இப்போதே காலரைத் தூக்கி விட்டுக்கோங்க. இந்த ஆண்டின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்தியர் ஒருவரின் கண்டுபிடிப்பு பரபரப்பாகப் பேசப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகமான ஸ்டான்ஃபோர்டில் உதவிப் பேராசிரியராக பணிபுரிபவர் மனு பிரகாஷ். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் கான்பூர் ஐஐடியில் படித்தவர். தற்போது பயோ இன்ஜினீயரிங் துறையின் இளம் விஞ்ஞானியாக இருக்கும் மனுபிரகாஷ் இந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னுடைய புதிய கண்டுபிடிப்பாக பேப்பர் மைக்ராஸ்கோப்பை உருவாக்கி இருக்கிறார்.
இந்திய மதிப்பில் வெறும் 30 ரூபாய்களில் இதைத் தயாரிக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பே. அட்டைகள் நடுவே ஒட்டப்பட்டிருக்கும் இரண்டு லென்ஸ்கள்தான் அந்த மைக்ராஸ்கோப். ஜப்பானில் 'ஒரிகாமி’ என்றால் அட்டைகளை மடித்து பொம்மை போன்ற உருவம் செய்து விளையாடுவது என்று பொருள். அந்த விளையாட்டின் அடிப்படையில் இந்த மைக்ரோஸ்கோப்பும் அட்டைகளை மடிப்பதன் மூலம் நுண்ணுயிரிகளைக் காணலாம்.
இதைக் கண்டுபிடித்த மனுபிரகாஷ், ''காய்ச்சல் வந்தால் அது சாதாரணக் காய்ச்சலா, மலேரியா காய்ச்சலா என்று அறிந்துகொள்வதற்குள் ஆயிரமாயிரம் குழந்தைகள் இந்தியாவிலும் ஆப்பிரிக்கா மற்றும் கீழை நாடுகளிலும் உயிரிழக்கிறனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் 6 வகையான நுண்கிருமிகளை ஒரு சொட்டு ரத்தத்திலிருந்து கண்டுபிடிக்க முடியும். இன்றைக்கு குறைந்தபட்ச தரத்துடன் கூடிய மைக்ராஸ்கோப் 10,000 ரூபாய். ஆனால் என் தயாரிப்பைப் பெட்டிக்கடைகளில்கூட விற்கலாம். நைஜீரியாவில் மலேரியாவினால் உடன்பிறந்தோரை இழந்த மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் இந்த மைக்ராஸ்கோப்பின் மூலமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களில் இருக்கும் வைரஸைப் பார்த்தனர். எனது கண்டுபிடிப்பு அதன் நோக்கத்தை எட்டிவிட்டதாக உணர்ந்தேன்'' என்கிறார்.
அமெரிக்காவில் வெளியாகும் 'பாப்புலர் சயின்ஸ்’ இதழ், 2014-ன் சிறந்த 10 கண்டுபிடிப்புகளில் முதன்மையானதாக இந்த மைக்ராஸ்கோப்பை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார் மனுபிரகாஷ்.
மனுபிரகாஷுக்கு ஒரு மனு போடுங்க இந்தியன் ஆப்பீஸர்ஸ்!
No comments:
Post a Comment