ணைக் கட்டும்  விலைவாசியைக் கட்டுப் படுத்த முடியவே முடியாது.
ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசிக் கொடுமைக்கு முடிவில்லாமலே போகும். விலை குறைப்பால் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டிய தருணம் இது. 



No comments:

Post a Comment