சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jan 2015

அணுஅணுவாய் அமெரிக்கா! டெல்லி குலுங்க... குலுங்க...

பிரதமர் மோடிக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எதைச் செய்தாலும் பிரமாண்டமாக செய்ய வேண்டும். அதை, அதைவிட பிரமாண்டமாக விளம்பரப்படுத்த வேண்டும். தன் பதவியேற்பு விழாவுக்கு ஏழு நாட்டுத் தலைவர்களை அழைத்தவர் மோடி. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் 'வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்கு வருடா வருடம் சர்வதேச பிரபலங்களை அழைப்பார். இந்த முறை அவர் பிரதமராகிவிட்டதால் தன்னுடைய கெத்தைக் காட்டும் நோக்கத்தில் .நாவின் பொதுச் செயலாளர் பான் கி மூனையே அகமதாபாத் அழைத்திருந்தார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் குடியரசுதின விழா என்பதால்... கடந்த 65 ஆண்டுகளாக இல்லாத வகையில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதியையே இந்த விழாவுக்கு விருந்தினராக அழைத்துவந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, செய்தும் காட்டியிருக்கிறார் நரேந்திர மோடி.

விளம்பரங்களைத் தாண்டி விஷயத்துக்கு வருவோம். ஒபாமாவின் இந்த வருகையை ஒட்டி, கடந்த ஆறு வருட காலமாகக் கிடப்பில் இருந்த இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் புத்துயிர் ஊட்டியிருக்கிறார் மோடி.  இந்த அணுசக்தி ஒப்பந்தம் என்பது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்லக்குழந்தை. இந்திய நாடாளுமன்றத்திலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்பது நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தலானது என்று சொல்லி கம்யூனிஸ்ட்கள் தாங்கள் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்ள தன்னுடைய அரசாங்கத்தையே பிணையப் பொருளாக்கித்தான் மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார். மன்மோகன் சிங் கொண்டு வந்தபோது இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த பி.ஜே.பி இப்போது, 'இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸால் செய்ய முடியாததை நாங்கள் சாதித்துக் காட்டிவிட்டோம்!’ என்று வெற்றி முரசு கொட்டுகிறது.
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதில் இருந்தே அமெரிக்கா உள்ளிட்ட அணுசக்தி வல்லமை கொண்ட நாடுகள் எல்லாம் அணுசக்தி விஷயத்தில் இந்தியாவை தீண்டத்தகாத நாடாகவே நடத்திவந்தன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து அணுசக்தி ரீதியான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் தொடர்ந்து தனித்தீவாகவே இருப்பது, எதிர்கால இந்தியாவையே இருட்டுக்குள் தள்ளிவிடும் என்று சொல்லிவந்த, மன்மோகன், 'மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களால் மட்டும் இயலாது. வருங்காலத்தில் அணுசக்திதான் நாட்டின் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் சொன்னார். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் புரிந்துகொள்வதற்கான முன் முயற்சிகளை அவர் மேற்கொண்டார். நாம் கொடுக்கும் அணு உலைகளையும், கச்சாப் பொருட்களையும் இந்தியா அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்திக் கொண்டால், என்னாவது என்று அமெரிக்க அரசியல்வாதிகள் கேள்விகள் எழுப்பினார்கள். 'அணு சக்தி முயற்சிகளையும் நாட்டின் பாதுகாப்புக்குத் தொடர்பான விஷயங்களையும் நாங்கள் ஒன்று கலக்க மாட்டோம் என்று இந்தியா உறுதி கூறியது.
ஒருகட்டத்தில் அரசியல், பொருளாதார மாற்றங்களால் அமெரிக்காவுக்கும் இந்த ஒப்பந்தம் அவசியம் என்று பட்டது. தான் பதவியில் இருக்கும்போது இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்று அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்  பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி இந்த ஒப்பந்தத்துக்கு தன் நாட்டின்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அங்கீகாரத்தையும் பெற்றார். அதை அடுத்து வேக வேகமாக நம் நாட்டிலும் இந்த ஒப்பந்தத்துக்கு சட்ட வடிவம் கொடுக்க வேலைகள் நடைபெற்றன என்றாலும் ஒரு கட்டத்தில், 'இந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிர்மாணிக்கப்படும் அணு உலைகளில் 'போபால் விஷ வாயு விபத்து போன்று ஏதாவது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தால்... பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் நஷ்ட ஈடு வழங்குவது?' என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது. அதனால் வேறு வழியில்லாமல் மன்மோகன் சிங் அரசாங்கம், 'அணு மின்சக்தி தயாரிக்கும் நிறுவனங்களும், அதற்கு அணு உலைகள் மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை செய்த வெளிநாட்டுக் கம்பெனிகளும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நம் அரசு சட்டம் இயற்றியது.
இதை அமெரிக்க கம்பெனிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் நாட்டின் அணுமின்சக்தி கூடத்தை இயக்கப்போவது உங்கள் நாட்டின், உங்கள் அரசாங்கத்தின் (Nuclear Power Corporation of India limited - NPCIL) அணுசக்தி கழகம்தான். அதனால் என்ன விபத்து நேரிட்டாலும் அதனால் ஏற்படுகிற இழப்புகளுக்கு அதுதான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று GE Hitachi மற்றும் Westinghouse போன்ற அமெரிக்கக் கம்பெனிகள் அடம்பிடிக்க... இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆறு ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தது.  இந்தத் தருணத்தில்தான் மோடி பிரதமராக பொறுப்பேற்று கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். இந்த ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க உயர் நிலையிலான அதிகாரிகள் குழுவை இரு தலைவர்களும் நியமித்தார்கள்.
இதன் இறுதிக்கட்டமாக டெல்லி வந்த ஒபாமா பிரதமர் மோடியுடன் ஹைதராபாத் ஹவுஸில் தொடர்ச்சியாகப் பல கப் டீக்களை குடித்து பேச்சுவார்த்தை நடத்தி... ஒரு வழியாக இந்த ஒப்பந்தத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால்... 'வரும்காலத்தில் அணுசக்தி உலைகளில் விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடுசெய்ய... அணு உலைகளும் உதிரிப்பாகங்களும் வழங்கப்போகும் அமெரிக்க கம்பெனிகள் நம் நாட்டு இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் பிரீமியம் கட்டி பாலிஸி எடுத்துவிடும். இதை ஆதாரமாகக் கொண்டு சுமார் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு ஒரு நிதி ஆதாரம் ஏற்படுத்தப்படும். அதனால் விபத்து நேர்ந்தால் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியும் என்ற ஷரத்து இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதை மோடி தன்னுடைய ராஜதந்திரம், சாமர்த்தியம் என்று பிரசாரம் செய்ய... 'போபால் போன்ற விபத்துகள் கற்றுக்கொடுத்த பாடத்தை இத்தனை சீக்கிரமாக மறந்துவிட்டு இந்த ஒப்பந்தத்துக்கு உயிர் கொடுத்திருப்பது தவறு என்று கம்யூனிஸ்ட்கள் வர்ணிக்கிறார்கள். நிறைவேற்றப்பட இருக்கும் இந்த ஒப்பந்தம் நம் மொத்த மின் தேவையின் இரண்டு சதவிகிதத்தை பூர்த்தி செய்யவே பல ஆண்டுகள் ஆகும்.
நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் போல அணுமின்சாரம் என்பது சீப்பானதும் இல்லை. காற்றாலை மற்றும் சூரியசக்தி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் போல பாதுகாப்பானதும் இல்லை. ஆனாலும் இது சாதனையாகச் சொல்லப்படுகிறது.
என்ன மாதிரியான சாதனை?



No comments:

Post a Comment