சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Dec 2015

அட.. நம்ம விராட் கோலியா இப்படி..? - 7 அசத்தல் மாற்றங்கள்!

விராட் கோலியை கோவக்காரனாக, சண்டைக் கோழியாக, அனுஷ்கா ஷர்மாவுடன் ஊர்சுற்றுபவராக, சேஸிங்கில்  கில்லியாக மட்டுமே இன்னமும் நினைத்து கொண்டிருக்காதீர்கள். அவர் தன்னை அதுக்கும் மேல, அதுக்கும் மேல என நாளுக்கு நாள் செதுக்கி கொண்டே இருக்கிறார்.
 
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், போர்ஃப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் சச்சினை முந்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் டிரெண்ட் அடிக்கிறது. இதற்கிடையே ஆச்சரியமளிக்கும் விதமாக ஆக்ரோஷத்தையே தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் கோலியிடம் இப்போது பெரு மாற்றம். எந்த விஷயத்தையும் மிகப் பக்குவமாக, விவேகமாக கையாள்கிறார். வார்த்தை முதல் களச் செயல்பாடு வரை அது பிரதிபலிக்கிறது. அவரது ஏழு பண்புகள் பற்றி பார்ப்போம்.
 
 
1. தோல்வியை ஏற்றுக்கொள்!
 
வெற்றிக்காக  தீயாய் வெறித்தனமாக உழைப்பது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  வெற்றியை விட தோல்வி கற்றுகொடுக்கும் பாடம் ஏராளம்  என்கிறார் கோலி. மூன்றாண்டுகளாக உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என அந்நாள் வீரர்கள் முதல் இந்நாள் வீரர்கள் வரை, மீடியாவும், சமூகவலைத்தள ரசிகர்களும் கொண்டாடிய விராட் கோலி,  கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் செமத்தியாக சறுக்கினார். நன்றாக வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் வீரர் திடீரென மோசமான ஃபார்முக்கு சென்றால் அதிலிருந்து மீண்டு வருவது எல்லாருக்கும் சாத்தியமல்ல. ஷேவாக் போன்ற வீரர்கள் வேறு ரகம். அவர்கள் மோசமான ஃபார்மில் இருப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்த போட்டியிலேயே அடித்து நொறுக்குவார்கள். அதுதான் அவர்களின் பலம் மற்றும் பலவீனம். ஆனால், விராட் கோலி ஒரு நேர்த்தியான தேர்ந்த பேட்ஸ்மேன். களத்தில் மாஸ் ஷோ  காட்டும் ஹீரோவாக இருப்பதைவிட அணி வெற்றியே முக்கியம் என்பார். அதனால்தான் 2009-13 வரை  கோலியின் அபார ஃபார்ம் காரணமாக சேஸிங்கில் அசைக்க முடியாத கில்லியாக இருந்தது இந்திய அணி.
 
 இங்கிலாந்தில் ஏற்பட்ட சறுக்கலால் தனது பேட்டிங் குறித்தே அச்சமடைந்தார்.  என்ன பிரச்னை என யோசித்தார். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரையில் அதுவும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களில் 140-150 கி.மீ. வேகத்தில் வீசப்படும் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். அதனைக் கையாள்வது சாதாரண விஷயமல்ல. இந்திய அணியில் ராகுல் டிராவிட் மட்டுமே இங்கிலாந்தில் பெருமளவு வெற்றிகரமாக விளையாடிய பேட்ஸ்மேன். இன்று அனைவரும் கொண்டாடும் டிவில்லியர்ஸ் கூட இங்கிலாந்து மண்ணில் மிக மோசமாகத்தான் ஆரம்ப காலங்களில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடித்து இந்தியாவுக்கு ஆஸி. சுற்றுப்பயணம். இங்கிலாந்து மண்ணில் சறுக்கிய கோலியை சாதாரணமாகவே எடை போட்டார்கள் ஆஸி பவுலர்கள். ஆனால் நான்கு சதம் அடித்து அசர வைத்தார் கோலி. காரணம்... ரவி சாஸ்திரி,  கோலி பேட்டிங்கில் மேற்கொள்ளச் சொன்ன மாற்றம். அது விராட் கோலிக்கு நல்ல பலன் கொடுத்தது. இங்கிலாந்து மற்றும் ஆஸி மண்ணில் வேகப்பந்துவீச்சைக் கையாளும்போது, பவுலரின் மனநிலையைக் கணித்து கிரீஸுக்கு வெளியே வந்து எந்தவொரு ஷாட் விளையாடினாலும் ஜொலிக்கலாம் என்பதுதான் ரவி சாஸ்திரி கொடுத்த டிப்ஸ். ஆரம்பத்தில் இந்த முறையில் விளையாடுவது சரியாக வருமா என  யோசித்தாலும், தனது பேட்டிங்கில் சரிவு ஏற்படுவதை கண்டு, ஆட்டபாணியை உடனடியாக மாற்றினர் கோலி. அதன் பின் வெற்றி வந்து சேர்ந்தது. 'தோல்வியில் இருந்துதான் வெற்றி' வரும் என்பதை கோலி உணர்ந்த தருணம் அது. தோல்வியை கோலி எப்போதுமே விரும்பமாட்டார்;  ஆனால் தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து  உடனடியாக சரி செய்யக் கற்றுக் கொண்டார்!
 
 
2. ஆவேச ராஜா!
 
"எல்லாராலும் ஒரே மாதிரியான உத்தியை  கடைபிடிக்க முடியாது. ஒவ்வொரு கேப்டனுக்கும் தனி உத்தி இருக்கும். ஒரு கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்?" செய்தியாளர்களிடம் விராட் கோலி கேட்ட கேள்வி இது.
 
களத்தில் ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம். அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும். ரசிகர்களிடமோ, மீடியவிடமோ, வர்ணனையாளர்களுக்கோ  பதில் சொல்வதற்காக பயந்து பயந்து களத்தில் விளையாடமுடியாது. கண்ணியமான வகையில்தான் களத்தில் செயல்படுகிறேன் என்னை ஏன் சீண்டி கொண்டே இருக்கிறீர்கள் என்பது கோலியின் மன ஓட்டம். 
கோலி சொல்வதில் உண்மையும் இருக்கிறது. வெளிப்படையாக இருப்பது எப்பவுமே நல்லது. விராட் கோலி  திடீரென பதட்டப்படுவதில்லை. போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அக்ரசிவ் பாணியை கடைபிடிப்பது அவர் ஸ்டைல். அக்ரசிவ்  என்பது பந்துகளை சிக்சருக்கு விரட்டுவது கிடையாது. ஃபீல்டிங்கின்போது கூட போட்டியை எதிரணியினருக்கு விட்டு கொடுக்காமல் கடைசி வரை போராடுவதுதான் விராட் கோலியின் அக்ரசிவ் மனப்பான்மை.  டெஸ்ட் போட்டிகளில் விராட்டின் அக்ரசிவ் மனப்பான்மைதான் இந்தியாவுக்கு வெற்றிகளை தேடி தருகிறது.
 
கடந்த தொடரில் தென்னாபிரிக்காவை 2-0 என தொடரை வென்றாலும், அடுத்த போட்டி ஒன்றும் ரப்பர் ஆட்டம் கிடையாது, அதையும் வென்றே ஆக வேண்டும் என வீரர்களிடம் சொன்னார். கோட்லா டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்சின் அபாரப் போராட்டத்தை முறியடித்து ஐந்தாம் நாளின் கடைசி செஷனில் வெறும் நான்கு ஓவர்களில் ஆட்டத்தை முடித்து ஸ்டம்ப்களை பிடுங்கினர் இந்திய வீரர்கள். விடாக்கொண்டன் விராட் கோலியின் அக்ரசிவ் மனப்பான்மைதான் இந்த டெஸ்ட் போட்டியை வெல்ல காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எதிரணியை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதன் உத்திக்கு, சம்பிரதாயமாக நடக்கும் கடைசிப் போட்டியிலும் வெறியோடு விளையாடி 338 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஓர் உதாரணம்.
 
 
3. வீரர்களை விட்டுக்கொடுக்காதே!
 
விராட் கோலி தோல்விக்காக எப்போதும் அணியில் விளையாடிய  நபர்களை பிரஸ்மீட்டில் வைத்து குற்றம் சாட்டமாட்டார். கோலிக்கு வயது 27. ஏறக்குறைய இந்திய அணியில் தற்போது விளையாடுபவர்கள் அனைவருக்குமே வயது 23- 28 தான். இதனால் சீனியர், ஜூனியர் வேறுபாடு பிரச்னை கோலிக்கு இல்லை. தோல்விக்கு அணியில் இருக்கும் ஓரிரு வீரர் மட்டும் காரணமாகிவிட முடியாது என்பார் கோலி. பேட்டிங் மட்டுமோ, பவுலிங் மட்டுமோ, பீல்டிங் மட்டுமோ வைத்துக்கொண்டு ஒரு போட்டியை வெல்ல முடியாது.  மூன்று துறைகளிலும் வீரர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பது கோலி சொல்லும் ரகசியம். இந்திய அணி வரலாற்றிலேயே பீல்டிங்க்காக அதிக பயிற்சி கொடுக்க பயிற்சியாளரிடம் வலியுறுத்தியது கோலி தான்.
 
கோலியின் அடுத்த  இலக்கு இந்திய அணியை வேகபந்துவீச்சில் தரம் உயர்த்துவதுதான். இதற்காக 10 -12 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரு குடும்பம்தான். இதில் யாரையும் யாருக்காகவும் விட்டுகொடுக்ககூடாது என்பது கோலி ஸ்டைல்!
 
 
4. பெஸ்ட் பாய் ஃப்ரெண்ட்!
’பெண்கள் நம் கண்கள், தெய்வங்கள்’ என்றெல்லாம் போலியாக  தன்னை வெளிபடுத்திக்கொள்ளாமல் ஆண்களைப் போன்று பெண்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும்  என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் கோலி. ’பெண்களை நாம் நமக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை விதைத்துள்ளோம். இதுவே பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல்கள் போன்ற பலவற்றுக்கும் அடிப்படைக் காரணம். பெண்களைப் பற்றிய ஆண்களின் மனநிலை வருத்தம் தருகிறது என்றும் சொல்லியிருக்கிறார். 
இதை வெறுமனே சம்பிரதாயமாகச் சொல்லவில்லை கோலி. தன் காதலிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் மூலம் அதை நிரூபிக்கவும் செய்கிறார். விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் நெருக்கமாக இருப்பதை பற்றியெல்லாம் பலரும் விமர்சித்தார்கள். உலகக் கோப்பை தோல்விக்கு அனுஷ்கா ஷர்மா தான் காரணம் என ஆன்லைனில் பரிகசித்தார்கள். எவ்வளவு இடர்பாடுகள், தொந்தரவுகள் இருந்தாலும் அனுஷ்கா ஷர்மாவுக்கு பக்கபலமாக, பாதுகாப்பாக மோசமான காலகட்டத்திலும் உடன் இருந்தார் விராட் கோலி. அந்தக் குணமே விராட் கோலிக்கு ரசிகைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. இக்கட்டான நேரத்தில் எத்தனை ஆண்கள் பரிகாசம் செய்தாலும் தனக்காக ஒருவன் இருக்க வேண்டும் என்பதுதானே பெண்களின்  விருப்பமும்!
 
5. மீடியா மீது பாய்ச்சல்!
தென்னாபிரிக்கா தொடரில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றும், பல மீடியாக்கள் பிட்ச்சை குறை சொல்வதையே குறியாக இருந்தார்கள். வேகப்பந்துக்கு சாதகமாக பிட்ச் அமைக்கும்போது சுழற்பந்துக்கு சாதகமாக ஏன் பிட்ச் அமைக்க கூடாது? அவ்வாறு அமைக்க கூடாது என்றோ, இப்படித்தான் பிட்ச் இருக்கவேண்டும் என்றோ ஏதேனும் விதிகள் இருக்கிறதா? தோல்வி அடையும்போது கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் வெற்றி பெற்றாலும் வீரர்களின் திறமையை அங்கீகரிக்காமல் பிட்சை குறை சொல்லலாமா?’ என்றெல்லாம் காரசாரமாக கொந்தளிக்கிறார் கோலி.
எங்களைப் பற்றி நெகடிவ்வாக எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், நிஜமாகவே ஒரு பவுலர் நன்றாக பந்து வீசினாலோ, பேட்டிங் செய்தாலோ கூட அவர் இந்திய வீரராக இருந்தால் சிறியளவில் கூட பாராட்ட மறுப்பது ஏன்?’ என்று கேட்டிருக்கிறார்.
 
இதற்குமுன் இருந்த கேப்டன்கள் மீடியாக்களின் கேள்விக்கு மழுப்புவார்கள். ஆனால் இம்முறை கோலியோ எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். வீரர்களுக்கு ஆதரவாக ஒரு கேப்டன் மீடியாவில் வெளிப்படையாக பதில் அளிப்பது அணியில் உள்ள வீரர்களுக்கு மிகுந்த மன தைரியத்தைக் கொடுக்கும். சுழற்பந்துக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டது உண்மை என்றாலும், அஷ்வின், ஜடேஜா , குறிப்பாக அமித் மிஸ்ரா , கடைசி போட்டியில் உமேஷ் யாதவ் அட்டகாசமாக பந்து வீசியதை யாராலும் மறுக்கமுடியாது. 'தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் மனதில் புழுங்காமல் கேட்டு பெறுவதில் தவறில்லை' என்பதை உணர்த்தியிருக்கிறார் இந்த டிரெண்டி நாயகன். 
 
6. தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாதே!
 
சாதனைகளுக்காக வெறுமனே ரன்களை சேர்ப்பது கோலிக்கு பிடிக்காத காரியம். அணி வெற்றி பெறுவதே முக்கியம். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் 500 ரன்களை அடித்து அந்த போட்டி டிரா ஆவதில், விளையாடி என்ன பயன் இருக்க போகிறது? ஒன்று வெற்றி அல்லது தோல்வி என இரண்டில் ஒரு முடிவு கிடைத்தால் தானே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என கேட்கிறார் விராட் கோலி.
 
வேண்டுமென்றே ஜவ்வென இழுத்து கடைசி ஓவரில் ஹீரோயிசம் காட்டும் பழக்கம் கோலிக்கு கிடையாது. ஒரு விளையாட்டை ரசிகர்களின் பொழுதுபோக்குக்கோ, தனிப்பட்ட சாதனைகளுக்காகவோ விளையாடக்கூடாது. விளையாட்டு வீரருக்கான இலக்கணத்தோடு விளையாட வேண்டும். அந்த வகையில் விராட் கோலி சிறந்த விளையாட்டு வீரருக்கான பண்புகளைக் கொண்டவர். தனிப்பட்ட அளவில் மட்டுமின்றி கேப்டனாக இருக்கும்போதும் அதே பாணியைத்தான் கடைபிடிக்கிறார். கோட்லா டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில், கோலி அவுட் ஆனதும் ரஹானே  சதத்துக்காக நேரத்தை வீணடிக்காமல் அதிரடியாக விளையாடி சதமடித்து இந்தியாவை வலுவான ஸ்கோருக்கு உயர்த்தினார். ’எனக்கு ரஹானே மாதிரி வீரர்கள்தான் வேண்டும்’ என்கிறார் கோலி.
 
 
7. வெற்றி மீது வெறி!
 
கோலிக்கு ரன்கள் சேர்ப்பதில் எப்போதுமே ஒரு காதல் உண்டு. ஒரு சதமடித்து அவுட் ஆனால் கூட, கடும் ஏமாற்றத்தோடு தான் களத்தில் இருந்து திரும்புவார். ஒரு பேட்ஸ்மேனாக, களத்தில் நின்று வெற்றி பெற  செய்ய வேண்டும் என்பது கோலியின் விருப்பம்.
 
கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் 20 ஓவர் போட்டி விளையாடும்போது, முதலில் பேட்டிங் செய்த  இங்கிலாந்து அணி 180 ரன்களைச் சேர்த்தது. அதன் பின் இந்தியாவின் இன்னிங்க்ஸில் கோலி களமிறங்கி பந்துகளை நொறுக்கினார். 41 பந்தில் 10 பவுண்டரி ஒரு சிக்சர் என 66 ரன்களை எடுத்து, ஷார்ட் பந்தில் தேவையற்ற ஒரு மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார். அவர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 14 ஓவரில் 131 ரன். இந்தியா வெற்றிக்கு ஆறு ஓவரில் 50 ரன்கள் தேவை. கேப்டன் தோனி களத்தில் இருந்தும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அந்தப் போட்டியில் கோலி சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவரை யாரும் குறை சொல்லப்போவதில்லை எனினும் அன்றைய தினம் இரவு முழுவதும் தனியாக உட்கார்ந்து, அந்த மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனதால் தான் இந்திய அணி தோற்றது என குற்ற உணர்ச்சியை உணர்ந்ததாக பின்னர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதுதான் கோலி. வெற்றி மீது வெறி கொண்டவர். 
 
 அடுத்த உலககோப்பையில் கோலி தான் இந்தியாவை வழிநடத்துவார் என்று தெரிகிறது. அப்போது அவருக்கு 31 வயது முடிந்திருக்கும். எந்த இங்கிலாந்தில் சரிவைச் சந்தித்தாரோ அதே இங்கிலாந்து மண்ணில் அடுத்த உலகக்கோப்பையை வென்றால், கோலி இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக இடம் பெறுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!


No comments:

Post a Comment