சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2015

ம.தி.மு.கவிலிருந்து இன்னொரு விக்கெட்..! - தூத்துக்குடி ஜோயலின் எச்சரிக்கை எக்சிட்

ம.தி.மு.க. கூடாரத்திலிருந்து இன்றைக்கு நான்கு விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. அதில் பிரதானமானவர் தூத்துக்குடி ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல். மற்றவர்கள் நெல்லை மா.செ. பெருமாள், நெல்லை புறநகர் மா.செ.சரவணன், கன்னியாகுமரி மா.செ. தில்லை செல்வம் ஆகியோர். இவர்கள் இன்றைக்கு அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணையவிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோவோடு தோள் நின்ற ஜோயல், இன்றைக்கு தனது படைபரிவாரத்தோடு தி.மு.கவில் இணைகிறார்.
கடந்த சில நாட்களாகவே ஜோயல், ' தி.மு.கவிற்கு செல்கிறார்' என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு எதிராக பொங்கிய ம.தி.மு.க தொண்டர்கள், ' வெள்ள பாதிப்புக்கு தி.மு.க கொடுத்தது ஒரு கோடி. ஆனால், ஜோயலை இழுக்க பத்து கோடி பேரம் பேசுகிறார்கள். எங்கள் தென்மண்டல கருஞ் சிறுத்தையை இழுக்க முடியாது' என்றெல்லாம் கொந்தளித்தனர். வைகோவும், ஜோயலைத் தொடர்பு கொண்டு, 'தி.மு.கவில் சேரும் தகவல் பொய் என்று அறிக்கை கொடுங்கள். இல்லாவிட்டால் நானே அறிக்கை எழுதி வைக்கிறேன். நேரில் வாருங்கள்' என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஜோயல் எதையும் கேட்கவில்லை. காரணம். பத்து நாட்களுக்கு முன்பே ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிவிட்டார் என்பதுதான். ஜோயல் தலைமையில் இணையும் இன்றைய விழாவில் நான்கு ம.தி.மு.க. மா.செக்கள் மட்டும் பங்கேற்கின்றனர். தொண்டர்களுடனான இணைப்பை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். 

இதுதொடர்பாக, வழக்கறிஞர்.ஜோயலிடம் பேசினோம். 

தி.மு.கவில் சேரும் முடிவு எதனால் ஏற்பட்டது?

" ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமுறை வைகோ அவர்கள் பேசும்போது, ' நாம் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம். கட்டாயம் வெற்றி பெறுவோம்' என்றார். அடுத்து வந்த சில வாரங்களில், ' தி.மு.கவோடு கூட்டணி கிடையாது. மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என அறிவித்தார். அது கூட்டணியாகவும் மாறிப் போனது. ' இந்தக் கூட்டணியால் ஓட்டுக்கள் பிரிந்தால் அ.தி.மு.கவிற்கு சாதகமாக முடியும்' என்று சொன்னோம். 'அ.தி.மு.க வெற்றி பெறட்டும்' என பகிரங்கமாகவே பேசினார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ' தவறான முடிவு எடுக்கிறீர்கள்' எனச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. 'தி.மு.க எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் என் நோக்கம்' என்றார். அவர் யாருடைய பேச்சையும் கேட்கும் முடிவில் இல்லை. ம.தி.மு.கவில் இருப்பது என்பது பாலைவனப் பயணம் போலத்தான். எதையும் எதிர்பார்க்காமல்தான் பணி செய்து வந்தோம். இனியும் அப்படித்தான். தி.மு.க. எங்களுக்கு தாய் கழகம். எனவே, நாங்கள் அனைவரும் இணைகிறோம்". 

தி.மு.கவில் சேருவதற்கு உங்களுக்கு என்ன உத்தரவாதம் கொடுத்தார்கள்?
 

"அவர்கள் எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை. நாங்களும் கேட்கவில்லை. மக்கள் அ.தி.மு.க அரசு மீது கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள். தளபதி மட்டும்தான் தெருவில் இறங்கி மக்களுக்காகப் போராடுகிறார்". 

வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களும்தான் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்?


"வைகோவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அவர்கள் தெருவில் இறங்குவதெல்லாம் வெளி வேஷம். என் அனுபவத்தில் சொல்கிறேன்". 

ஈழ விவகாரம், அணு உலை எதிர்ப்பு என பல விஷயங்களில் வைகோவின் நிலைப்பாடு மக்கள்அறிந்ததுதான். இதை வேஷம் என்று சொல்வது சரிதானா?

" அப்படியா? உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தொகுதியில் 2 காங்கிரஸ்காரர்கள் போட்டியிட்டார்கள். அவர்களுக்கு ஓட்டுக் கேட்கும்படி எங்களை அனுப்பினார் வைகோ. 'ஈழத்தின் கொடுமைக்குக் காரணம் காங்கிரஸ்' என வீதிதோறும் பேசி வரும் வைகோ, என்னை ஏன் அனுப்பினார்? காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத்தானே அவர் செயல்பட வேண்டும்? பெரும் சங்கடத்தோடு ஓட்டுக் கேட்கப் போனேன். இது சரியா? என மக்களே கேள்வி கேட்டார்கள். இப்படி ஓராயிரம் விஷயங்களை என்னால் தொகுக்க முடியும். அருகில் இருந்து ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்த்தவன் நான். எந்தக் கொள்கையும் இல்லாதவர் வைகோ". 

30 வயதிலேயே மாவட்டச் செயலாளராக உங்களை அமர்த்தி அழகு பார்த்தவர் வைகோ. கட்சியை விட்டுப் பிரிவது சரிதானா? 
" இதுவரையில் வைகோ அவர்களிடம் எந்தப் பிரதிபலனையும் நான் எதிர்பார்த்ததில்லை. இனியும் அப்படித்தான். கட்சிக்காக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என பலவற்றையும் என் சொந்தக் காசில்தான் செய்திருக்கிறேன். பிரிவது தவிர்க்க முடியாதது. வேதனையாகத்தான் இருக்கிறது". 

தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் என்ன சொன்னார்?

' தி.மு.கவில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை தரப்படும். மாற்றுக் கட்சி என்றெல்லாம் நாங்கள் பார்ப்பது கிடையாது. நீங்கள் எல்லாம் துடிப்போடு வேலை செய்பவர்கள். இனியும் அதை நாங்கள் எதிர்பார்ப்போம்' என்றார். 

இதை தென்மண்டலத்தில் ஸ்டாலின் அணியை வலுவாக்க செய்யப்படும் முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

"அப்படியெல்லாம் இல்லை. கோடிக்கணக்கான தி.மு.க தொண்டர்களின் நானும் ஒருவன். இப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை". 

'மக்கள் நலக் கூட்டணிதான் சிறந்த அணி, தி.மு.க, அ.தி.மு.கவை வீழ்த்தப் பாடுபடுவேன்' என்கிறாரே விஜயகாந்த்?


" ஜனநாயக நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம். போட்டியிடலாம். ஆனால், மக்கள் செல்வாக்கு யார் பக்கம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அந்தவகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இது நடக்கத்தான் போகிறது..." என்றபடியே அறிவாலயப் பயணத்துக்கு ஆயத்தமானார்  ஜோயல். 


No comments:

Post a Comment