'அவதார்’ ட்ரெய்லர் முதல் 'டங்கா
மாரி ஊதாரி’ குத்துப்பாட்டு வரை
அட்டகாசமாக ரீமிக்ஸ் செய்து யூடியூபில் வெளியிட்டு ஆன்லைன் வாசிகளின் 'லைக்ஸ்’ மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் 'ரீமிக்ஸ் மாமா’. யார் எனத் தேடினால், 20 வயது இளைஞன்தான் இந்த மாமா.
''யாரு பாஸ் நீங்க? என்ன பண்றீங்க?''
''ஜெகன் ஒரிஜினல் பெயர். சென்னை குருநானக் கல்லூரியில் ஃபைனல் இயர் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு இருக்கேன். ஹாலிவுட் படங்கள் எல்லாம் தமிழ் டப்பிங்கில் பார்க்கும்போது சிலர் 'அது நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஒடுங்க’னு சீரியஸ் சீனைக்கூட காமெடியாக்கி கடுப்பைக் கெளப்பிக்கிட்டு இருந்தாங்க. ஒரு படத்துல பாஸ்டர்ட்னு கெட்ட வார்த்தையை தமிழ்ல டப் செய்றேன்னு 'யூ ப்ளடி பாஸ்கர்’னு டப் செய்ய, அதுக்கப்புறம் நான் இங்கிலீஷ்லேயே படம் பார்க்க ஆரம்பிச்சேன். சில ஹாலிவுட் படங்கள் பார்த்தப்போ, இந்த சீன்ல நம்ம நடிகர்கள் நடிச்சா செமையா இருக்கும்னு தோணுச்சு. உடனே ஹாலிவுட் பட ட்ரெயிலர் எல்லாம் தமிழ் பட ட்ரெயிலர்களோட ரீமிக்ஸ் செஞ்சு யூடியூப்ல போட்டேன். வீடியோவைப் பார்த்தவங்க எல்லோரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. ரொம்ப குஷியாகி, ரீமிக்ஸ் செய்றதுல தீவிரமா இறங்கிட்டேன். ஒன்றரை வருஷத்துல 28 ரீமிக்ஸ் வீடியோ யூடியூப்ல அப்லோடிருக்கேன்.''
''ரீமிக்ஸ் மாமா யாரு வச்ச பேர்?''
'' ஒரு விஷயத்துக்கு டைட்டில் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். நாம என்ன சொல்றோங்கிறதை சின்னதா டைட்டில் சொல்லிடணும். லோக்கலா ஒரு பேர் வைக்கலாம்னு தோனுச்சு. 'ரீமிக்ஸ் மாமா’னு முடிவு பண்ணிட்டேன்.''
''காலேஜ் படிச்சுக்கிட்டே எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது?''
'' நேரம் எல்லாம் பிரச்னையே இல்ல. எனக்கு ஒரு வீடியோ ரீமிக்ஸ் பண்ண ஒரு நாள் போதும். காலேஜ் லீவுல ரீமிக்ஸ் வேலை பண்ணுவேன். இன்னிக்கி வரைக்கும் எங்க காலேஜ் ப்ரொஃபசருக்குக்கூட நான் இதெல்லாம் செய்றது தெரியாது. என் வீட்ல யூடியூப்ல இப்படி ஒரு வொர்க் பண்ணி அனுப்பியிருக்கேன், இவ்ளோ ரெஸ்பான்ஸ் வருதுனு சொன்னவுடனே புரிஞ்சுக்கிட்டாங்க. இப்போ நான் அவங்ககிட்ட ரீமிக்ஸ் பண்ண வீடியோவைக் காட்டிட்டுதான் நெட்லேயே போடுறேன்.''
''நெட்ல எப்படி உங்க வீடியோ வைரல் ஆச்சு?''
''நாம என்னதான் நல்லா வொர்க் பண்ணியிருந்தாலும் நாலு பேருக்கு அதை தெரியவைக்க விளம்பரம் பண்ணியே ஆகணும். ஆரம்பத்தில் விகடன் ஆன்லைன் ஃபேஸ்புக் பேஜ்ல ஆரம்பிச்சு எந்த குரூப் எந்த பேஜா இருந்தாலும் அங்கே போய் லிங்க் கொடுத்து கமென்ட் பண்ணிட்டு வந்துடுவேன். சில முகம் தெரியாத நண்பர்கள் ஷேர் செய்ய, யூடியூப்ல வீயூவ்ஸ் ஏறுச்சு.இப்பிடித்தான் கொஞ்சம் கொஞ்சமா லைக்ஸ் வந்துச்சு. இப்போ லட்சக் கணக்குல போகுது.''
'' சினிமா நடிகர்கள், ரசிகர்கள் யாரும் உங்களைத் திட்டலையா?''
'வாலு’ படத்துக்கு 'லவ் என்றவன்’ பாட்டுல வரிகள் எல்லாம் அட்ராசிட்டி ரகம். அந்தப் பாட்டுக்கு நான் ரீமிக்ஸ் செஞ்சேன். செம ஹிட். 'வாலு’ படக்குழுவிடம் இருந்து ஒரு நாள் போன் வந்துச்சு. என்னை நேர்ல பாக்கணும்னு சொல்லிருந்தாங்க. பயந்துட்டே போனேன். சிம்பு சார் கை குலுக்கிப் பாராட்டினார். 'வாலு’ படத்துலேயே ஒரு பாட்டுக்கு கான்செப்ட் தரச் சொல்லி சான்ஸ் கொடுத்தார். கான்செப்ட் அனுப்பினேன். நல்லாருக்குனு சொல்லிருக்காங்க. நானே எதிர்பார்க்காம சினிமாவில் ஒரு என்ட்ரி. எடிட்டிங்ல ஆண்டனி மாதிரி ஆகணும்னு கனவு. எனக்கு லைக் போட்ருங்க பாஸ்!''
No comments:
Post a Comment