சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2015

மோடி சர்க்கார்... இப்போது மோடி பிளஸ் சர்க்கார்!

மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றதிலிருந்து,  சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, மோடியே அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துக்கொண்டு ஒன் மேன் ஷோவாக ஆட்சி நடத்துகிறார் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி இருந்தனர். இதே குற்றச்சாட்டு பா.ஜனதா தரப்பிலும் முணுமுணுப்பாக கிளம்பி இருந்தது.
மோடி பதவியேற்ற முதல் ஒன்றரை ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு அதிக சுற்றுப்பயணம் மேற்கொண்டது மோடிதானே தவிர, வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் அல்ல என்று கூறுமளவுக்கு இந்த குற்றச்சாட்டு விஸ்வரூபமெடுத்தது.

இந்நிலையில் தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி அமைச்சரவை வட்டாரங்களில் பேசப்படுகிறது. மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தற்போது அமைச்சரவை செயல்பாடுகள் குறித்தும், முடிவுகள் எடுப்பது குறித்தும் வெளிப்படையாக பேச தொடங்கி உள்ளனர். உதாரணத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு ( GST ) பிரச்னை குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி மீடியாக்களிடம் பேசுவதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியே தலைமையேற்று செயல்பட்டார். 

அதேப்போன்று வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், அண்மையில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம்,  நின்றுபோய் இருந்த இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

மேலும் கடந்த வாரம் பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் நிலைப்பாட்டையும், நலன்களையும் பாதுகாக்கும் வகையிலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில் சுற்றுச் சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவேட்கர் முக்கிய பங்காற்றினார்.
இதுதவிர முக்கிய பிரச்னைகளில் பிரதமர் மோடி பேசாத தருணங்களில், உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அரசின் குரலை வெளிப்படுத்துகிறார். 

இவற்றின் மூலம் மத்திய அரசு கூட்டு பொறுப்புடன் இயங்குகிறது என்ற தோற்றம் ஏற்படுவதோடு, அனைத்து மட்டத்திலிருந்தும் வரும் விமர்சனங்களிலிருந்து பிரதமர் மோடியை பாதுகாக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 

இந்நிலையில் பிரதமரிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு பிகார் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விதான் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும், பிரதமர் ஒருவரால் மட்டுமே ஆட்சியை நடத்தி சென்றுவிட முடியாது என மோடி உணர்ந்திருக்கக்கூடும் என்றும் பா.ஜனதா எம்.பி.க்கள் மத்தியில் பேசப்படுவதாக கூறப்படுகிறது. 

இவையெல்லாவற்றுக்கும் மேலாக கடும் விமர்சனத்திற்குள்ளான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களும் இனி வெகுவாக குறையும் என்ற மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. 

மோடியிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நல்லது நடந்தால் சரிதான்! 


No comments:

Post a Comment