சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Dec 2015

கெட்ட வார்த்தை பேசும் சாதியில் நீங்களும் ஒருவரா?

நான் பள்ளிக்கூடம் படித்த காலத்தில் ஒரேயொரு கெட்டவார்த்தை கூடப் பேசியது கிடையாது. கெட்ட வார்த்தை பேசினால் நாக்கிலிருக்கிற சரஸ்வதி ஓடிவிடுவாள் என்று யாரோ என்னிடம் சொல்லியிருந்தார்கள். நான் அதைத் தீவிரமாக நம்பினேன். மேலும் நான் பேச்சுப் போட்டி, செய்யுள் ஒப்புவித்தல், பட்டிமன்றங்கள் என, நா வன்மையைச் சார்ந்து, ஆற்றுகின்றப் பல்வேறு செயல்பாடுகளில் கலந்துகொள்பவனாயிருந்ததால், அந்த நாமகளை நாவிலிருந்து நழுவ விடக்கூடாது என்ற முதன்மை நோக்கத்திலேயே, கெட்டவார்த்தைகளை நான் பேசியதில்லை. ‘மயிர்’ என்ற நல்ல தமிழ்ச்சொல்லைக்கூட நான் சுடுசொல் என்கிற பரிமாணத்தில் பயன்படுத்தியதில்லை.

கெட்ட வார்த்தை பேசாதவனாக இருந்ததால் நான் எதிர்கொண்ட அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘இன்னாச்சொல் கூறாமை’ என்பது ஒரு நற்பண்போ, ஆளுமையோ அல்ல; அது ஒரு இயலாமை என்பதை எனக்கு உணர்த்தியவை அந்த நாட்கள். இத்தனைக்கும் நான் படித்தது ஒரு மேட்டிமைக் குடியிருப்பிலிருக்கிற, ஆங்கில வழிக் கல்வி போதிக்கும் பள்ளியில்தான்.

அரட்டைகளுக்கும் சரி, சின்ன சின்ன வாக்குவாதங்களுக்கும் சரி, பட்டப்பெயர்கள் வைக்கும்போதும் சரி, துயரார்ந்த சூழ்நிலைகளிலும் சரி, என் சக மாணவர்களோடு இரண்டறக் கலக்கக் கெட்ட வார்த்தைகள் தேவைப்பட்டன; அவற்றைப் பேசாத ஒரு காரணத்தாலேயே நான் ஒரு அந்நியனைப் போல, வேற்றுக்கிரக வாசியைப் போலக் கண்டறியப்பட்டேன். என்னைச் சுற்றிப் பேசப்படுகிற எல்லாச் செய்திகளையும், எல்லா வகையான பரிபாஷைகளையும் கெட்ட வார்த்தைகள் ஆக்கிரமித்திருந்தன. குறிப்பாகச் சின்னச் சின்னக் கருத்து மோதல்கள் ஏற்படும் வேளைகளில், கெட்ட வார்த்தைகள் பேசாமலிருப்பது என்பது ஒரு பெரும் கையாலாகாதத்தனமாகவே இருந்தது.
அச்சமயம், ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக், ‘உனக்கு எஸ்.கே ஜாஸ்திடா’ என்பார். ஒரு கெட்ட வார்த்தையை, இப்படி முதலெழுத்துக்களை மட்டும் வைத்துக்கூடப் பேசலாம் என்பது அன்றுதான் எனக்குப் பொறிதட்டியது. அன்று முதல் ‘எல்.கே, கே.பி, எம்.பி’ என்று ஏகப்பட்டச் சுருங்குசொற்களை உருவாக்கி அவை பரவிப் பரவி என் நண்பர்களுக்கிடையில் ஒரு துளிர் பண்பாடாகவே மாறியது.

சரி. கல்லூரியிலாவது இந்தத் தொல்லை இருக்காது என்று நம்பி வந்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் சரளமாகக் கெட்ட வார்த்தைகள் பேச வேண்டியக் கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. கோபம், சோகம், வெறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி என எந்த உணர்ச்சியும் கெட்ட வார்த்தைகளால் விவரிக்கப்படாத நிலையில் அவை முழுமை பெறாதவையாகவே பார்க்கப் பெற்ற சூழல் நிலவியது.

இவற்றில் மட்டும் மொழிப்பிரச்னைகள் கிடையாது. இந்தி, உருது எனப் பல்வேறு மூலங்களிலிருந்து பெற்ற எத்தனையோ கெட்ட வார்த்தைகள் கிட்டத்தட்டத் தமிழ்ப்பதங்களாகவே மருவி நம்மோடு கலந்துவிட்டன. ஒரு பள்ளிச் சிறுவன், தேர்வுத்தாள் கடினமாயிருந்தால் கூட, ‘ரேப் பண்ணிட்டாங்க மச்சி, ஐ வாஸ் ஃபக்ட் இன் மை ஆஸ்’ என்று சர்வ சாதாரணமாகக் கூறுகிறான். ஒரு சிறுவன் இயல்முரணான வன்புணர்வை, பள்ளித்தேர்விற்கு, உவமையாகக் கூறுமளவிற்கு, அழுக்கு நம் மனங்களிலே புழங்கிப் புரையோடிவிட்டது. 

ஆத்தாள் என்ற அழகிய தமிழ்ச் சொல்லே இன்று வெறும் கெட்ட வார்த்தையாகிவிட்டது. யோகம் என்ற வடமொழியின் நேர்த்தமிழ்ப்பதமான ’ஓகம்’ எனும் சொல் நடுவில் ஒரு மெய்யெழுத்து மிகுதி பெற்று கெட்ட வார்த்தையாகி விட்டது; தேவனுக்கு அடியாள் என்ற பொருளில் வகுக்கப்பட்ட தேவடியாள் என்பது சமூகப் போக்கில் கெட்ட வார்த்தையாகிவிட்டது.

ஆங்கிலத்திற்குக் குறைந்ததல்ல தமிழ்; உங்களிடம் ‘ஃபக்’ என்ற வார்த்தை இருக்கிறதென்றால் எங்களிடம் ‘ஓத்தா’ என்கிற வார்த்தை இருக்கிறது என்று மார்த்தட்டியவாறே, அச்சொல்லின் பல்வேறு பயன்பாடுகளை விவரிக்கிறது ஒரு யூடியூப் காணொளி; ஈற்றுச்சீர் மட்டும் மாற்றப்பட்டும், கேளொலி மட்டும் அமிழ்த்தப்பட்டு, இதழசைவில் பேசப்படும் திரைக் கெட்டவார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. 

ஊடகங்கள் மட்டும் பொதுவெளியல்ல; நான்கு சுவர் தாண்டி, மூன்றாம் பேரின் உள்வாங்குதலுக்குள், ஆட்படும் எல்லாப் பரிவர்த்தனைகளும் பொதுவெளிதான். ’இன்னாச் சொல் - இழுக்கா இயன்றது அறம்’ என்பது வான்மறை. கெட்ட வார்த்தைகள் பேசாமலிருப்பது என்பது ஒரு சமூக ஒழுக்கம்; நம் வீட்டுப் பெரியவர்களிடம் மட்டும் அத்தகையச் சொற்களைச் சொல்லக் கூசும் நாம், வெளியில் கால்வைத்தவுடன் ஏன் இந்தத் தீச்சொல் திரவத்தை நாக்கில் தடவிக்கொள்ளுகிறோம்?

சாதிப் பெயர்களைக் கெட்டவார்த்தைகளைப் போலத் தூக்கியெறிய வேண்டும் என்றார் பெரியார். ஆனால் இன்று கெட்டவார்த்தைப் பேசுபவர்கள் என்றொரு சாதி உருவாக்கினால், அத்தனை பேரும் அதில் ஓர் அங்கம் வகிக்கும் நிலை உருவாகிவிட்டது என்பது மிகையல்ல.
ஒரு ‘பீப் சாங்’கிற்கெதிராகக் கொடி உயர்த்தி விட்டோம். நம்மோடு அன்றாடம் புழங்குகின்ற ‘பீப் சாங்’குகளை நாம் எப்படிக் கையாளப்போகிறோம்?


No comments:

Post a Comment