சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2015

2015-ல் இந்தியாவுக்குக் காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்!

 1 உள்கட்டமைப்பு!

தற்போது உள்ள சூழலில் இந்தியா சந்திக்க வேண்டிய மிகப் பெரிய சவால், உள்கட்டமைப்புத் துறையில் தான் இருக்கிறது. மத்திய அரசாங்கம் முன்வைக்கும்மேக் இன் இந்தியாதிட்டம், மற்ற துறைகளில் கொண்டுவரக்கூடிய வெளிநாட்டு முதலீடு ஆகிய அனைத்துக்குமே உள்கட்டமைப்பு என்பது அவசியமான விஷயமாக உள்ளது.

இன்று இந்தத் திட்டங்களுக்கு மிகப் பெரிய சவாலாக முன்வைக்கப்படும் சாலைகள், துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்பு ஆகியவை யாவும் மேம்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்தியாவில் சாலைகளைப் பொறுத்த வரையில், அரசு 2017-ம் ஆண்டுக்குள் 1,00,000 கி.மீ நெடுஞ்சாலைகளை அமைக்க உள்ளதாக கூறியுள்ளது. அப்படிப் பார்த்தால், இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ள நிலையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 35,000 கி.மீ அளவிலான தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.95 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது.
அடுத்த நான்கு வருடத்தில் ரூ.430 பில்லியன் செலவில் புதிதாக 87 துறைமுகங்களை உருவாக்க அரசு திட்டமிட்டிருப்பதால் இந்தத் துறைகளில் மத்திய, மாநில அரசுகள் முன்வந்து ஒருங்கிணைந்து செயல்படும்போது மட்டுமே இந்தத் துறையின் வளர்ச்சி என்பது மேம்பாடு அடையும்.
தவிர, இந்த விஷயத்தில் வளர்ச்சியை அரசு கொண்டு வந்தால்தான் வெளிநாட்டு நிறுவனங் களும் இந்தியாவில் தொழில் துவங்கும்

2 மின்சாரம்!
மின் பற்றாக்குறை நம் நாட்டில் இன்றளவும் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது மற்றும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு ஆகியவை இந்திய மின்சாரத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன

உலக அளவில் நிலக்கரியை அதிகம்  கையிருப்பில் வைத்துள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. என்றாலும்கூட, தேவைக்கேற்ற நிலக்கரியை இந்தியாவால் உற்பத்தி செய்ய முடியவில்லை. தற்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி வெறும் 590 மில்லியன் டன் மட்டுமே. இது தேவையைக் காட்டிலும் 197 மில்லியன் டன் குறைவு.

புதிய நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் எடுக்கலாம். மாநில அரசுகளுக்கு நேரடியாக சுரங்கங்கள் ஒதுக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 93 ஜிகாவாட் மின்சாரத் திறனை அதிகரிக்க செய்யவேண்டும் என்று அரசு திட்டமிட்டு உள்ளது. இதனை அடைய 100 பில்லியன் டாலர் தேவைப்படும்

இது நடைமுறைக்கு வந்தால் மாநில அரசு களின் மின்சாரப் பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில்மேக் இன் இந்தியாவுக்குப் புதிய நிறுவனங்கள் வரும்போது அந்த நிறுவனங்களின் உற்பத்திக்காக நிறைய மின்சாரத் தேவை ஏற்படும். அதனைச் சமாளிக்கும் அளவுக்கு இந்திய அரசு தயாராக உள்ளதா என்பதே மிகப் பெரிய சவால்தான்.

3 கச்சா எண்ணெய்!
உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2014-ல் அதிகமான எண்ணெய் உற்பத்தி காரணமாக, கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச அளவில் சுமார் 45% அளவுக்குக் குறைந்தது.

2015 துவக்கத்தில் கச்சா எண்ணெய்யின் உற்பத்தியைக் குறைக்க ஓபிஇசி உறுப்பினர் நாடுகள் முடிவெடுக்கும் என்ற நிலையால், இரண்டாம் காலாண்டில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி அதிகரித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படும். கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறையும்போது இந்திய பொருளாதாரத்துக்குச் சவாலாக அமையும்.

4 விலையேற்றம்!
இந்தியாவில் தற்போதைய சூழலில் மிகப் பெரிய விஷயமாக உருவெடுத்து வருவது விலையேற்றம்தான். இந்தியாவின் பணவீக்கம் குறைந்தாலும், அத்தியாவசிய பொருட்களான பால் விலை துவங்கி போக்குவரத்துக் கட்டணம் வரை எல்லா வற்றின் விலையும் உயர்ந்துள் ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவ தால், பணவீக்கம் குறையும் அளவுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.


தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் போட்டியில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டியது மிகப் பெரிய சவால்தான்.

5 வங்கி என்பிஏ!
வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்கள் மூலம் வங்கி களுக்கு ஏற்பட்டுள்ள என்பிஏ அதிகரித்து வருவது இந்திய வங்கித் துறைக்கும், குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளுக்கும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 2013-14ம் ஆண்டில் இந்திய வங்கித் துறையின் மொத்த என்பிஏ ரூ.2.40 லட்சம் கோடியாக உள்ளது. அதில் பொதுத்துறை வங்கிகளின் என்பிஏ மட்டும் 2.16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

தனியார் துறைகளில் உள்ள முறைகளை பொதுத்துறை வங்கிகள் கடைப்பிடித்தால்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்

அரசியல் குறுக்கீடுகளாலும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாலும் ஏற்பட்டுள்ள என்பிஏக்களை எவ்வளவு விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகி உள்ளது. இது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வங்கி என்பிஏகளை நெறிமுறைப்படுத்த வேண்டியதும், அதற்குக் காரணமாக உள்ள விஷயங்களைத் தடுக்க வேண்டியதும் அவசியம்.

6 வேலைவாய்ப்பு!
இந்தியாவில் தற்போது சேவைத் துறைக்கான பணி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உற்பத்தித் துறைக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகி யுள்ளது. அதிகமான மாணவர்கள் ஓர் ஆண்டில் பொறியியல் மற்றும் மருத்துவம் படித்து வெளிவருகின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில்.

திறமையான பணியாளர்களுக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். 2020-ம் ஆண்டுக்குள் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு ஏற்ப ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்தியாவின் முக்கியமான பொருளாதாரச் சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது இது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதேநேரத்தில் தொழிற்திறன் பயிற்சிகள்  அளிக்க வேண்டியுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 50 கோடி பேருக்கு அனைத்து நிலைகளிலும் பயிற்சி வழங்க வேண்டிய சூழல் உள்ளதால், ஆண்டுக்கு 2,000 கோடி செலவில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இவையெல்லாம் சரியான பாதையில் செயல்படுத்தப்பட்டால்தான் வேலைவாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியும்இதனைச் சரியான விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை அரசின் கையில் உள்ளது.

7 ஏற்றுமதி!
இந்த வருட இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 ரூபாயாக இருந்தது. இது ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவுக்கு லாபமளிக்கக் கூடியதாகத் தெரிந்தது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 340 பில்லியன் டாலராக இலக்கை நிர்ணயித்துள்ளது.
தற்போது மோடி அரசுமேக் இன் இந்தியாதிட்டத்தை அறிவித்ததன் மூலம் 25 துறைகளில் உற்பத்தி அதிகரித்து இந்தியாவில் ஏற்றுமதி தொழிலுக்கான வாய்ப்புகள் பெருகும் என்பதும், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குத் தொழில் துவங்க வருவதன் மூலம் இறக்குமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா வில் துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நிலை சர்வதேச தரத்தில் இல்லை என்பதால் இந்த விஷயத்தை யும் கருத்தில்கொண்டு இந்தியாவின் ஏற்றுமதியை அமைக்க  வேண்டும்.

8 எஸ்எம்இ!
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை ஏற்படுத்துகின்றனர். இவர் களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இவர்களுக்கான நெறிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதில் எந்த மாற்றமும் இல்லை என்ற நிலையே நிலவிவருகிறது.

கடந்த பட்ஜெட்டின்போது அரசு அறிவித்த 10,000 கோடி ரூபாய் வெஞ்சர் கேப்பிட்டல் தொடர்பான திட்டம் என்னவானது என்று தெரியவில்லை. அவர்களது கடன்களுக்கான நெறிமுறைகளில் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தொழில் துவங்க அதிக காலம் எடுப்பதும், அதற்கு அனுமதி பெற பல நிலைகளை கடக்க வேண்டியுள் ளதால், ஒற்றை சாளர முறையை அறிமுகம் செய்ய வேன்டும் என்ற எஸ்எம்இக்களின் கோரிக்கைகளை அரசு கேட்டு சரியான நடவடிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் அதிகப் பங்களிப்பைத் தரக்கூடிய இந்தத் துறை என்பதால் இதில் அரசு தனது கவனத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயம்.

9 வட்டி விகிதம்!
இந்தியாவில் வங்கிகளின் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற கருத்து 2014 முழுவதும் நிலவினாலும், ஆர்பிஐ பணவீக்கத்தைக் குறைப்பதி லே
யே அதிக கவனம் செலுத்தி வந்தது.

2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். அப்படிக் குறைக்கும்போதுதான் வங்கிகளும் மற்ற கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும். 2015-ல் வட்டி விகித குறைப்பு ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும்.

10 சர்வதேச சூழல்கள்!
டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது, கச்சா எண்ணெய்யின் விலை, தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள், சர்வதேச நாடுகளின் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் ஏற்றம் ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதால், அதனைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டியதும் இந்த ஆண்டின் சவால்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
ஒவ்வொரு துறை வாரியாகவும் இவ்வளவு வளர்ச்சியை அடைய வேண்டும் என்று கூறி அதற்கு ஆகும் தொகையைக் கூறுவதால் மட்டும் பொருளாதாரச் சவால்களைச் சமாளித்துவிட முடியாது என்பதை அரசு உணர்ந்து  செயல்பட வேண்டும்.
2015-ம் ஆண்டு இறுதியில் நமது பொருளாதாரம் 6.4 சதவிகித வளர்ச்சியை எட்டவேண்டிய இலக்கில் செயல்பட வேண்டியது சவாலாக உள்ளது. இந்தச் சவால் களைச் சமாளிக்கும்பட்சத்தில் உலக அரங்கில் இந்தியா பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும்.



No comments:

Post a Comment