சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jan 2015

விபத்தில் சிக்கிய காரில் கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுகள்!

விபத்தில் சிக்கிய காரில் இருந்து கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்தன.

கோவை பாலக்காடு பைபாஸ் சாலையில் நேற்று காலை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்தை நோக்கி ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரை யாசர் என்பவர் ஓட்டிச் சென்றார். காருக்குள் ஜாபர், ஜலீல் ஆகியோர் இருந்தனர். கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே அந்த கார் வேகமாக வந்து கொண்டு இருந்தபோது, எதிரே வந்த மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் செல்லும் 31 ஆம் எண் அரசு பேருந்துடன் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த யாசர், ஜாபர் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.

மோதிய வேகத்தில் காரின் முன்பக்க கதவு திறந்து கொண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்தன. அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மோதிய பஸ்சில் இருந்த பயணிகளும் காரில் இருந்து கட்டு, கட்டாக பணம் ரோட்டில் விழுந்து கிடப்பதை வியப்பாக பார்த்தனர்.

இந்த விபத்து குறித்தும் பணம் கட்டுகட்டாக ரோட்டில் விழுந்து கிடப்பது குறித்தும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுக்கரை போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த யாசர், ஜாபர் ஆகிய 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காரை அதிகாரிகளும், போலீசாரும் சோதனை செய்ததில் காரின் 4 பக்க கதவுகளில் ரகசிய அறை அமைத்து இருந்தது தெரியவந்தது. அந்த ரகசிய அறைகளை போலீசார் திறந்து பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், அதில் இருந்து சில கட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்து இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காருடன், பணத்தை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இது பற்றி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும், மதுக்கரை தாசில்தாருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும், காரில் இருந்த ஜலீல் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஈரோட்டில் உள்ள முஸ்தபா என்பவர் ஓட்டல் வைக்க கொடுத்தனுப்பிய பணம் என்று கூறி உள்ளார். ஆனாலும், போலீஸ் அதிகாரிகளின் தீவிர விசாரணையில், விபத்தில் சிக்கிய காரில் இருந்து கைப்பற்றியது, ஹவாலா பணம் என்றும், சேலத்தில் இருந்து இந்த பணத்தை கேரள மாநிலம் மலப்புரத்துக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

கட்டு, கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டதில் மொத்தம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரம் இருந்தது. இதனை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் அரபு நாடுகளில் உள்ளனர். அவர்கள், தங்கத்தை பரிமாற்றி அதற்கு ஈடாக ஹவாலா பணத்தை சேலத்தில் மாற்றுவதும் நடைபெறுகிறது. அந்த கும்பலிடம் இருந்து ஹவாலா பணத்தை பெற்று வரும்போது கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. ரோட்டில் விழுந்த ரூபாய் நோட்டு கட்டுகளை சில பொதுமக்கள் எடுத்து சென்றதாக கூறப்பட்டதை அடுத்து, அப்படி யாரும் பணத்தை எடுத்துச் சென்றார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


No comments:

Post a Comment