தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்," இன்றைய அரசியல் சூழல் எப்படி உள்ளது, எப்படி இருக்க வேண்டும்...?" என்ற ரீதியில் தனது ஆதங்கத்தை தனது தீர்ப்பில் வெளிப்படுத்தி உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
அரசியல் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்களுக்கும் சேர்த்து அவர் நடத்தி உள்ள பாடமாகவே அந்த தீர்ப்பு உள்ளது.... திமுக பொருளாளர் ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, களியக்காவிளை அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் 20 நிமிடம் ஓய்வெடுத்தார். அது தேர்தல் விதி மீறல் என்று காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரியிடம் அப்பகுதி அதிமுக செயலாளர் கே.ஜி.உதயக்குமார் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கே.ஜி.உதயக்குமார் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் வழங்கினார். புகார் தாரரின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், தீர்ப்பில் "கட்சித் தலைமையிடம் நற் பெயர் பெற, விளம்பர நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு இது" என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அந்தத் தீர்ப்பில், இன்றைய அரசியல் பற்றி அவர் எடுத்துரைத்த கருத்துக்கள் இன்றைய நிதர்சனத்தை பறைசாற்றும் வரிகள். அந்த வரிகள்.... "அரசியல் விளையாட்டுகள் இன்று எப்படி இருக்கிறது, என்பதற்கு இந்த வழக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வெறுப்பு அரசியல் என்றால் என்ன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சிகளை எதிரி கட்சி என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சி என்பதும் மக்களுக்கான கட்சி தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுதெல்லாம், ஆட்சிமாற்றம் ஏற்படும்போது பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்வதில்லை. ஏனென்றால் கட்சியின் தலைவர்கள் மாற்றுக் கட்சித் தலைவர்களை எதிரிகளாகக் கருதுகின்றனர். தலைவர்கள் வழியில் தொண்டர்களும் அப்படியே கருதுகின்றனர். ராஜாஜி-பெரியார், காமராஜர்-அண்ணாதுரை காலத்தில் இந்த அவலநிலை இல்லை. அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை 'மாற்று கட்சி தலைவர்' என்ற முறையில் பார்த்தனர்; பழகினர். அந்த ஆரோக்கிய அரசியல் அவர்களோடு முடிந்துவிட்டது. ஆனால் இன்று, அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் அரங்கத்திற்குள் நடக்கும் உட்கட்சி கூட்டங்களில் மற்றுக் கட்சி தலைவர்களைப் பற்றி அநாகரீகமாகப் பேசுகின்றனர். அதை மூத்த தலைவர்கள் ரசிக்கின்றனர். தன்னுடைய தொண்டர்களில், யார் எதிர் கட்சித் தலைவரை மிக அதிகமாக இழிவாகப் பேசினாரோ, அவருக்குப் பரிசுகளும் பதவிகளும் கொடுக்கப்படுகின்றன. இந்தப் போக்கு கட்சிக் கூட்டங்களையும் தாண்டி ஆட்சி அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் எதிரொலிக்கிறது. நாகரீக அரசியல் என்பது வரலாறாக மாறிவிட்டது. கட்சிகளிடையே வன்மம், பகை அதிகரித்துள்ளதால் எப்பொழுதும் ஒரு விதமான பதற்ற சூழ்நிலை நாட்டில் நிலவுகிறது. இதுதவிர பெரும்பாலான கட்சிகளில் வம்சாவளி வாரிசு அரசியல் முறை நிலவுகிறது. தலைவரின் வாரிசுகள் தான் அடுத்த தலைவராகின்றனர். கட்சிகளுக்கு இடையில் நிலவும் 'வெறுப்பு அரசியல்' என்பது போல உட் கட்சிக்குள்ளும் அந்த நிலை இருக்கிறது என்பதை, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒரு கட்சியின், உட்கட்சித் தேர்தலில் நடபெற்ற மோதல்கள் நமக்கு எடுத்துக்காட்டின. இவையெல்லாம் நாட்டிற்கும், நாட்டை வழிநடத்தும் ஜனநாய கத்திற்கும் நல்லதல்ல. எனவே நாகரீக அரசியலை சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. எதிர்க்கட்சியை விமர்சிக்கும்போது ஒழுக்கம், மாண்பு, சுயக் கட்டுப் பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை, தமது தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற வழக்குகளை, இதுபோன்ற அசிங்கங்களைத் தடுக்க முடியாது.
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆணையமாக மட்டுமல்லாமல், இதுபோன்ற அவதூறு பேச்சுக்கள், நடத்தைகளை தடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அநாகரீக அரசியல் செய்பவர்களை இடைநீக்கம் செய்ய முன்வர வேண்டும். அதன்மூலம் நேர்மையான அரசியலுக்கு வழி
பிறக்கும். வெறுப்பு அரசியல், வெறுப்பு பேச்சு, அவதூறு பேச்சு ஆகியவற்றை தவிர்த்து அரசியல் கட்சி தலைவர்கள் செயல் பட்டு, ஜனநாயக வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த ஜூலை மாதம் இலங்கை ராணுவ பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் குறித்து மோசமாக சித்தரிக்கப்பட்ட கார்ட்டூன் ஒன்று வெளியானது. அந்த சமயத்தில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கண்டனக்குரல் எழுப்பினர். அதனால் இலங்கை அரசு அந்த கட்டுரையை உடனடியாக நீக்கிவிட்டு, பிரதமர் மற்றும் முன்னாள் முதல்வரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது. அதே போன்று அரசியல் கட்சிகளிடையேயான ஒற்றுமை தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்." |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
9 Jan 2015
எதிர்க்கட்சி என்பது எதிரி கட்சியல்ல: சாட்டை சுழற்றிய நீதிமன்றம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment