சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jan 2015

24 மணி நேரத்தில் தானாக அழியும் புத்தகம்!புதிய புத்தகம் பற்றிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதில் மேலை நாட்டு எழுத்தாளர்களுக்கு நிகர் அவர்களே தான். அதிலும் ஆன்லைன் யுகத்தில் புத்தகத்தின் டிஜிட்டல் தன்மையை அழகாக பயன்படுத்திக்கொள்ளும் கலையிலும் அவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே மர்ம கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங் போன்றோர் மின்னூலை பலவகையில் புதுமையாக பயன்படுத்தியிருக்கும் நிலையில், பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் பேட்டர்சன், தனது புதிய நாவலுக்காக தானாக அழியும் புத்தகத்தை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.நேர்த்தியான கதைகளுக்காக அறியப்படும் பேட்டர்சன்,  'பிரைவட் வேகாஸ்' ( Private Vegas) எனும் பெயரில் புதிய நாவலை எழுதியிருக்கிறார். ஏற்கனவே பல பெஸ்ட் செல்லர் நாவல்களை எழுதியுள்ள இவரது இந்த நாவல்வரும் 26 ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் ஒரு பிரதியை முன்கூட்டியே அதிர்ஷ்டசாலி வாசகருக்கு விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறார். இந்த புத்தகத்தை அந்த வாசகர் 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட வேண்டும். ஏனெனில் 24 மணி நேரத்திற்கு பிறகு அந்த புத்தகம் தானாக அழிந்துவிடும். 

எல்லாம் சரி இந்த ஒற்றை புத்தகத்தின் விலை எவ்வளவு தெரியுமா? அதிகம் இல்லை, 294,038 டாலர்கள் தான். ஆனால் இந்த தொகையை செலுத்தினால் இன்னும் அறிவிக்கப்படாத ஒரு இடத்திற்கு விமானத்தில் சென்று நாவலாசிரியர் பேட்டர்சனுடன் விருந்து சாப்பிடபடி புத்தகத்தை படித்து மகிழலாம். ஆனால் 24 மணி நேரத்தில் முடித்து விட வேண்டும். அதன் பிறகு தானாக அழியும் புத்தகத்தின் கதையை கச்சிதமாக முடித்து வைக்க வெடிகுண்டு நிபுணர் குழுவுக்கு கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேட்டர்சனின் அதி தீவிர ரசிகர்கள், நாவலை முன்கூட்டியே படிக்க துடிப்பார்கள் என்றாலும், கிட்டத்தட்ட 3 லட்சம் டாலர்களை எல்லோராலும் கொடுக்க முடியுமா என்ன?

அந்த கவலையே வேண்டாம். அதிக தொகை தர முடியாது என நினைக்கும் வாசகர்கள் நாவலின் இபுத்தகத்தை முன்கூட்டியே பெற்று படிக்கலாம். இந்த மின்னூல் வடிவம் இலவசம்தான் என்றாலும் மொத்தம் ஆயிரம் புத்தகங்கள்தான் இப்படி வழங்கப்படும்.
இவற்றுக்கான ரகசிய குறியீடு முதலில் ஆன்லைனில் அளிக்கப்படும் . அதை பெறும் வாசகர்கள் புத்தகத்தை மின்னூலாக படித்து மகிழலாம். மின்னூலும் 24 மணி நேரத்தில் மாயமாகிவிடும் .
இப்படி முன்கூட்டியே மின்னூலை பெறும் வாசகர்களுக்கு வாசிப்பு செயலி ஒன்றும் அளிக்கப்படும் . அதன் மூலம் தங்கள் வாசிப்பை கணக்கிடலாம் என்பதுடன், மற்ற வாசகர்கள் எந்த நிலையில் இருக்கின்ற்னர் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இலவச மின்னூலுக்கான ரகசிய குறியீடு வழங்குவதற்காக என்றே http://selfdestructingbook.com/#home எனும் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏதோ வீடியோ கேமுக்கான இணையதளம் போல அது படு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏற்கனவே ரகசிய குறியீடு பெற்றவர்களின் பெயர் அதில் வரைபடத்தில் காட்டப்படுகிறது. ரகசிய குறியீடு இல்லாவிட்டாலும் மற்றவர்கள் எப்படி படிக்கின்றனர் என்பதை பார்த்து கொண்டிருக்கலாம்.

இது தவிர நாவலின் குறிபிட்ட சில அத்தியாயங்களை தனது இணையதளம் மூலம் ஏற்கனவே இலவசமாக வழங்கியிருக்கிறார். இதெல்லாம் இல்லையா? 26 ம் தேதி நாவலை வாங்கி படித்துப்பார்க்கலாம்.

டிஜிட்டல் யுகத்தில், புதிய புத்தகம் தொடர்பான ஆர்வத்தை வாசகர்கள் மத்தியில் எப்படி எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதற்கான வழியை ஜேம்ஸ் பேட்டர்சன் காட்டியுள்ளார்.

ஜேம்ஸ் பேட்டர்சனின் இணையதளம்: http://www.jamespatterson.com/index.php
No comments:

Post a Comment