சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jan 2015

அமெரிக்கா சுஜாதா அசிமோவ் பிறந்த தினம் ஜனவரி 02

ஐசக் அசிமோவ் எனும் அறிவியல் புனைகதை உலகின் பிதாமகர் பிறந்ததினம் இன்று... ஜனவரி 02  ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட யூத குடும்பத்தில் பிறந்தார் அசிமோவ். மற்ற யூதர்களைப்போல இல்லாமல் மத நம்பிக்கை இல்லாமலே இவரை பெற்றோர் வளர்த்தார்கள். அசிமோவ் பள்ளியில் படிப்பில் வெகு சுட்டி. பாதி வகுப்புகளை கட் அடித்தாலும் மதிப்பெண்களை அள்ளிவிடுவார். பைக் ஓட்டவோ,நீச்சல் அடிக்கவோ இறுதி வரை பழகிக்கொள்ளவே இல்லை. ஊசிகள், ரத்தம் ஆகியவற்றை கண்டாலும் பயம் தான் அசிமோவுக்கு.

அமெரிக்காவில் இனிப்புக்கடை நடத்திக்கொண்டு இருந்தார்கள் பெற்றோர்கள். அந்த கடையில் இதழ்கள் விற்பார்கள். அப்படி தான் அறிவியல் கதைகள் அவருக்கு அறிமுகம் ஆனது. பல்ப் இலக்கியங்களை படிக்கக்கூடாது என்று தந்தை தடை போட்டிருந்தார். "அறிவியல் பல்ப் கதைகளில் அறிவியல் என்கிற பெயர் இருக்கிறது ; அறிவு வளரும் அப்பா !" என்று சொல்லித்தான் அந்த கதைகளை படித்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார் அசிமோவ்

மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் உயிரியல் படிக்கப்போனார் அசிமோவ். இறந்து போன பூனையை பகுக்க சொன்ன பொழுது "விடுங்க ஆளை !" என்று கழன்று கொண்டு வேதியியல் படித்து முடித்தார். படிப்படியாக பட்டங்கள் வாங்கி உயிரி வேதியியல் பேராசிரியர் ஆனார். பிரபலமான எழுத்தாளர் ஆனதும் பிற்காலத்தில் அந்த பதவியை விட்டார். பதினொரு வயது சிறுவனின் அனுபவங்கள் என்று எழுத தொடங்கி காஸ்மிக் கார்க் ஸ்க்ரூ என்கிற தலைப்பில் அவர் எழுதி தந்த அறிவியல் புனைகதையை நிராகரித்து மீண்டும் மீண்டும் எழுத சொல்லி ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் அனுப்பியது தான் ஆரம்பம்.

மூன்று வருடங்கள் அறிவியல் புனைகதை என்று ஓரளவிற்கு எழுதிக்கொண்டு இருந்தார் அசிமோவ். நைட்ஃபால் என்றொரு அறிவியல் புனைகதையை எழுதியது தான் திருப்பம். ஆறு சூரியன்கள் ஓயாமல் வெளிச்சத்தை பொழிந்து கொண்டிருக்கும் ஒரு கிரகத்தில் திடீரென்று இருட்டு வரப்போகிறது. அந்த இருட்டு 2049 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இருட்டு என்றும் அது எப்படி மக்களை பாதிக்கும் என்று சுவாரசியமாக பின்னியிருந்த அந்த கதை உலகின் மிகச்சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதற்கு பிறகு அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே சக்கைப்போடு போட்டன. சூரியனில் பத்து நிமிடம் நடந்தால் உடனே இவரின் உடம்பு அரிக்கும் அதனால் அவரின் கதைகளில் பெரும்பாலும் செயற்கை வெளிச்சம் பற்றிய குறிப்புகளே வரும். இன்றைக்கு மிகப்புகழ் பெற்றிருக்கும் ரோபோக்களுக்கான மூன்று விதிகளை தன்னுடைய கதைகளின் மூலம் வகுத்தது அவரே. ரோபோக்கள் தன்னை உருவக்கையவரையே கொல்ல முயல்வது என்கிற கதைக்கரு தன்னை தொடர்ந்து ஈர்க்கிறது என்று குறித்தார் அசிமோவ். அவரின் ரோபோ கதைகள் ரோபோட் தொகுப்பாக வெளிவந்தது. ரோபோடிக்ஸ் என்கிற வார்த்தையே அவர் தந்தது தான் !

பைபிளுக்கு ஒரு வழிகாட்டி, ஷேக்ஸ்பியரை படிக்க ஒரு வழிகாட்டி, உலக வரலாறு சார்ந்த நூல்கள்,தன்னுடைய அறிவியல் துறை சார்ந்த நூல்கள் என்று எதையாவது எழுதிக்கொண்டே இருந்தார் அசிமோவ். தானே ஒரு பத்திரிக்கையை தொடங்கி வாசகர்களின் அறிவியல் கேள்விகளுக்கு அவரே பதில் சொல்கிற பணியை உற்சாகமாக செய்தார். தத்துவத்தை தவிர அவர் தொடாத துறைகளே இல்லை என்கிற அளவுக்கு எழுதினார். ஒரு நிமிஷத்துக்கு தொண்ணூறு வார்த்தைகள் என்கிற வேகத்தில் அவரின் நூல்கள் எழுதப்பட்டது. அதற்கு பிறகு ஏகத்துக்கும் எழுதித்தள்ளினார். அவர் எழுதிய வெளியிடப்படாத தாள்கள் மட்டுமே 464 பெட்டிகளில் 232 அடி ஷெல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் நீங்கள் யோசித்துக்கொள்ளலாம்.

அவர் எழுபத்தி இரண்டாவது வயதில் இறந்த பொழுது கிட்னி மற்றும் இதய கோளாறால் இறந்துபோனார் என்று உலகுக்கு சொல்லப்பட்டது. எனினும் பத்து வருடங்கள் கழித்து இதய சிகிச்சையின் பொழுது செலுத்தப்பட்ட ஹெச்..வி கிருமி தொற்று இருந்த ரத்தம் அவரின் உயிரை பறித்தது என்று உலகுக்கு தெரிந்தது. அறிவியலின் மீது எளிய மக்களுக்கு ஆர்வத்தை விதைத்த அமெரிக்க சுஜாதா 2014 எப்படியிருக்கும் என்று ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் என்ன  எழுதினார் பாருங்கள் 

ஒளிகிற பேனல்கள் உலகை நிறைக்கும். ஒற்றை ஸ்விட்ச் அமுக்கலில் மாறும் வண்ணத்தில் சுவர்களும், மேற்கூரைகளும் இருக்கும். கடினமான மனித வேலைகளை கருவிகள் பார்த்துக்கொள்ளும். சமையலறையில் காபி போடுவது, பிரெட்டை டோஸ்ட் செய்வது எல்லாமும் தானாகவே செய்யும் இயந்திரங்கள் வந்துவிடும். பரவலாக ரோபோக்கள் இருக்காது ; அவை நல்ல ரோபோவாகவும் இருக்காது. எதிர்பக்கத்தில் பேசுகிறவரை பார்க்கிற வசதி வரும் ; அதே திரையில் கோப்புகள் படிப்பது,படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிக்கவும் ஆகியனவும் செய்ய இயலும் . "



No comments:

Post a Comment