சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2015

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

ந்தியாவை உலகப்புகழ் ஊழல் நாடாகக் காட்டிய 2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.ஐ. தனது இறுதி வாதத்தை முடித்துவிட்டது. இனி குற்றவாளிகள் தரப்பு தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதற்கான இறுதி-பதில் வாதம் நடைபெறும். பிப்ரவரி 1-ம் தேதியை அதற்கான ஆரம்பக் கெடுவாக குறித்துள்ளார் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. இந்த நேரத்தில் 2ஜி வழக்கின் ஒரு பிளாஷ்பேக்...

2ஜி அலைக்கற்றைக் கதைக்குள் ஒரு முன்கதை...

என்ன நடந்தது?

நாம் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஏறத்தாழ எல்லோரிடமும் 3ஜி வசதி இருக்கிறது. ஆனால், மொத்தமாக வழக்கொழிந்துவிட்ட 2ஜி வசதிதான், அப்போது இந்தியாவின் பேசு பொருள். நாடாளுமன்றத்தை அமளிதுமளியாக்கியது. சி.பி.ஐ., வருமானவரித்துறையை அலைக்கழித்தது. உச்ச நீதிமன்றத்தை சாட்டை சுழற்ற வைத்தது. தொலைபேசிகளில் நாம் 2ஜி வசதியைப் பயன்படுத்தி இண்டர்நெட் சேவையைப் பெறுவதற்கு, தொலைபேசி நிறுவனங்கள் அந்த வசதியை நமக்கு அளிக்க வேண்டும். நமக்கு அளிக்க வேண்டுமானால், அவற்றை அரசாங்கத்திடம் இருந்து அதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும். அப்படி அரசாங்கத்திடம் லைசென்ஸ் வாங்க முயன்ற சில தனியார் நிறுவனங்கள், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக்கொண்டு சில தில்லாலங்கடி வேலையைச் செய்தன. அதற்கு அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, அவருக்கு உதவியாளராக இருந்த ஆ.கே.சந்தோலியா, அன்றையத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சித்தார்த் பெகுரா போன்றவர்கள், அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்கு முயன்ற சில நிறுவனங்களுக்காக சில தில்லுமுல்லுகளைச் செய்தனர். அதுதான் 2ஜி அலைக்கற்றை முறைகேடு.

தில்லாலங்கடிகளும் தில்லுமுல்லுகளும்

2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 2ஜி அலைக்கற்றைகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 1-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று சொன்னது. அவற்றில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏலம் மூலம் 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் இருந்தது. இதை நம்பி, 46 நிறுவனங்கள் விண்ணப்பங்களும் கொடுத்தன. ஆனால், திடீரென என்ன ஆனாதோ... ஏதானதோ தெரியவில்லை. ஏலத்திற்கு யாருக்கும் அழைப்பு வரவில்லை. விண்ணப்பம் கொடுத்திருந்த நிறுவனங்கள்,  'சரி, அரசாங்கம் இன்னும் ஏலத்தை விடவில்லை போல'  என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி, மத்தியத் தொலைத் தொடர்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், 2ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு கடைசித் தேதி, செப்டம்பர் 25 என்று வந்தது. செப்டம்பர் 25 என்றால்... அது 2008-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி இல்லை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி. குழப்பமாக இருக்கிறதா? ஒன்றுமில்லை, பள்ளிக்கூடம் திறந்து காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது, பள்ளிக்கூடம் திறக்கும் தேதியை அரசாங்கம் அறிவித்தால் எப்படி இருக்கும்? அந்தக் கதைதான். அதாவது, போனவருடம் விட்ட ஏலத்திற்கு, இந்த வருடம் தேதி குறித்தார்கள்... இடையில் என்ன நடந்தது என்றால், அவர்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு சத்தமில்லாமல் அலைக்கற்றை உரிமத்தை வழங்கிவிட்டனர். விண்ணப்பம் கொடுத்த நிறுவனங்கள் கொதித்தபோது, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏலம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று பதில் வந்தது.
அதன்பிறகு, இதில் நடைபெற்ற ஊழல்களை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியது. முறையாக ஏலம்விடாமல் சில நிறுவனங்களை அழைத்து வந்து, அவர்கள் கையில் லைசென்ஸை கொடுத்து மாலையும் மரியாதையுமாக மத்திய அரசு அனுப்பிவிட்டது. அதுவும் 2001-ம் ஆண்டு விலையிலேயே அலைக்கற்றை உரிமத்தை,  2007-ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்றது தொலைத் தொடர்புத்துறை. அதை வாங்கிய நிறுவனங்கள், அன்றே, அதை வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டு, கோடிக்கணக்கில் அல்ல.. கோடி... கோடி... கோடிக்கணக்கில் இலாபம் அடைந்தன. அத்தனையும் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பணம். தனியார் நிறுவனங்கள் அள்ளிக் கொண்டு போய்விட்டன. அதனால், அரசாங்கம் நஷ்டமடைந்துள்ளது. அதுவும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னது மத்திய தணிக்கைக் குழு.
அதையும் போகிற போக்கில் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் சொன்னது. அதாவது மத்தியத் தொலைத் தொடர்புத்துறையிடம் இருந்து ரூ.1537 கோடிக்கு 2ஜி அலைக்கற்றையை வாங்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதில் பாதியை அரபு நாட்டு நிறுவனமான ஈடிசாலட்டுக்கு ரூ. 4200 கோடிக்கு விற்றது. ஜஸ்ட் லைக் தட், இந்தப்பக்கம் வாங்கி, அந்தப் பக்கம் கொடுத்ததில் அந்த நிறுவனத்துக்கு லாபம், ரூ. 2600 கோடி. இதேபோல், அலைக்கற்றையை வாங்கிய மற்ற நிறுவனங்களும்செய்தன. இதெல்லாம், 2009-ம் ஆண்டு தொடங்கியதும், புகார்களாகக் குவிந்தன.   சி.பி.ஐ-யும் களத்தில் இறங்கியது. 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆ. ராசா இதில் ஆதாயம் அடைந்த பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், அதற்காக ஆ.ராசா மூலம் குறைந்த விலையில் அலைக்கற்றை லைசென்ஸ் வாங்கி, அதை பல மடங்கு லாபம் வைத்து விற்ற நிறுவனங்கள் உதவி செய்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு கிளம்பியது. 

தி.மு.கவும் தொலைத்தொடர்புத் துறையும்

ஸ்வான் டெலிகாம் மற்றும் ராசாவின் மூலம் ஆதாயம் அடைந்த நிறுவனங்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்திற்குச் சொந்தமான கலைஞர் டி.வியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததாகவும் மற்றொரு பூதம் கிளம்பியது. தலையெழுத்தே என்று அதையும் விசாரிக்க வேண்டிய வேலையில் இறங்கிய சி.பி.ஐ.,  அதிலும் ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அதே நேரத்தில், மத்திய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்று இருக்கின்ற எல்லாத் துறைகளும் இதில் தங்கள் பங்குக்கு பல வழக்குகளைப் பதிவு செய்தன. இதற்கிடையில், தயாநிதிமாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, தனக்கு லைசென்ஸ் கொடுக்காமல், தன்னை மிரட்டி தனது ஏர் செல் நிறுவனத்தை மலேஷியாவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு விற்க வைத்தார் என்று தொழிலதிபர் சிவசங்கரன் ஒரு புகாரைச் சொன்னார். அது ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரமாக ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுபோல, தயாநிதிமாறன் அமைச்சராக இருந்தபோது, அமைச்சர் என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பூமிக்கடியில் பள்ளம்தோண்டி, ஒரு மினி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உருவாக்கி, அவற்றை தனது சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டி.வி.க்கு பயன்படுத்தினார் என்று மற்றொரு விவகாரம் கிளம்பியது. அதிலும் ஒரு வழக்கு தனியாகப் போய்க் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் தனியாக ஒருபக்கம் இருக்கட்டும்... நாம் மெயின் 2ஜி அலைக்கற்றை வழக்கிற்கு வருவோம். அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நடத்துவதில் ஏகப்பட்ட தாமதமானது. சுதாரித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இனிமேல் 2 ஜி வழக்கு எங்களின் மேற்பார்வையில் நடக்கும். சி.பி.ஐ. விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கறார் காட்டத் தொடங்கியது. உச்ச நீதிமன்றம் கறார் காட்டத் தொடங்கிய நேரத்தில், சுப்பிரமணியசாமி பிரதமர் மன்மோகன் சிங்கையும் விசாரிக்க வேண்டும் என்று மனுமேல் மனுப்போட்டு டார்ச்சர் செய்யத் தொடங்கினார். விவகாரம் வில்லங்கமானது. 

கைதுப்படலம் தொடங்கியது 

மத்திய காங்கிரஸ் அரசு, தி.மு.கவை நெருக்கி ஆ.ராசாவை ராஜினாமாச் செய்யச் சொன்னது. வேறு வழியில்லாமல் ஆ.ராசா தனது மத்திய அமைச்சர் பதவியை 2010-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
அவரையடுத்து இந்த விவகாரத்தின் மூலம், கலைஞர் தொலைக்காட்சி ஆதாயம் அடைந்தது. கலைஞர் தொலைக்காட்சி ஆதாயம் அடைந்ததால், அதன் மூலம் அதன் இயக்குனராக இருந்த கனிமொழி ஆதாயம் அடைந்தார் என்ற ரீதியில் கனிமொழியும் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2ஜி அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களின் இயக்குனர்கள், நிர்வாகிகள், அவர்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்க ராசாவுக்கு உதவி செய்த அரசு அதிகாரிகள் என்று ஒரு டஜன் பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக ஆதாயம் அடைந்தவர்களுக்கு எதிராக  நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை, பிரசாந்த் பூஷன் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள், சுப்பிரமணியசாமி ஓயாமல் கொடுத்துக் கொண்டிருந்த குடைச்சல் என்று வழக்கும் வேகம் பிடித்தது.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றம்,  '2ஜி அலைக்கற்றை வழக்கு, கலைஞர் தொலைக்காட்சிக்கு நடைபெற்ற பணப்பரிவர்த்தனை, ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. இந்த வழக்குகளில் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, இவற்றை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

நீதிபதி ஓ.பி.சைனி வந்தார்

டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.சைனி, கொஞ்சமும் ஈவு இரக்கம் காட்டாமல் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார். விடுமுறை என்பதே கிடையாது. டே டூ டே விசாரணை என்ற ரீதியில், வாரத்தின் ஆறு நாட்கள் விசாரணை நடைபெற்றது.  குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஓரிரு முறை ஆஜராகாமல் போனபோது, உடனடியாக அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்துவிடுவேன் என்று சாட்டையை எடுத்தார். இதனால், அனைத்துக் கட்டங்களையும் தாண்டி, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, இந்த வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரி ஷாகித் உஸ்மான் பால்வா, கலைஞர் டி.வி. சரத் ரெட்டி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் ஆஜராகி இருந்தனர். 

‘உடல்நலம் சரியில்லை’ எனச் சொல்லி ஆ.ராசா அப்போது ஆஜராகவில்லை. அன்றைய தினம், நீதிபதி 
ஓ.பி.சைனி, ‘எப்போது உங்கள் இறுதிவாதத்தை முடிப்பீர்கள்?’ என்று சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவருக்கு பொறி வைத்தார். நீதிபதி சைனியின் கேள்விக்குப் யோசிக்காமல் பதில் சொன்ன வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘இந்த மாத இறுதிக்குள் என்னுடைய வாதத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்’ என்றார். ஆனால், அவரால் சொன்னபடி முடிக்க முடியவில்லை. காரணம் இதற்கிடையில், கனிமொழி உச்ச நீதிமன்றத்தை அணுகி, தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ‘2ஜி வழக்கில், என்னைச் சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ சேர்த்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மீது உறுதியான சந்தேகம் இருந்தால், மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒரு துளி அளவு தவறு செய்ததற்கான ஆதாரம்கூட இல்லை. எனவே, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

இதேபோன்ற மனுவை ஷாகித் உஸ்மான் பால்வாவும் தாக்கல் செய்திருந்தார். அங்கு, ‘ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் கனிமொழி இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்’ என சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டார். ‘சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இரு தரப்பு சாட்சி விசாரணை முடிந்துவிட்டது. இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் அதை முடிக்க சி.பி.ஐ சார்பில் திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில், இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என்று வாதிட்டு வெற்றி பெற்றார். 

அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி, ரோஹிண்டர் நார்மன் ஆகியோர், ‘வழக்கில் தீர்ப்பு வரும் காலம் நெருங்கிவிட்டது. இந்த நிலையில், இதில் எந்தவிதமான இடைக்கால உத்தரவோ, விடுதலையோ அளிக்க முடியாது. கனிமொழி, ஷாகித் உஸ்மான் பால்வா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்கும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு, இதில் தொடர்புடையவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற உத்தரவையும் பிறப்பிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். 

சி.பி.ஐ. இறுதிவாதம் முடிந்தது
அதன்பிறகு தினந்தோறும் ஆனந்த் குரோவர் தன்னுடைய வாதங்களை சி.பி.ஐ நீதிமன்றத்தில், அடுக்கிக்கொண்டே வந்தார். அதில் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குக்குத் தொடர்​புடைய பிற வழக்குகளில் அளிக்கப்பட்ட உத்தரவுகளை அவர் மேற்கோள்காட்டினார்.  அத்துடன், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது’, கட்-ஆஃப்’ தேதி ஆகியவற்றில் மாற்றம் செய்ததுடன், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கையும் தவறாக வழி நடத்தியதாக ஆனந்த் குரோவர் குற்றம்​சாட்டினார். அத்துடன், இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பு இறுதிவாதத்தை முடித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதைப் பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி ஷைனி, “சி.பி.ஐ வாதங்கள் நிறைவு அடைந்துள்ளதால் வழக்கில் குற்றம்சாட்டப்​பட்டோர் தரப்பு,  இறுதிவாதங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டார். இதேபோல, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்​துள்ள வழக்கின் இறுதி வாதத்தையும், அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முன்வைக்கவும் அனுமதி அளித்து சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் வருவதற்கும் 2ஜி வழக்கில் தீர்ப்பு வருவதற்கும் சரியாக இருக்கலாம் எனக் கூறப்படுவதால் பதறும் திமுகவின் பல்ஸ் எகிறிக்கொண்டிருக்கிறது.  


No comments:

Post a Comment