இலக்கில்லாமல் பறக்கும் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிய வேண்டிய குழந்தைகளின் சிறகை ஒடித்து... வகுப்பறைக்குள் அடைத்து வைத்து பாடங்களைச் சுமத்தி மழலை குணத்தை மரணிக்கச் செய்து விடுகிறது, நமது கல்விமுறை. வாத்தியார் சொல்லிக் கொடுப்பதை வாந்தி எடுக்கும் சமகாலக் கல்வி முறைகளுக்கு மத்தியில், குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப விளையாட்டாக பாடம் கற்றுக் கொடுக்கும் வாழ்வியல் பள்ளிகளும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றன. குழந்தைகள் குஷியோடு கல்வி கற்கும் அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான் திருவண்ணாமலை அருகில் கணத்தம்பூண்டி கிராமத்தில் அமைந்திருக்கும் 'மருதம் பண்ணைப் பள்ளி’.
வழக்கமான பாடங்களுடன், விவசாயம், கைவினைத்தொழில், விதவிதமான விளையாட்டுகள்... என சொல்லிக்கொடுப்பதன் மூலமாக, 'பாடம் கற்கிறோம்’ என்கிற எண்ணமே இல்லாமல் விளையாட்டுப் போக்கில் படித்துக் கொண்டிருக்கிறார்கள், குழந்தைகள். பசுமையான நெல் வயல்கள், மண்ணால் கட்டப்பட்ட பசுமைக் கட்டடங்கள், மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்கள், விளையாடி மகிழும் குழந்தைகள்... என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த பள்ளியில் ஆஜரானோம்.
பள்ளியைப் பற்றி விளக்கினார், தாளாளர்களில் ஒருவரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபேட்ரிக் என்கிற கோவிந்தா.
பாகுபாடு பார்ப்பதில்லை!
''அருண், லீலா, பூர்ணிமா, ஆலீஸ் இவங்களோட நானும்னு ஐந்து பேர் சேர்ந்து, 2009-ம் வருஷம் இந்தப் பள்ளியைத் தொடங்கினோம். முதல் கட்டமாக வேடியப்பனூர் கிராமத்தில் 20 மாணவர்களோடு வாடகைக் கட்டடத்தில் பள்ளியை ஆரம்பித்தோம். பிறகு நண்பர்கள், தன்னார்வலர்களின் உதவியோடு 'தி ஃபாரஸ்ட் வே’ என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி... கணத்தம்பூண்டியில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி, பள்ளிக்குத் தேவையான நிரந்தரக் கட்டடங்களைக் கட்டினோம். சிமெண்ட் பயன்படுத்தாமல், சுட்ட செங்கல், சுண்ணாம்பு, பாறைகள் மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றை வைத்தே கட்டி, 2011-ம் ஆண்டு இங்கே வந்தோம்.
எங்களின் நோக்கம்... எல்லாவிதமான மக்களுக்கும் கல்வி கொடுப்பதுதான். வெள்ளைக்காரர், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடுகள் பார்ப்பதில்லை. ஏழைக் குழந்தைகளிடம் பள்ளிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. மற்றவர்களிடம் பள்ளிச் செலவுக்காக குறைவான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறோம். தற்சமயம் 44 மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள் இருக்கிறோம்'' என்று முன்னுரை கொடுத்த கோவிந்தா, தொடர்ந்தார்.
விளையாட்டு மூலம் கல்வி!
'பெரும்பாலான பள்ளிகள் வழக்கமான பாடத்தோடு, வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை ஊறுகாய் போலத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள். நாங்கள் இயற்கை விவசாயம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியம்... என அனைத்தையும் பாடமாகவே இணைத்திருக்கிறோம். மேலும், மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியாக இல்லாமல் களப்பயிற்சியாகவே கற்றுக் கொடுக்கிறோம். அதனால், மாணவர்கள் பாடத்தைப் புரிந்து கொள்வதுடன், உணரவும் முடிகிறது. 12 வயது வரையுள்ள குழந்தைகளைச் சுதந்திரமாக, இயற்கையோடு இயங்க விடுவதால், வருங்கால வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.
நாங்கள் மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம். மூன்றரை வயது முதல், ஐந்தரை வயது வரை; 6 வயது முதல் 8 வயது வரை (யங்கர் குரூப்); 8 வயதுக்கு மேல் (மிடிலேஜ் குரூப்) என்று பிரித்து வைத்திருக்கிறோம். முதல் பிரிவிலிருக்கும் குழந்தைகள... எழுத்துகளை எழுதச் சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. விளையாட்டு மூலமாகவே வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்கும் முறையை வைத்திருக்கிறோம். தினமும் காலையில் 'நேச்சர் வாக்’ என்ற பெயரில் செடிகள், மரங்கள், காய்கறிகள், பறவைகள் என எல்லாவற்றையும் காட்டி, தொட்டு உணரச் செய்கிறோம். அவர்கள் எண்ணம்போல இங்கு விளையாடலாம், தூங்கலாம், மற்றவர்களுக்கு கதை சொல்லலாம், படம் வரையலாம்'' என்று ஆச்சர்யப்படுத்திய கோவிந்தா, தொடர்ந்தார்.
இங்கு வகுப்புகள் இல்லை!
''எங்கள் பள்ளியில் தற்போது மாநில அரசின் சமச்சீர்க்கல்வி ஆங்கிலப் பாடத்திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு வரை நடத்துகிறோம். வகுப்பறை, மரத்தடி என மாணவர்கள் விரும்பிய இடத்தில்தான் பாடம் நடத்துவோம். எல்லா மாணவர்களுக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் தோட்ட வேலைக்கான வகுப்புகள் உண்டு. அதில் பாத்தி அமைப்பது, நடவு செய்வது, நெல் நடவு, ஜீவாமிர்தம் தயாரிப்பது... என பலவிதமான வேலைகளைச் செய்கின்றனர். 'மிடிலேஜ் குரூப்’ மாணவர்களுக்கு எனத் தனித்தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறோம். அதில் ஒவ்வொருவரும், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய்... என பலவிதமான காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள். மூன்று ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளைச் சம்பா, பொன்னி நெல் ரகங்களை சாகுபடி செய்கிறோம். நெல் நடவு சமயத்தில் மாணவர்களுக்காக கொஞ்சம் இடத்தை ஒதுக்கி, அவர்களை நடவு செய்யச் சொல்கிறோம். அந்தப் பயிர் வளர வளர மாணவர்கள் அதிகமாக உற்சாகமடைகின்றனர்.
அனைத்தையும் கற்றுத்தரும் கள ஆய்வு!
விரும்பும்போது மாட்டுவண்டிப் பயணம், மாடுகள் மூலம் உழவு... என மாணவர்களே செய்து பார்க்கிறார்கள். வெள்ளிக்கிழமைதோறும், காடுகள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு விதம்விதமானப் பறவைகளைப் பார்த்து உணர்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம் 25 பறவைகளின் பெயர்களாவது தெரியும். மேலும், மாணவர்களை நேரடியாக ஏரிப்பாசன முறை, கோயில்கள், அவற்றைச் சுற்றியுள்ள கடைகள், காய்கறிச் சந்தைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும்படியாக கள ஆய்வுக்கும் உட்படுத்துகிறோம். தண்ணீர், நெல், சோழர்கள், பாண்டியர், பல்லவர் எனப் பல தலைப்புகளில் ஆய்வு செய்யவும் கற்றுக் கொடுத்திருக்கிறோம்'' என்ற கோவிந்தா,
''இந்த அத்தனை முயற்சிக்கும் உறுதுணையாக இருந்து மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது இவர்கள்தான்'' என பள்ளி தாளாளர்களில் ஒருவரான அருண் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா ஆகியோரைக் காட்டினார்.
இயற்கையை நேசி..! உலகம் அழியுமா யோசி!
''இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, மூணு வருஷம் மும்பையில வேலை பார்த்தேன். அந்த வாழ்க்கைப் பிடிக்காம, சென்னைக்கே திரும்பிட்டேன். என்னோட தாத்தா, ரமண மகரிஷி கூடவே இருந்தவர். அதனால நான் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போவேன். அந்த சமயங்கள்ல மலையில் இருக்கும் மரங்கள், பறவைகளைப் பார்த்து, ஆசிரமத்திலேயே சேவை செய்ய அனுமதி கேட்டேன். 'சின்ன வயசு... இப்ப வேண்டாம்’னு சொல்லி, கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் சார்புல நடத்தப்படுற 'தி ஸ்கூல்’ல தோட்டக்கலை டீச்சரா சேர்த்து விட்டாங்க. இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டு, மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.
'டைம் வித் நேச்சர்’னு ஒரு திட்டத்தை உருவாக்கி, மரங்கள், பறவைகள் பத்தி சொல்லிக் கொடுத்து இயற்கையை நேசிக்க வெச்சேன். சென்னையில ஸ்பென்ஸர், மால்கள், ஏ.சி.னு பழக்கப்பட்ட பணக்காரக் குழந்தைகளுக்கு இது உற்சாகத்தைக் கொடுத் துச்சு. ஒருமுறை ஆரோவில் போகும்போது, கோவிந்தாவை சந்திச்சேன். அவர், திருவண்ணாமலை மலையில மரம் நட்டு 'சூழல் பூங்கா’ உருவாக்கினதைப் பத்திச் சொன்னார். 'வாங்களேன்... ஒரு ஸ்கூல் நடத்தலாம்’னு கூப்பிட்டார். உடனே நானும் என் மனைவியும் திருவண்ணாமலைக்கு வந்துட்டோம்'' என்றார், அருண்.
இதுதான் வாழ்க்கைக் கல்வி!
அவரைத் தொடர்ந்த பூர்ணிமா, ''எங்க மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க, ரூடால்ஃப் ஸ்டெய்னர் (Rudolf steiner) மற்றும் மாண்டிஸோரி (Montessori)ஆகிய இரண்டு முறைகளைப் பயன்படுத்துகிறோம். சில மாணவர்களுக்குப் படிக்கும் குறைபாடுகள் இருக்கும். அதைத் தகுந்த முறைகளோடு சொல்லிக் கொடுக்கும்போது, எல்லா மாணவர்களைப் போலவே அவர்களும் போட்டி போடுகின்றனர். பொதுவாவே, மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்து பயப்படக்கூடாது. இங்கு இருக்கும் எந்த மாணவனும் ஆசிரியரைப் பார்த்து பயப்படுவதில்லை. எல்லோரிடமும் சகஜமாக பேச கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
ஆண்டுக்கு ஒரு முறை, வெளியில் இருந்து பானை செய்யும் கலைஞர், சிலை செய்யும் சிற்பி, பனை ஓலையில் பொருட்கள் செய்ய கற்றுக்கொடுப்பவர், வாழை நார் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொடுப்பவர்களை அழைத்து வந்து, கை வேலைகளைக் கற்றுக் கொடுக்கிறோம். இதன்மூலமாக, மாணவர்களே பலவிதமான பொருட்களை உருவாக்குகிறார்கள். அந்தப் பொருட்களை 'மருதம் மேளா’ நடத்தி விற்பனை செய்கிறோம். மேலும், ஓவியம் வரைவது, நாடகம் நடிப்பதிலும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மாலை நேரத்தில், பள்ளிக் கட்டடத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள பாறைகளைப் பயன்படுத்தி, உச்சிக்கு ஏறும் 'ராக் கிளைம்பிங்’ மலையேறும் பயிற்சியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 'போல்கர்-உத்தலார்’ தம்பதி கற்றுக் கொடுக்கிறார்கள்'' என்று உற்சாகம் பொங்கச் சொன்னார்.
'ஏட்டுச்சுரைக்காய்'களை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு நடுவில், நிஜ சுரைக்காய்களை உற்பத்தி செய்யவே கற்றுத் தரும் இந்தப் பள்ளியைப் பற்றி பெருமிதத்தோடு யோசித்தபடி திரும்பி நடந்தோம்!
தொடர்புக்கு,
அருண்,
செல்போன்: 97898-64166.
அருண்,
செல்போன்: 97898-64166.
No comments:
Post a Comment