சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2015

மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் இதற்குதானா?

ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென பாகிஸ்தான் சென்றதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி  உள்ளன.
ஆப்கானிஸ்தான் சென்ற இந்திய பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென தனது பயணத் திட்டத்தை மாற்றி, பாகிஸ்தான் சென்றார். லாகூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்று தனது மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.

எதிர்ப்பும் வரவேற்பும்

இந்நிலையில், பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்திற்கு அரசியல் கட்சிகளிடையே வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி இதை அபத்தமானது என வர்ணித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜோய் குமார், “நாட்டின் பிரதமர் பாகிஸ்தானுக்கு செல்வது பற்றி டுவிட்டர் மூலம் தெரிந்துக்கொள்ள நேர்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆப்கானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பாகிஸ்தானில் இறங்கி அந்நாட்டு பிரதமரை சந்திக்கும் நிலையில் இருநாடுகளின் உறவு இல்லை.
சில நாட்களுக்கு முன்தான் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்தது. ஆனால், பாகிஸ்தான் பயணம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை” எனக் கூறினார்.
 
அதேப்போன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, “மோடியின் இந்த சாகச பயணம் நாட்டின் பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த பயணம் பகுத்தறிவுக்கு ஏற்றது இல்லை எனும் போது, இது கண்டிப்பாக அபத்தமான முடிவுதான்” என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பா.ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மோடியின் இந்த திடீர் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்று பாராட்டியுள்ளன.
 
அரசு வட்டாரங்கள் சொல்வது என்ன? 

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணமானது அவரது தன்னிச்சையான முடிவு என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணம் தொடர்பாக இன்று காலைதான் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடி காபூல் நகரில் இருந்து பறக்க தொடங்கிய போது இதுதொடர்பான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

திருமண விழாவில் பங்கேற்கவா? 

இந்நிலையில் லாகூர் சென்றடைந்த மோடி,  நவாஸ் ஷெரீப்க்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை தனது மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
 
லாகூர் சென்றடைந்த மோடி நவாஸ் ஷெரீப் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி, இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட் செய்துள்ளார்.

மேலும் நவாஸ் ஷெரீபின் பேத்தி திருமண விழாவும் அதே மாளிகையில்தான் நடைபெற்றது. எனவே அந்த திருமண நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்றார்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் வரவேற்பு!
இதனிடையே மோடியின் இந்த திடீர் பயணத்திற்கு பிரிவினைவாத தலைவரான மிர்வாய்ஸ் உமர் பாரூக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“மோடியின் இந்த பயணம் சாதகமான நடவடிக்கை. இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்தும் எந்த வாய்ப்பாக இருந்தாலும் அதனை காஷ்மீர் மக்கள் வரவேற்பார்கள். இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு குறிப்பாக காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து பக்கங்களிலும் அரசியல் விருப்பம் மற்றும் பார்வை தேவை” என அவர் கூறி உள்ளார். 


No comments:

Post a Comment