சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Dec 2015

'தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி எனக்கு இருக்கிறது..!' - தமிழச்சி வீரலட்சுமி

ட தமிழகத்தில் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் செம சவால் கொடுக்கிறார் அந்தப் பெண். நாளொரு ஆர்ப்பாட்டம் பொழுதொரு போராட்டம் என்று எப்போதும் சீனில் இருக்கிறார். அவர்.... ‘தமிழர் முன்னேற்றப் படை’யின் வீரலெட்சுமி. அவருடைய லேட்டஸ்ட் ஆக்ரோஷ அறிவிப்பு, ரஜினிகாந்த் வீடு முற்றுகை. காரணம், ஜல்லிக்கட்டு தடையை எமி ஜாக்சன் ஆதரித்ததாம். 

எமிக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம்... அதில் ஜல்லிக்கட்டுக்கு என்ன நிர்பந்தம் என விசாரிக்கப் போனால்...  வீரலெட்சுமி இன்னும் வெலவெலக்க வைத்தார். 

சென்னை, பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள அவருடைய 'தமிழர் முன்னேற்றப் படை' அலுவலகத்திற்கு செல்லும் வழியெல்லாம், 'தலைவர் வீரலட்சுமி அழைக்கிறார்' என ரகளை சுவரொட்டிகள். வீரலட்சுமியை சந்தித்ததும் அதையே நம்முடைய முதல் கேள்வியாக்கினோம்.
இவ்வளவு போஸ்டர்களை எப்படி வளைச்சு வளைச்சு ஒட்டியிருக்கீங்க? இதுக்கெல்லாம் ஏது காசு?

அண்ணே.. அதுக்குன்னு ஒரு ஐவர் குழு இருக்குண்ணே. அவங்கதான் இதைச் சிறப்பாக செய்யறாங்க. அமைப்பின் பொதுச் செயலாளரான கணேசன் அண்ணா, இன்னும் நான்கு தம்பிகள்தான் அந்த அந்த சிறப்பான போஸ்டருக்கு பொறுப்பாளர்கள். படித்தவர்கள் முகநூல், வாட்ஸப்புன்னு டெக்னிக்கலா போயிடறாங்க. ஆனா, பாமர மக்கள்கிட்ட போஸ்டர் மூலமாத்தானே நம்ம கருத்துகளையும் செயல்பாட்டையும் கொண்டு போக முடியும். அதுக்காகத்தான் அவங்க பார்வை எங்கெல்லாம் இருக்குமோ, அங்கெல்லாம் எங்க அமைப்பின் போஸ்டர் ஒட்டப்படுது. அப்புறம்... செலவை எப்படி சமாளிக்கிறேன்னு கேட்டீங்கள்ல... நானும் நிறைய தம்பிகளும் எங்களின் லட்சியத்தை வென்றெடுக்க, எங்க சொத்துக்களை வித்து அந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுறோம். என் அப்பா சொத்துக்களை அவர் அனுமதியோட நான் செலவழிக்கிறேன். இன்னும் உணர்வுப்பூர்வமா பலர் நன்கொடை கொடுக்கக் காத்திருக்காங்க. ஆனா, யாரிடமும் கைநீட்டி காசு வாங்கி கட்சி நடத்தும் எண்ணமும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை! 

என்னது கட்சி நடத்துறீங்களா...? பதிவு பண்ணிட்டீங்களா என்ன?

சீக்கிரம் பதிவு பண்ணிருவோம்ண்ணே. அதுக்கான வேலையெல்லாம் வேகமா நடந்துட்டு இருக்கு..!

சரி... ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான கருத்தைச் சொல்லியது நடிகை எமிஜாக்சன்.  ஆனா, அதற்காக ஏன் நடிகர் ரஜினிகாந்தை கண்டிக்கிறீர்கள்?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் கலாச்சாரம், மாண்புகளை அனுபவரீதியாக அறிந்து வைத்திருப்பவர். ஜல்லிக்கட்டு தொடர்பான படங்களில் நடித்திருப்பவர். அவருடன் எந்திரன்-2வில் ஜோடி சேருகிற ஒரு நடிகை இந்தக் கருத்தை சொல்லும்போதே ரஜினிகாந்த் அல்லவா அதை முதலில் கண்டித்திருக்க வேண்டும். அவர் அமைதியாக இருந்ததால் அந்த நடிகை சொல்வதை ஆமோதிக்கிறார் என்றுதானே அர்த்தம்? அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். எமி ஜாக்சனை அவருடைய படத்திலிருந்து நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!

ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை என்று யாரும் உங்களிடம் கேட்டதில்லையா?

அண்ணே... இது என் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். என் குடும்பத்தில் இதற்கு முழு ஆதரவு இருக்கிறது. என் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இப்படிக் கேட்டு மிரட்டவும் செய்கிறார்கள். கண்முன் நடக்கிற நல்லதை கொண்டாடுகிற நாம், கெட்டதை பார்க்கும்போது தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால் அப்படித் தட்டிக் கேட்காமல் நமக்கென்ன என்று ஒதுங்கித்தானே போகிறோம். இப்படியே அனைவரும் ஒதுங்கிக் கொண்டு போனால் தமிழரை, தமிழினத்தை வழி நடத்த யார் இருப்பார்கள்? தமிழகத்தை ஒரு தமிழர் ஆள்வது எப்போது? அதான் என் கடமையை செய்கிறேன்!
அவ்வளவு ஏன், 'தமிழர் முன்னேற்றப் படை' யின் சார்பில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் என்று கட்சியின் அதிகாரபூர்வ வலைதளத்தில் நான்தான் முதன்முதலில் பதிவிட்டேன். ஆனால், அதை தி.மு.க அப்படியே காப்பி அடித்துவிட்டது. நாங்கள் செய்தி பதிவிட்ட நேரத்தையும் எடுத்துப் பாருங்கள்... அதைக் காப்பியடித்து தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆர்ப்பாட்ட அறிவிப்பு நேரத்தையும் எடுத்துப் பாருங்கள்... எல்லாக் கட்சியும் எங்களைக் காப்பியடிக்கிறாங்கண்ணே..!

இவ்ளோ தீவிரமாகச் செயல்படுகிறீர்களே..! எந்த தருணத்தில், எந்த வயதில் அரசியல்தான் உங்கள் பாதை என்று தேர்ந்தெடுத்தீர்கள்?

சரியா பதினெட்டு வயசுலேண்ணே. ஆனா, அதுக்கான ஆர்வம் சின்ன வயது முதலே இருந்தது. கோகோ, கபாடி போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிகளைக் குவித்திருக்கிறேன். எப்போதும் அதி உற்சாகத்துடன் இருப்பேன். 6-ம் வகுப்பு படிக்கும்போதே என்னை 9-ம் வகுப்பு மாணவிகளுடன் ஓட்டப் பந்தயத்துக்காக ஓட விடுவார்கள். அப்போதே என் சக்திக்கு மீறியவர்களுடன் போட்டியிடவும் எதிர்க்கவும் ஆரம்பித்து விட்டேன். பின்னர் என் சமூகப் பார்வையை புரிந்து கொண்டு ஒரு தொழிற்சங்கத்தில் இணைந்துப் பணியாற்ற அழைத்தார்கள். போனேன். என்னுடைய அயராத உழைப்பால் மாநிலப் பொதுச் செயலாளர் வரையில் வந்தேன். பின்னர், அந்தத் தொழிற் சங்கத்துக்கு முழுமையாய் செயலாற்ற ஒரு பெண்ணே இருந்தால் நல்லது என்று என்னையே அதற்கு தலைவராக்கினார்கள். தொழிற்சங்கத்தில் இருந்தபோது, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களைக் கண்டித்தும் முற்றுகையிட்டும் பல்வேறு போராட்டங்களை ஆயிரக் கணக்கில் பெண்களை திரட்டி நடத்தியுள்ளேன். 

அந்தச் செயல்பாடுகளால் ’பெரியார் புரட்சிகர வீரர்கள் படை’ என்று ஒரு அமைப்பைத் துவக்கினோம். 2009 ஈழப் படுகொலையின் தாக்கமாக, எங்கள் அமைப்பை தமிழர் முன்னேற்றப் படை என்று ஆக்கிவிட்டோம்! 

அரசியலில் உங்கள் பிரதான எதிரி யார்?

காங்கிரஸை கருவறுத்தே தீரவேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டம் தொடங்கி குமரி வரை  துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டே 32 நாட்கள் நடை பயணம் மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும், மத்தியில் சோனியாவும் எங்களின் அடுத்த முக்கியமான எதிரிகள். இவர்களைப் போன்றவர்களால்தான் பெண்கள் அரசியலுக்கே வரத் தயங்குகிறார்கள். ஆனால், நான் அந்த வரலாற்றை மாற்றி எழுதுவேன்!

’இன்னும் உங்க அமைப்பு கட்சியாகப் பதிவு செய்யலைனு சொல்றீங்க? அப்புறம் எப்படி தேர்தல்ல போட்டியிட்டு, கூட்டணி சேர்ந்து, ஆட்சியைப் பிடித்து...!?

நம்முடையது தேர்தல் அரசியல்தாண்ணே. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம் பகுதிகளில் எங்கள் அமைப்புக்கு பலத்த ஆதரவு இருக்கு. வருங்காலத்தில் எங்களோடு எந்தக் கட்சி ஒருமித்த கருத்து கொள்கிறதோ, அதனோடு கூட்டணி வைத்து பயணிப்போம். ஆனால், எங்களை யாராவது கூப்பிட்டால்தான் கூட்டணியைப் பற்றிப் பேசுவோம். நாங்களாகப் போக மாட்டோம்!

அரசியலில் இப்படி படபடவென பேசினால், நிறைய எதிரிகள் உருவாகிவிடுவார்களே!

அட... இப்பவே அதற்கு என்ன குறைச்சல்? ஆனால், என்னைக் கொல்ல வருகிற பத்து பேரில் ஒருவரை என்னால் சாய்க்க முடியாதா?  நான் தமிழச்சிண்ணே..!  எதையும் யாரையும் சமாளிப்பேன்!
தி.மு.கவுக்கு ’நமக்கு நாமே’, பா.ம.கவுக்கு ’மாற்றம்-முன்னேற்றம்’. இது போல உங்களுக்கு..? 

புதிய ஆட்சி-புதிய அரசியல்..!

ஒருவேளை ஏதோ ஒரு சந்தர்ப்பவசத்தால், நீங்கள் தமிழக முதல்வராகி விட்டால், உங்கள் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? 

சந்தேகமே வேண்டாம்... தமிழ்நாட்டில் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணிகளில் 95 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்ற ஆணையில்தான்! 

உங்கள் அமைப்பு கட்சியாக மாறினால், அதன் சின்னம், அடையாளம் என்ன?

சின்னம் பனம் நுங்கு. அடையாளம், திருவள்ளுவர் படம்!

அரசியலில் எல்லாரையும் வசை பாடுகிறீர்கள். தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியும் உங்களுக்குப் பிடிக்காதா?

தமிழர்க்காக குரல் கொடுக்கும் அய்யா வைகோ, அண்ணன்கள் திருமா, சீமான், வேல்முருகன்னு நிறைய பேரைப் பிடிக்கும்!

இவர்களில் யாருக்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

’’மற்றவர்கள் பற்றிச் சொல்வதற்கு முன் எனக்கே அந்தத் தகுதி இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறேன்!


அப்படிப் போடு! 


No comments:

Post a Comment