சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

முறைகேடுக்கு எதிராக வித்தியாச கெட்டப்பில் நூதன போராட்டம் நடத்திய புதுச்சேரி வாலிபர்!


புதுச்சேரி அரசின் பாப்ஸ்கோ நிறுவனத்தில் முறைகேடாக ஊழியர்கள் சிலரை பணி நிரந்தரப்படுத்திய பாப்ஸ்கோ தலைவர், மேலாண் இயக்குனர், ஆலோசகர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நூதனமுறையில் போராடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

ஒருபக்கம் மீசை, ஒருபக்கம் தலைமுடியை மழித்து, வித்தியாச கெட்டப்பில் இந்த நூதனப் போராட்டத்தை புதுச்சேரி வாலிபர் ஜோதிமுருகன் நடத்தியுள்ளார்.


இந்த போராட்டம் குறித்து ஜோதி முருகன் கூறுகையில், "புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனத்தை கடந்த 1990ம் ஆண்டு அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் பெத்தபெருமாள் தொடங்கிவைத்தார். அதன் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர் இப்போதைய முதல்வர் ரங்கசாமி. இதன்காரணமாக பாப்ஸ்கோவில் எந்த நஷ்டம் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல், அதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கு சுமார் 1300 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் முதல்வரின் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்காலிகப் பணியாளர்களாக பணிக்குச் சேரும் இவர்கள் பின்னர் பணிநிரந்தரம் செய்யப்பட்டு வருகிறார்கள். பணி நிரந்தரம் செய்யப்படுபவர்கள் குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும். இதற்காக 10ஆம் வகுப்பு படிக்காதவர்களும், முழுமை செய்யாதவர்களும் சிறப்பு தேர்வு முறையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ம் ஆண்டில் சுமார் 37 பேர் பணி நிரந்தரப்படுத்தப்பட்டார்கள். இப்படி பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்களில் பலர் பத்தாம் வகுப்பு முடிக்காதவர்கள் என்பதோடு, சிலர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக போலியான கல்விச் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதனை ஆய்வு செய்யாமல் அவசர அவசரமாக பணியாணை வழங்கப்பட்டுள்ளதுஎன்று அதிர்ச்சியைக் கொடுத்தவர், சில சான்றிதழ் நகல்களைக் காட்டிப் பேசினார்.

இந்த பணியாணை வழங்கப்பட்ட பிறகு கடந்த 3.9.2013ல் நான் பாப்ஸ்கோ நிர்வாகத்தினரிடம் போலி சான்றிதழ் தொடர்பாக புகார் மனு அளித்தேன். ஆளுநர், தலைமை செயலாளர், துறை செயலாளர், துறை இயக்குநர் ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளேன். பாப்ஸ்கோ நிர்வாகமோ இந்த புகாரை  8 மாதங்கள் கழித்து புலனாய்வு துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புலனாய்வுத்துறை தலைமை செயலரிடம் மீண்டும் போலி சான்றிதழ் குறித்து புகார் மனு அளித்துள்ளேன்.

பாப்ஸ்கோ நிர்வாகம், வேண்டுமென்றே புலனாய்வுத் துறையிடம் காலதாமதமாக ஆய்வு மேற்கொள்ளச் சொல்லிவருகின்றனர். காரணம், அந்த சான்றுகள் போலி என்பது தெரிந்தால் தலைவர் உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்பில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இதனால் புலனாய்வுத்துறையும் கடந்த 15 மாதமாக சான்றிதழ்களை ஆய்வு மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்கின்றனர்.


பாப்ஸ்கோ தலைவராக தமிழ்செல்வன், மேலாண் இயக்குநராக மோகன் தாஸ், ஆலோசகராக சீதாராமன் இவர்கள் பொறுப்பேற்றபின் பாப்ஸ்கோவின் செயல்பாடு என்பது அதிருப்திகரமாகவே உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், 1300 ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ரங்கசாமி சிறப்புக் கவனமெடுத்து இந்த நிறுவனத்தை செயல்படுத்தக் கோரியும் வலியுறுத்தி ஒரு பக்கம் மீசையுடன், பாதி மொட்டையுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டேன். எனது போராட்டத்தை தடைசெய்யும் விதமாக போலீசார் என்னைக் கைது செய்து பின்னர் விட்டுவிட்டனர். இந்த போலிசான்றிதழ் விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.

ஜோதிமுருகன் கிளப்பியிருக்கும் விவகாரத்தைப் பார்த்தால், போதைக்கு மட்டுமல்ல போலிசான்றிதழுக்கும் புதுச்சேரிதான் என்றாகிவிடுமோ என்னவோ?





No comments:

Post a Comment