சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jan 2015

ஒகேனக்கல் விபத்து சொல்லும் பாடம்!

தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் இருந்து தருமபுரி, ஒகேனக்கல் வழியாக அஞ்செட்டிக்கு சென்ற அரசு பேருந்து, நேற்று ஒகேனக்கல் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் அருகே உள்ள கொண்டை ஊசி திருப்பத்தில் தடுப்பை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 64 பயணிகளில்  கம்மாளப்பட்டியைச் சேர்ந்த சிவசங்கரி, மாதம்மாள், அதகமப்பாடியைச் சேர்ந்த வெங்கட்டம்மாள், காளியப்பன், மல்லாபுரத்தைச் சேர்ந்த சகாதேவன், தருமபுரியைச் சேர்ந்த மணிவண்ணன், பள்ளி மாணவன் மணிகண்டன் ஆகிய ஏழு பேர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தருமபுரியைச் சேர்ந்த சுதாகர் (கிருஷ்ணகிரியில் தீயணைப்பு வீரராக பணியாற்றியவர்), நடப்பன அள்ளியைச் சேர்ந்த துரைசாமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
முந்த முயற்சித்ததால் விபத்து

பேருந்தை சிவக்குமார் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். பொம்மிடியிலிருந்து 11 மணியளவில் தருமபுரி பேருந்து நிலையத்தை வந்தடைந்த பேருந்து, தருமபுரியிலிருந்த பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியிருக்கிறது. நேற்று தை அமாவாசை என்பதால் ஒகேனக்கலில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் வருவார்கள். பேருந்தில் பயணித்தவர்களில் அதிகப்படியானோர் ஒகேனக்கலுக்கு திதி கொடுக்க சென்றவர்கள்தான்.
பேருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் சென்று கொண்டிருக்கும்போது, முன்னே சென்ற வாகனத்தை முந்துவதற்காக வளைவு என்று கூட பார்க்காமல் பேருந்தை வேகமாக இயக்கியிருக்கிறார் ஓட்டுநர் சிவக்குமார்.
 

அந்த கடினமான திருப்பத்தில் சிவக்குமாரால் பேருந்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போகவே, பேருந்து இடதுபுற தடுப்பை உடைத்துக்கொண்டு  பள்ளத்தாக்கில் உருண்டுவிட்டது என்கிறார்கள். அப்போது கீழே குதித்து தப்ப முயன்றிருக்கிறார் ஓட்டுனர் சிவக்குமார். இதில் அவருடைய கால் உடைந்து அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
பேருந்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருந்திருக்கிறது. தடுப்பை உடைத்த அடுத்த நொடியில் பேருந்து தலைகீழாக உருண்டுவிட்டது. அதனால் யாராலும் தப்ப முடியவில்லை என்கிறார்கள். பேருந்தில் பயண செய்தவர்கள், " பஸ்ஸை வேகமாக  ஓட்டினார். அதனால்தான் கவிழ்ந்தது" என்று சொல்கிறார்கள்.

மேலிடத்தில் செல்வாக்கு உள்ள டிரைவர் 

ஓட்டுனர் சிவக்குமார் பொம்மிடியைச் சேர்ந்தவர். 8 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றவராக இருந்தாலும், ஏற்கனவே பல விபத்துக்களை நிகழ்த்தியிருக்கிறார். அதில் 3க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். இரண்டு முறை தண்டனை பெற்றிருக்கிறார். இருந்தாலும் அவருடைய உறவினர் போக்குவரத்து துறையின்  உயர் பதவியில் இருப்பதால், அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் பணியில் சேர்ந்துவிடுகிறார் என்கிறார்கள் போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள். 

காலாவதியான பேருந்து 

ஏழு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிவிட்டால் வண்டியை மாற்ற வேண்டும். ஆனால் தருமபுரியில் அப்படி செய்வதில்லை. அதே பழைய வண்டியைத்தான் இயக்குகிறார்கள். பேருந்து டயரை கூட சரியாக பராமரிப்பது கிடையாது. பிற மாவட்டங்களில் ஓடி தேய்ந்த பேருந்தைதான் தருமபுரி போன்ற மாவட்டங்களுக்கு அனுப்புகிறார்கள். தருமபுரியில் மலைப்பாதைகள் அதிகமாக இருக்கிறது. அங்கு ஓடும் பேருந்துகள் கூட முறையாக இல்லை. முற்றிலும் தேய்ந்துபோன டயர்களோடு பல பேருந்துகள் இயக்கப்படுகிறதுவிபத்துக்குள்ளான பேருந்தும் காலாவதியான பேருந்துதான். அதுவும் தினசரி இயக்கப்படும் பேருந்து கிடையாது. பேருந்து பற்றாக்குறை ஏற்படும் பொழுதும், விழாக்காலங்களின் போதும் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். 10 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
 

போக்குவரத்து துறை மோசம் 

இப்போது கூட  தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர்கள் வேலைக்கு பல லட்சங்கள் வாங்கப்படுவதாக சர்ச்சை கிளம்பியது. இது போன்று பணம் வாங்கி கொண்டு தகுதியில்லாதவர்களை டிரைவர்களாக்குவதால்தான் இது போன்ற விபத்துக்கள் நடக்கிறது. டிரைவர்களுக்கான உரிய சம்பளமும் வழங்கப்படுவதில்லை, முறையான ஆட்களை தேர்வு செய்வதும் இல்லை, பேருந்தை பராமரிப்பதும் கிடையாது, ஆனால் பேருந்து கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே போவார்கள். அதிக கட்டணம் வாங்கி கொண்டு  அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுகிறது தமிழக அரசு  என்று பொங்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

போக்குவரத்து துறையில் நஷ்டத்தை சமாளிக்க முடியவில்லை என்று பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்துகிறது. சில வாரங்களுக்கு முன்பு  சம்பளப் பிரச்னைத் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். மக்கள் செலுத்தும் கட்டணத்தில் வண்டியை ஓட்டும் போக்குவரத்து துறைக்கோ, அதன் ஊழியர்களுக்கோ மக்கள் உயிர் மீது சிறிதளவும் அக்கறையில்லை என்பதை அறைந்து சொல்கிறது இந்த சம்பவம்.

அம்மா குடிநீர் விற்க முனைப்பு காட்டும் போக்குவரத்து துறையே.. மக்கள் உயிர்களின் மீது கொஞ்சமாவது கரிசனம் காட்டுங்கள். அவர்கள் உயிரோடு இருந்தால்தான் அம்மா குடிநீர் விற்கும்! 




No comments:

Post a Comment