சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Jan 2015

தோனி ஓய்வு! கற்றுதரும் 5 மேலாண்மைப் பாடங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மேலாண்மைத் தத்துவங்களோடு அடிக்கடி ஒப்பிடப்படும் தோனியின் தலைமையைப்போல, அவரது ஓய்வும் மேலாண்மைப் பாடங்களோடு ஒத்துப்போகிறது. அவை, என்னென்ன என்பதைப் பார்ப்போம்!

1.நிர்வாகத்தில் தலைவரது முக்கியமான வேலையாகக் கருதப்படுவது நிர்வாகத்தை லாபகரமாக இயங்கவைப்பது மட்டுமல்ல, நிர்வாகத்தைத் தனக்குப் பின் தனக்கு நிகரான ஓர் ஆளிடம் ஒப்படைப்பது மற்றும் அவரை அந்த நிலைக்குத் தயார் செய்வது. திடீரென ஒருநாள் ஓய்வை அறிவித்தால் அதனைச் சமாளிக்கச் சரியான மாற்று நபரை அடையாளம் கண்டு வைத்திருப்பது. இதனைத்தான் தோனியும் செய்திருக்கிறார். தனதுஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த சரியான நபராக கோலியை அடையாளம் கண்டிருப்பது தொடங்கி, அவரது பேட்டிங் பாதிக்கப்படுகிறதா என்பதை இடையிடையே கோலிக்கு அளித்துச் சோதித்தும் பார்த்துள்ளார். அந்தப் போட்டிகளில் கோலியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் அவர், சரியான நபராக கோலியைத் தேர்ந்தெடுத்தது சிறந்த தலைவனுக்கு உரிய அடையாளத்தைக் காட்டுகிறது.

2.ஒரு விஷயத்தில் தன்னைவிடச் சிறப்பான நபர் வழி நடத்த இருக்கும்போது வீம்புக்கு என்று அந்த இடத்தில் இருக்காமல், தகுதியானவரை அந்தப் பணியில் நியமித்துவிட்டு, தனக்கு நன்றாகத் தெரியும் அடுத்த வேலையைக் கவனிப்பது நிர்வாகத்தில் மிக முக்கியமான பண்பாகக் கருதப்படுகிறது. அதனைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த முடியாமல் சிக்கிக்கொண்டு ஒருநாள் போட்டிகளிலும் கவனத்தைச் சிதறவிட வேண்டாம் என்று அவரது சிறந்த களமான ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார்.

3.அலுவலகத்தில் வயதானாலும் நன்றாகச் செயல்படுபவர்களும் இருப்பார்கள். அதேசமயம், வயதான காரணத்தால் நன்றாகச் செயல்பட முடியாமல் ஓய்வு காலம் வரை சரியாகப் பணி செய்ய முடியாமல் தவிக்கும் நபர்கள் நல்ல நிலையில் இருக்கும்போதே விருப்ப ஓய்வு பெறுவது உண்டு. அதைத்தான் தோனியும் செய்துள்ளார். 42 வயது வரை டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு நடுவே, 33 வயதில் ஓய்வை அறிவிக்கும் துணிச்சல் தோனியைத் தவிர யாருக்கும் இருக்காது.

4.நிதி மேலாண்மையில் போர்ட்ஃபோலியோ மேலாண்மை என்ற பிரிவு இருக்கும். அதில் தனக்கு லாபம் தரும் பிரிவுகளில் முதலீட்டை அதிகரித்தும், லாபம் தராத அல்லது அந்த முதலீடு பற்றிய போதிய அறிவு இல்லாத பிரிவுகளில் சிறந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்யமாட்டார்கள். அதேபோல் 15:1 என்ற விகிதத்தில் தோல்வியைத் தந்த டெஸ்ட் போட்டிகளைத் தவிர்த்து 50 சதவிகித வெற்றிகளையும், உலகக் கோப்பை போட்டிகளில் லாபம் தந்த ஒருநாள், டி20 போட்டிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது போர்ட்ஃபோலியோ மேலாண்மையுடன் ஒப்பிட வைக்கிறது.

5.நிர்வாகத்தின் அதிகபட்ச பதவிகளான சிஇஓ போன்ற பதவிகளில் இருக்கும் நபர், ஒருபோதும் தன்னைக் கீழிறக்கி அடுத்த நிலைகளில் உள்ள இடத்தில் வேலை செய்யமாட்டார் அப்படியே செய்தாலும் அது சிறப்பானதாக இருக்காது. அப்படி இருக்கும்போது வேலையில் அழுத்தம் உண்டாகி சிறப்பாகச் செயல்படாத நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதைத்தான் தோனியும் செய்திருக்கிறார். இப்படிச் செய்வது ஒரு விளையாட்டு வீரராக தவறு என பலர் கூறினாலும், மேலாண்மையில் ஒரு தலைவனுக்குரிய முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று.

வெற்றி, தோல்வி அனைத்திலும் ஒரே மனோபாவத்தை வெளிப்படுத்தும் கேப்டன் தோனி, தனது ஆட்டம், ஓய்வு இரண்டையுமே கூலாக அறிவித்து மிஸ்டர் கூல் என்பதை நிரூபித்துள்ளார்.No comments:

Post a Comment