எளிய மக்களின் பாதுகாப்புக்காகத் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்துவிட்ட வாழ்க்கை மேதா பட்கர் அவர்களுடையது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த அவரின் தந்தை விடுதலைப்போராட்ட வீரர்,தாய் பெண்கள் முன்னேற்ற அமைப்பான ஸ்வாதாரில் முக்கியப் பங்காற்றியவர். சமூகப்பணியில் தன்னுடைய உயர்படிப்பை முடித்த மேதா ஐந்து வருடங்கள் கிராமப்புற மக்கள்,பழங்குடியினர் ஆகியோரோடு இணைந்து அவர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டார். அவர்களின் போராட்டங்கள் அவர் மனதை தொட்டன.
எழுபதுகளில் மத்திய அரசு நர்மதை நதி ஓடிய பகுதி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற பல்வேறு அணைகள் கட்டுவது என்கிற திட்டத்தை முன்னெடுத்தது. நர்மதை பள்ளத்தாக்கு வளர்ச்சி அமைப்பை உருவாக்கி முப்பது பெரிய 135 நடுத்தர மற்றும் 3,000 சிறிய அணைகளைக் கட்டும் பொறுப்பை அது எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணைப்பகுதிகளில் வசித்த பல லட்சம் பழங்குடியினர் மற்றும் ஏழைகள் வீடிழந்தார்கள். அவர்களுக்கு மறுவாழ்வுப்பணிகள் பெரிய அளவில் நடைபெறாமல் போனதும் அடுத்தச் சிக்கல். பதினெட்டு லட்சம் ஹேக்டர் அளவுக்கு நீர்ப்பாசனம் தரும், பல கோடி மக்களின் தாகம் போக்கும்,வறண்ட சவுராஷ்டிரா பகுதிகளை வளமாக்கும் என்றெல்லாம் அடுக்கப்பட்டன. பல லட்சம் விளிம்பு நிலை மக்களின் கேள்விக்குள்ளாகும் வாழ்க்கையை மாற்ற அதில் பெரிதாகத் திட்டங்கள் இல்லை என்பதை மேதா பட்கர் உணர்ந்தார். நான்கு ஆண்டுகள் அப்பகுதிகளில் பயணம் செய்த பிறகு நர்மதா பச்சோ அந்தோலன் மூலம் அணைகள் கட்டுவது மற்றும் அணையின் உயரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினார்.
முப்பது வருடங்களாக நடந்து வரும் போராட்டத்தில் உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு உண்ணாவிரதம் இருந்துள்ளார். அவர் உலக வங்கி, ஜப்பான் ஆகியவற்றை அத்திட்டத்தில் இருந்து விலகுமாறு செய்திருக்கிறார். தொடர்ந்து அரசு திட்டத்தில் முன்னகர்ந்து கொண்டிருந்தாலும் நம்பிக்கையை விடாமல் நீதிமன்ற கதவுகளைத்தட்டியும் மக்களைத்திரட்டியும் போராடுகிறார் அவர். லாவசா என்கிற நகர் உருவாக்கலில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராகவும் போராட்டங்களை அவர் செய்தார். போராட்டமே வாழ்க்கை என்று ஆனாலும் வன்முறைப்பாதையைத் தேர்ந்தெடுக்காமல் அமைதி வழியில் அடித்தட்டு மக்களின் குரலை எதிரொலிக்கும் அவர் போற்றத்தக்கவர்.
No comments:
Post a Comment