சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Dec 2015

பிரேமம் மீது ஏன் இத்தனை காதல்?

கடந்த வாரம் சென்னையில் 200வது நாள் கொண்டாடி இருக்கிறது பிரேமம் என்கிற மலையாளப்படம். அப்படி என்னதான் இருக்கு இதில் இருக்கு என்றுதான் கதையை கேட்ட எல்லாருக்கும் தோணும். ஆண்டாண்டு காலம் அடிச்சுத்துவைச்ச 'பப்பி, பெப்பி, கப்பி' லவ் தான் கதை. சமீப காலத்தில் ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. படம் பெயரோ, ஹீரோவோ, டைரக்டரோ எதுவும் சொல்லத்தேவையில்ல. ஒரே ஒரு வார்த்தை போதும், உங்க உதட்டில் மைக்ரோ, மிக மைக்ரோ புன்னகை வர வைக்க. அந்த வார்த்தை... "மலர் டீச்சர்".
வரலாற்றை சற்றே கிளறிப்பார்த்தால் கேரளாவோட தொடர்பிருக்கிற மாதிரி எடுக்கப்பட்ட (நல்ல) படங்கள் மக்களால மிகவும் சிலாகிக்கப்பட்டிருக்கு. 'அந்த 7 நாட்கள்', 'ஆட்டோகிராஃப்', 'விண்ணைத்தாண்டி வருவாயா'.  இதுவரை வெளிமொழியிலிருந்து இங்கு ரிலீசாகி சக்கைபோடு போட்ட படங்களில் பலவற்றில் உள்ள பொதுத்தன்மை... அவை காதல் (தோல்விப்) படங்கள். அவற்றின் அடிநாதம் நிறைவேறாக் காதல். 

பிரேமத்தில் காட்டப்பட்ட முக்காதல்களில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்பட்டது 'மலர்-ஜோர்ஜ்' காதலே. கல்லூரிக்காலத்தில் வரும் காதலே இளைஞர்களால் கொண்டாப்படுகிறது. ஆட்டோகிராபிலும் சேரன் - கோபிகா காதலே அதிகம் கவனம் பெற்றது. 
கல்லூரியின் 3ஆம் ஆண்டு மாணவரான அடாவடி லாஸ்ட் பெஞ்ச் குரூப்பின் 'தல'  ஜோர்ஜ் (நிவின் பாலி) புது அட்மிஷன் மாணவிகளை அழைத்து ராகிங் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் புதுப்பெண்ணையும் ராகிங் செய்ய அழைக்கிறார். அவரிடம் எந்த வகுப்பு என்று கேட்கும் போது மெல்லிய புன்முறுவலோடு தான் ஆசிரியை என்று மலர் மலர்ந்த புன்னகையுடன்  தெரிவிப்பார் சாய் பல்லவி. மேலும் இன்று ராகிங் செய்யும் இவர்கள்தான் நாளைக்கு உங்களுக்கு எதும் பிரச்சினை என்றால் வருவார்கள் என்றும் மற்ற பெண்களிடம் சொல்லுவார் . அந்த இடத்தில் ஜோர்ஜின் மனதுடன் நமது மனதிலும் சேர்ந்து நுழைந்து கொள்வார். 


இரண்டு மூன்று வயது மூத்த  பெண்ணை டாவடிக்கும் ஜோர்ஜின் துணிச்சல், அவனின் அசட்டு துணிச்சல் செயல்களை முதலில் மெல்லிய புன்னகையுடன் எதிர்கொள்ளும் மலர் மெல்ல மெல்ல ஜோர்ஜிடம் விழுகிறார். மனதுக்குப் பிடித்தவர்களிடம் மட்டுமே பூ கேட்கும் தமிழ் கலாச்சாரப்படி அவனிடம் மல்லிக்கை பூ ( ஜோர்ஜுக்கு அது "முல்லப்பூ" ) வாங்கி வரச்சொல்கிறார் மலர்.  ஜோர்ஜை விட வயதில் கூடியவர் என்பதால் நாகரீகமாக பூ கேட்பதின் மூலமாக புரோபோஸ் செய்கிறார். அந்த இடத்தில் துவங்குகிறது மிகவும் பிரபலமான "மலரே" பாடல்.  
படத்தில் இயக்குநர் காட்டும் ஒவ்வொரு கேரக்டரும் மனதில் ஆணி அடித்தால் போல் நிற்பதும் படத்தை 'மல்லுக்களும் - பாண்டி'களும் கொண்டாட முக்கியக் காரணம்.  அப்பாவியாக மலருக்கு "ஐ லவ் யூ" சொல்ல பல்வேறு திட்டங்கள் போட்டுக்கொண்டிருக்கும் 'மாவா' என்கிற ஜாவா புரொபோசர். அவரிடம் ஆட்டையை போட்டுச் சாப்பிடும் பி.டி வாத்தியார். லெக்சரர் முதல் கல்லூரிப் பெண்கள் வரை அனைவரையும் ஜொள்ளு ஒழுகப் பார்க்கும் ப்யூன். ஜோர்ஜின் மீது லைட்டாக க்ரஷிலிருக்கும் கூட படிக்கும் பெண், கன்றுக்குட்டி காலக் காதலி மேரி, அவரின் அப்பா ஜோர்ஜ், அவளின் தங்கை செலின், அவர்களுடன் எப்போதும் வரும் பையன். படத்தின் இறுதி வரை பார்க்கும் பெண்களிடத்திலெல்லாம் ஐ லவ் யூ சொல்லிக்கொண்டு திரியும் அல்டாப்பு பையன், ஜோர்ஜின் பேக்கரியில் வேலை பார்க்கும் நபர், ஜோர்ஜின் அண்ணன், அறிவழகனாக வரும் நபர், முக்கியமாக சம்பு மற்றும் கோயாவாக வரும் சபரிஷ் வர்மா, மற்றும் கிருஷ்ணகுமார். ஒவ்வொருத்தரும் தங்களின் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தனர்.
மலர் டீச்சருக்கு நினைவு பிறழ்வானதோடு அவரின் கதையை முடித்திருந்தாலோ அல்லது கடைசியில் ஜார்ஜின் திருமணத்துக்கு வெறுமனே வந்து செல்வதாய் அமைத்திருந்தாலோ அவர்களின் கதை சாதாரணமாய் ஆகியிருக்கும். போட்டோ எடுத்துவிட்டு விடைபெற்றுத் திரும்புகையில் மலர் டீச்சரின் கணவன் மலரிடம் கேட்கும் ஒற்றை வார்த்தைக் கேள்வியும், அதற்கு மலர் தரும் ஒரு வரி பதிலும்தான் க்ளாசிக். ஒரு நல்ல நாவலில் கடைசி ஒரு அத்தியாயம் காணாமல் போயிருந்தால் இருக்குமே, அது போன்றதொரு வெறுமை நம் மனதில் ஏற்படுகிறது. முன்பே சொன்னதுபோல், 'மலர்-ஜோர்ஜ்' கதையை ஆறாக்காயத்தோடு நிறைவேறாமல் விட்டதால்தான் தமிழ் வண்டுகள் 'மலரை'ச் சுற்றிச்சுற்றி வருகின்றன.
படம் நெடுக இழைந்தோடும் இயல்பான மென் நகைச்சுவையும், மலரின் நுங்கு சர்பத் குரலும், கேரளாவில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜேஷ் முருகேசனின் கிறங்கடிக்கும் இசையும் ஒரு வித மயக்கத்திலேயே நம்மை ஆழ்த்திவிடுகின்றன.  படத்தின் ஒரு காட்சியில் பாந்தமாய் புடவையுடன் வரும் மலர் டீச்சர் ஒரு காட்சியில் ஒரு செம ஆட்டம் போடுவார். அப்போது ஜோர்ஜ், சம்பு,கோயா மூவரும் அடையும் அதிர்ச்சியை நாமும் அடைகிறோம். அதுதான் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் வெற்றி.  மலரைக் கொண்டாடியது போதாதென்று தற்போது பல்வேறு மொழிகளில் ரீமேக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ப்ரேமத்தில் மலர் ரோலில் நடிக்கும் நடிகையரை ஒப்பிட்டுப் பார்த்து மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவெங்கும் பரவத்துவங்கிவிட்டன. அதற்கேற்றாற் போல் மற்ற மொழிகளில் மலராய் நடிக்கவிருக்கும் லிஸ்ட்டைப் பார்த்தாலே பகீர் என்கிறது. ப்ரேமம் உருவாக்கிய தாக்கத்தை ரீமேக்கப்படும் படங்கள் தருமா என்பது சந்தேகமே. மலர் டீச்சரிடமே மக்கள் தன்னிறைவு பெற்றுவிட்டனர். அதை உடைத்துக்கொண்டு யார் என்ன புரட்சி செய்துவிடமுடியுமென்பது தெரியவில்லை!


No comments:

Post a Comment