சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2015

உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!

சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino)  என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1.  'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

 2.  சுருக்கமாக எல் நினோ என அழைக்கப்பட்டாலும், 'எல் நினோ தெற்கத்திய அலைவு' (El Nino Southern Oscillation – ENSO) என முழுமையாக அழைக்கப்படுவதே சரியானது. கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் திசையானது அதற்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திசை மாறுகிறது, காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்டத்தின் காரணமாகவே 'எல் நினோ தெற்கத்திய அலைவு' என்று அழைக்கப்படுகிறது.

3.
 இத்தகைய காற்றின் திசைமாற்றத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலின் காலநிலை முற்றிலுமாக மாற்றமடைகிறது. வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின் மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது. இதேபோல  எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும் குறைந்த மழையைக் கொண்ட  பசிபிக்கின் கிழக்குப் பகுதியானது ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக மாற்றமடைகிறது.

4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல் ரீதியான விளக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப்பட்டே வந்தது. பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும் கப்பலோட்டிகளும் சில ஆண்டுகள் இடைவெளியில் கடலில் நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடைவதையும், மீன்களின் அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர். இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றமடைவதையும் கவனித்தே வந்தனர்.
5. தெற்கத்திய அலைவோட்டம் பற்றி  அறிவியல் ரீதியான விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த 'சர் கில்பர்ட் வாக்கர்'. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார். 1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங்களின் தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை ஆராய்ச்சியில்,  தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியியலை பொருத்தி ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். பதினைந்து ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக் பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் வானிலையில் மாற்றம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார். இந்த நிகழ்வுகளையே 'எல் நினோ தெற்கு அலைவு' என்று அழைத்தார்.

6.
 எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை துல்லி யமாக இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இரண்டு முதல் ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கால இடைவெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல் மாதம் வரை நீடிக்கிறது. 

சில சமயங்களில் எல் நினோ நிகழ்வானது மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டு  வரையிலான கால இடைவெளியில் காணப்படுகிறது. இத்தகைய சமயங்களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பகுதிகளில் முக்கியமாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால், மீன்களின் உணவூட்டப் பொருட் கள் குளிர்ச்சியான நீரின் அடிப்பகுதியில் தங்கிவிடுவதால் மேற்பகுதியின் வெப்பநீரில் ஊட்டப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது, இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும். 

8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு  ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். பொருளாதார ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. 1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் மிகப்பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில பகுதிகளிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகாலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப்படுகிறது. 

1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப்போவதை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிந்தது என்றாலும்,  உலகம் முழுவதும் ஏற்பட்ட  2000க்கும் மேற்பட்ட உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. 

9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினாலும் எல் நினோ நிகழ்வால் சில நன்மைகளும் இருக்கின்றன. வளி மண்டலத்தின் உயரத்தில் வேகமாக கிழக்கு நோக்கி வீசும் 'ஜெட் காற்றோட்டங்கள்' இக்காலப் பகுதியில் பெரும்பாலான புயல்களை வழி நடத்துவதாக இருக்கின்றன.
எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்டங்கள் மாற்றம் பெறுகின்றன. இதனால் பெரும் புயல்கள் வலுவிழக்கின்றன. சில பகுதிகளில் வானிலை மாற்றங்களில் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.

10
. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர்மாறானது லா நினா ஆகும். எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல லா நினா என்றால் ' சிறுமி' என்று பொருள் ஆகும். லா நினா நிகழ்வால் தென் அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வறட்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும். 

பொதுவாக எல் நினோ வை அடுத்து லா நினா நிகழும். ஆனால், எல்லா நேரங்களில் சிறுவனை அடுத்து சிறுமி வரமாட்டாள்.


No comments:

Post a Comment