சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா?




உலகக் கோப்பை கிரிக்கெட்-2015

நாள்: ஏப்ரல் 2, 2011
நேரம்: இரவு 10.15
இடம்: மும்பை வான்கடே ஸ்டேடியம்

இலங்கை அணி பந்துவீச்சாளர் குலசேகரா ஓடிவந்து 130 கி.மீ. வேகத்தில் பந்து வீசுகிறார். தனக்கே உரிய ஸ்டைலில் லாவகமாக ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பந்தை எல்லை கோட்டுக்கு அப்பால் சிக்சருக்கு விரட்டுகிறார் மகேந்திர சிங் தோனி. யுவராஜ் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர்த்துளிகள் கசிய, தோனி வழக்கம் போல ஸ்டெம்பை பிடுங்க, இந்தியா முழுவதும் அன்றைய தினம் வாணவேடிக்கையில் ஒளிர்ந்தது.

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் முதல் இந்திய பிரதமர் வரை ஏதோ சாதித்து விட்டதைப் போன்ற பெருமையுணர்வோடு மகிழ்ச்சி கடலில் திளைத்திருந்தார்கள். இந்தியா முழுவதும் ஒரே இரவில் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது. இவையெல்லாம் நடந்து நான்கு வருடம் உருண்டோடிவிட்டது.

அடுத்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி அடுத்த உலகக் கோப்பைக்கான ரேஸ் நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்டர்ச் நகரத்தில் தொடங்க இருக்கிறது. உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியில் இருந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், அதிரடி மன்னன் சேவாக், கலக்கல் ஆல்ரவுண்டர் யுவராஜ், தேர்ந்த பேட்ஸ்மேன் கம்பீர், தலைசிறந்த பந்துவீச்சாளர் ஜாகிர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இல்லாமல் சீனியர் கேப்டன் தலைமையில் இளம் படையுடன் இந்த முறை உலகக் கோப்பையில் களமிறங்க தயாராக இருக்கிறது இந்தியா. பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில், உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்த முறை இந்தியா கடினமான சவால்களை சந்திக்க இருக்கிறது.

அனுபவம் வாய்ந்த வீரர்கள், சொந்த மண், சிறந்த அணி எனப் பல அனுகூலம் இருந்ததால் கடந்த உலகக் கோப்பையை இந்தியா தட்டிச்சென்றது. ஆனால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை.

தற்போதைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பற்றிய அலசல்!

1.ரோஹித் ஷர்மா:

உலக அளவில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் இரண்டு முறை குவித்த ஒரே வீரர். ஒருநாள் போட்டிகளில் இந்திய மண்ணில் இவரது சராசரி ரன்கள் 65-59. அதே சமயம் அயல்நாடுகளில் சராசரி வெறும் 30 ரன்கள் மட்டுமே. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் இதுவரை ரோஹித் ஷர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடக்க வீரராகக் களமிறங்கும் ரோஹித் பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியம். அடித்தால் ஆறு இல்லையெனில் 'டக்' என்று ஊசலாடாமல் நிலைத்து நின்று விளையாட ரோஹித் பழகிக்கொள்ள வேண்டும்.

2. அஜிங்கியா ரஹானே:

டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சின்சியராக விளையாடும் ரஹானே ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரிதாகச் சோபித்ததில்லை. இந்தியாவுக்குள்ளும், வெளியேவும் இவரது சராசரி 29 ரன்கள் தான். நடுவரிசையில் களமிறங்கி அணிக்குப் பலம் சேர்க்கவேண்டியது இவரது பெரிய பொறுப்பு.

3.ஷிகார் தவான்:

அதிரடியாக ஆடக்கூடிய தொடக்க வீரர். அந்நிய மண்ணில் 40 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார். அந்நிய மண்ணில் நன்றாக விளையாடினாலும் அவ்வப்போது திடீரென ஃபார்ம் அவுட் ஆவது தவானின் பலவீனம். தவான் கொஞ்சம் மெருகேறினால் இந்திய அணி முஷ்டி முறுக்கலாம்.

4.வீராட் கோலி:

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கியத் துருப்புச்சீட்டு வீராட் கோலி. இந்திய மண்ணாக இருந்தாலும், அந்நிய மண்ணாக இருந்தாலும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும், அட்டகாசமாக நிலைத்து நின்று விளையாடக் கூடியவர். பேட்டிங்கில் கில்லியாக இருந்தாலும், பீல்டிங்கில் அவ்வபோவது சொதப்பி வருவது மைனஸ். உலக அளவில் தலைசிறந்த வீரராக உருவெடுத்து வரும் வீராட் கோலி, இந்த உலகக் கோப்பையில் எதிரணிக்குச் சிம்மசொப்பனமாகத் திகழுவார் என்பதில் சந்தேகமில்லை.

5.சுரேஷ் ரெய்னா:

அசத்தல் பீல்டிங், அட்டகாச பேட்டிங், பகுதிநேர பவுலிங்கில் பாஸ் மார்க் என இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஐந்து அல்லது ஆறாவது வீரராகக் களமிறங்கும் ரெய்னா, அணிக்கு தேவையான நேரத்தில் கைகொடுப்பவர். கடந்த ஒரு வருடமாக ஒருநாள் போட்டிகளில் ரெய்னா நல்ல பார்மில் இருப்பது இந்தியாவுக்கு ப்ளஸ்.

6.அம்பட்டி ராயுடு:

அதிரடியாகவும், நிதானமாகவும் அணிக்காக விளையாடக் கூடியவர் ராயுடு. அனுபவம் குறைவு என்பது மைனஸ். எனினும் சமீப காலமாக நல்ல பர்மில் இருப்பதால் இந்திய அணியின் 11 பேர் கொண்ட டீமில் இவருக்குத் தோனி 'டிக்' அடிக்கக்கூடும்.

7.ரவீந்திர ஜடேஜா:

உள்நாட்டில் பவுலிங்கிலும், அயல்நாட்டில் பேட்டிங்கிலும் அசத்துபவர். கடைசிக் கட்ட ஓவர்களில் நன்றாக ஆடி அணிக்கு ரன் சேர்க்க கூடியவர். சேசிங்கில் மேட்ச் வின்னராகத் திகழக் கூடியவர். அதே சமயம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மைதானங்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் அணிக்கு போதுமானது என்பதால் ஜடேஜா இந்தியா 'லெவனில்' இடம் பெறுவது டவுட்.

8.ஸ்டூவர்ட் பின்னி:

பவுலிங்கில் 'இன்ஸ்விங்' நன்றாக வீசக்கூடியவர். .பி.எல். போட்டிகளில் பிரகாசித்தாலும், இந்திய அணிக்காக இதுவரை இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஜொலித்தார். பல சிறந்த வீரர்கள் அணிக்கு வெளியே இருக்க அதிர்ஷ்ட சீட் தனக்குக் கிடைத்ததை, பின்னி ஒழுங்காகப் பயன்படுத்துவாரா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

9.புவனேஷ் குமார்:

'
லைன் அண்ட் லென்த்' மிகநன்றாக இருக்குமாறு பந்து வீச கூடியவர். அயல்நாடுகளில் இவரது பந்துவீச்சு இதுவரை நன்றாக உள்ளது. ஜாகீர்கான் இடத்தைப் பிடித்திருக்கும் புவனேஷ் குமார், இந்த உலகக் கோப்பையில் சின்சியர் உழைப்பை கொட்டினால் இந்திய அணிக்கு உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகும்.

10.முகமது ஷமி:

அந்நிய மண்ணில் சிறப்பாகப் பந்து வீசக்கூடியவர் ஷமி. மிடில் யார்க்கர், இன்ஸ்விங் போன்றவற்றைச் சிறப்பாக வீசக்கூடியவர். கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தகூடியவர் என்பது இவரது ப்ளஸ். அதிக ரன்களை விட்டுகொடுப்பது இவரது மைனஸ்.

11.இஷாந்த் ஷர்மா:

அயல்நாடுகளில் அசத்தலாகப் பந்துவீசி சிக்கனமாக ரன் விட்டுகொடுத்து விக்கெட்டுகளை அள்ளுபவர். இவரது நெடுநெடு உயரம் பவுன்சர் தாக்குதல் உத்திக்கு கைகொடுக்கும். எனினும், அவ்வபோவது மிக மோசமாகப் பந்து வீசுவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பையே பறிக்கக்கூடிய அளவுக்கு இருப்பதால் இஷாந்த் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்.

12.உமேஷ் யாதவ்:

நல்ல வேகத்தில் பந்து வீசினாலும் அதிக ரன்களை விட்டு கொடுப்பதும், அடிக்கடி சோபிக்கத் தவறுவதும் இவரது மைனஸ். இந்திய லெவனில் இடம் கிடைப்பது உமேஷுக்கு சந்தேகமே.

13.ரவிசந்திர அஷ்வின்:

தனது கேரம் பாலால் எதிரணியை நிலைக்குலைய வைப்பவர். அவ்வப்போது பேட்டிங்கிலும் கைகொடுப்பதால் அஷ்வின், இந்தியாவுக்குப் பலமே. எனினும், ஒருநாள் போட்டிகளில் கடைசிக் கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவது இவரது மைனஸ்.

14.அக்சர் படேல்:

இந்த உலகக்கோப்பையில் தோனியின் ரகசிய துருப்பு சீட்டு அக்சர் படேல். .பி.எல்.லில் அசத்திய அக்சர், பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அணிக்கு சிறந்த வகையில் பங்களிப்பு தருவார் என நம்பலாம்.

15. மகேந்திர சிங் தோனி:

பேட்டிங், பீல்டிங், கேப்டன்சி என அனைத்து துறையிலும் சகலகலா வல்லவர் கேப்டன் தோனி. முக்கியமான கட்டத்தில் இந்தியாவுக்காகக் களமிறங்கி சிறப்பான பங்களிப்பு அளிப்பவர். சென்ற உலகக் கோப்பையில் தலைசிறந்த வீரர்கள் பலர் அணியில் இருந்ததால், தோனி கேப்டன்சியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த முடிந்தது. ஆனால், இந்த முறை பேட்டிங்கில் தோனியின் பங்களிப்பு இந்தியாவுக்கு அவசியம் தேவை. தற்போதுள்ள மிகச் சுமாரான அணியைத் தனது கேப்டன்சியின் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை எவ்வளவு தூரத்துக்கு அழைத்துச் செல்லப்போகிறார் என்பது தோனியின் கிரிக்கெட் வாழ்வில் இருக்கும் கடைசிச் சவால்.

தோனி முன் இருக்கும் முக்கியச் சவால்கள்:

1.
அணியைத் தேர்ந்தெடுப்பது தோனிக்குத் தலைவலியாக இருக்கும். ஆறு பேட்ஸ்மேன், ஒரு ஆல்ரவுண்டர், 3 வேகபந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்பது தான் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மண்ணில் சரியாக இருக்கும்.

2.
நான்காவது மற்றும் ஐந்தாவது வீரராக யாரை களமிறக்க வேண்டும் என்பது சிக்கலான சவால்.

3.
அனுபவமிக்க அஸ்வின் அல்லது ஜடேஜா அல்லது அக்சர் படேலில் யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பெரிய சவால் .

4.
பகுதி நேர வேக பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை. ஷமி, குமார், இஷாந்த், உமேஷ் இந்த நான்கில் மூவர் அணியில் இடம் பெற்றே ஆக வேண்டும். பவுலிங்கில் மிகவும் வீக்காக இருப்பது அணிக்குப் பலவீனம்.

5.
வீராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் தோடர்ந்து சோபிக்கத் தவறுவதால் 4 விக்கெட்டுகள் விழுந்தாலே அணியில் உள்ள அனைத்து விக்கெட்டுகளும் அடுத்த 100 ரன்களுக்குள் வீழ்ந்துவிடுவது கவலைக்குரிய அம்சம்.

6.
இந்திய அணி துடுப்புமிக்க அணியாக இருந்தாலும் பீல்டிங்கில் சொதப்புவது எதிரணிக்கு பெரிய ப்ளஸ்.

7.
விக்கெட் கீப்பிங், பேட்டிங் இரண்டிலும் கட்டாயம் சோபிக்க வேண்டும் என்பது தோனிக்கு கூடுதல் மன அழுத்தத்தைத் தரும்.

8.
ஆஸி., நியூசி. மண்ணில் அவர்களை வீழ்த்துவது கடினம். வலிமை வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் வென்றது கிடையாது. இங்கிலாந்து வீரர்கள் ஆஸி., மண்ணில் நன்றாக விளையாடுவார்கள் என்பதால் இந்திய அணி கடந்த முறையைப் போலக் கோப்பையை வெல்வது அவ்வளவு எளிது இல்லை.

ஆனால், இதையெல்லாம் தாண்டி, தோனி உலகக்கோப்பையில் இந்திய அணியைக் கரை சேர்க்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு!




No comments:

Post a Comment