சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2015

கைரேகையிலும் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்!

இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக  தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர்.
ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். 

இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லாவற்றிலுமே ஏதாவது ஒரு குறை இல்லாமல் இல்லை. மேலும் எத்தனை பாதுகாப்பான பாஸ்வேர்டாக இருந்தாலும் சரி அதற்கான கள்ளச்சாவியை தயார் செய்வதில் ஹேக்கர்கள் கில்லாடிகளாக இருக்கின்றனர்.

அதனால்தான், ஒருவரின் தனிப்பட்ட அடையாளமான முகம் அல்லது கைரேகை போன்றவற்றை பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம் என்று சொல்கின்றனர். இது தொடர்பான ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நினைவில் கொள்ள வேண்டிய பாஸ்வேர்டை விட , கைரேகை போன்ற பயோமெட்ரிக் முறை பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐபோன் போன்றவற்றில் இந்த பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

எப்படியும் ஒருவரது கைரேகையை இன்னொருவரால் திருடிவிட முடியாது அல்லவா? இந்த நம்பிக்கைக்கு தான் ஹேக்கர்கள் இப்போது வேட்டு வைத்துள்ளனர். 

ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர் கைரேகையை மிக சுலபமாக நக்லெடுக்க முடியும் என உணர்த்தி இணைய உலகிற்கும் பாஸ்வேர்ட் வல்லுனர்களுக்கும் ஒருசேர அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

ஹேக்கர்கள் உலகில் ஸ்டார்பக் என அறியப்படும் ஜான் கிறிஸ்லர் எனும் அந்த ஹேக்கர், ஜெர்மனியில் நடைபெற்ற சோஸ் கம்ப்யூட்டர் கிளப் எனும் ஹேக்கர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தனது கண்டுபிடிப்பை பெருமையுடன் அரங்கேற்றியுள்ளார்.

கிறிஸ்லர், ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வான் டே லேயேன் கைரேகையை தான் நகலெடுத்து காட்டியிருக்கிறார். அதிலும் எப்படி தெரியுமா? பொது வெளியில் இருக்கும் அமைச்சரின் புகைப்படங்களை வைத்துக்கொண்டே அவரது கைரேகையை நகலெடுத்திருக்கிறார். 

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுவது போன்ற புகைப்படங்களை கொண்டே கைரேகையை கிறிஸ்லர் தயார் செய்துவிட்டார். நவீன காமிராக்களின் செயல்திறன் மூலம் வெளிப்படும் புகைப்படத்தின் தரம் தான் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. அதோடு வெரிஃபிங்கர் எனும் சாப்ட்வேரை துணையாக கொண்டு புகைப்படங்களில் தோன்றும் கைகளின் காட்சியை கொண்டே கைரேகையை சுட்டிருக்கிறார்.

இதே போல யாருடைய கைரேகையை வேண்டுமானாலும் திருடி ப்யோமெட்ரிக் பூட்டுகளை ஏமாற்றிவிடலாம் என்று ஹேக்கர்கள் நம்புகின்றனர்.

பயோமெட்ரிக் முறை முற்றிலும் பாதுகாப்பனதல்ல என்பது வல்லுனர்களும் அறிந்ததுதான். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடி போன்ற மென்மையான பொருள் மூலம் கைரேகையை நகலெடுப்பது சாத்தியமே என கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் சிக்கலானது.

ஆனால், ஒருவர் பொருட்களை திருடும் அவசியம் இல்லாமல் பொது வெளியில் கிடைக்கும் புகைப்படங்கள் மூலமே ஒருவரின் கைரேகையை தயார் செய்ய முடியும் என்னும் செய்தி கொஞ்சம் கவலைதரக்கூடியது தான்.

அதுமட்டும் அல்ல, இனி உலக தலைவர்கள் எல்லாம் பொது இடங்களில் கிளவுஸ் அணிந்துதான் தோன்ற வேண்டியிருக்கும் என்றும் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஹேக்கர் திமிராக கூறியுள்ளார்.

உலகம் எப்படி போகிறது பாருங்கள்! 

கைரேகை நகலெடுப்பு பற்றிய ஹேக்கர்கள் விளக்கத்தை அறிய விருப்பமாhttp://www.ccc.de/en/updates/2014/ursel



No comments:

Post a Comment