சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2015

2015ன் வெற்றித் திரைப்படங்கள் ஒரு பார்வை!

தனி ஒருவன் :


ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, டைரக்டர் ராஜா மூவருக்கும் இது ஒரு ஸ்டைலிஷ் கம் பேக். மிகச்சில படங்களில்தான் ஹீரோ கேரக்டரையும் தாண்டி வில்லன் கேரக்டர் அதிகம் பேசவும், விரும்பவும்படும். அந்த வரிசையில் ஸ்மார்ட் சித்தார்த் அபிமன்யூ இந்த வருட சென்சேஷன். சாதாரண நல்லவன் vs கெட்டவன் கதையில் பரபர திரைக்கதையின் மூலம் பம்பர் ஹிட் அடித்தார்கள். கதாப்பாத்திரங்களின் நேர்த்தி, சுபாவின் டயலாக்ஸ், ஆதியின் இசை, நயன்தாராவின் துறுதுறு நடிப்பு என ஏகப்பட்ட ப்ளஸ்கள்.

நானும் ரவுடி தான் :


இதை ஒரு லவ்லி ரொமாண்டிக் காமெடி ஹிட் என சொல்லலாம். விஜய் சேதுபதி எப்பவும் போல பட்டையை கெளப்ப, நயன்தாரா எப்போதும் இருப்பதை விட இன்னும் க்யூட் குட்டிப்பெண்ணாக அழகு சேர்க்க, பார்த்திபன் அதே அதார் உதார்களோடு வலம் வர, அனைவருமே போட்டிபோட்டு ரசிக்க வைத்தார்கள். படத்தில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் கிச்சுகிச்சு மூட்டின. விக்னேஷ் சிவன் அசால்ட்டாக சிக்ஸர் அடித்தார்.

காக்கா முட்டை


உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா இந்த காக்கா முட்டை. பல சீரியஸான விஷயங்களை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், உள்ளது உள்ளபடியே நம்முன் காட்சிப்படுத்தியும், நமக்கு மிக அருகிலேயே இருந்தும், நாம் கவனிக்க மறந்த கவனிக்க மறுத்த விஷயங்களாலும் கவனம் ஈர்த்தது. கதை மட்டுமா...? அதில் நடித்த கதாப்பாத்திரங்கள் அத்தனையும் கனக்கச்சிதம். இந்த படத்திற்காக அறிமுக இயக்குநர் மணிகண்டனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தார்கள் மக்கள்.

என்னை அறிந்தால்


’தல’ அஜித்தின் மாஸ் இமேஜை உடைத்தெறிந்த ஒரு க்ளாசிக் ஹிட். போலீஸ் ஆஃபிஸராக, த்ரிஷாவின் காதலனாக, ஈஷாவின் அப்பாவாக என ’சத்யதேவ்’ ஒரு பக்கம் அப்ளாஸ் குவிக்க, அந்த பக்கம் அருண் விஜய் வில்லனாக அதகளம் செய்தார். கௌதம் மேனனின் மேஜிக் டைரக்‌ஷன் வொர்க் அவுட் ஆக, படம் ரிலீஸான முதல் நாள், தியேட்டரில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து, அருண் விஜய் மகிழ்ச்சியில் அழுதது நெகிழ்ச்சி க்ளைமேக்ஸ்.

வேதாளம்


பழைய பழிவாங்கல் கதைதான் என்றாலும் பக்கா எண்டர்டெய்னராக வசூல் வேட்டையில் ஹிட் அடித்து, தல ரசிகர்களுக்கு ஹாட்ரிக் சந்தோஷத்தை கொடுத்தது வேதாளம். மாஸ் ரவுடி வேதாளத்தை விட பாசமான அண்ணன் கணேஷ் கவனம் ஈர்த்தார். லக்‌ஷ்மி மேனனும் தன் பங்குக்கு அழகு எக்ஸ்ப்ரெஷன்களால் அள்ள,  இந்த அண்ணன் – தங்கை உறவே படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. தல ரசிகர்களுக்கு ஏற்றவாறு அனிருத்தும் இரண்டு அதிரடி பாடல்கள் கொடுக்க, இந்த தீபாவளியும் ‘தல’ தீபாவளி ஆனது.

பாபநாசம்


மலையாள ‘த்ரிஷ்யத்தின்’ தமிழ் வெர்ஷனே பாபநாசம். ஆனால் த்ரிஷ்யத்தை பார்த்து சிலாகித்தவர்களும் பாபநாசத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்ததில் இருக்கிறது ரீமேக்கின் நேர்த்தி. அழகு நெல்லைத் தமிழாலும் தனக்கே உரிய ஆளுமையாலும் படத்தை அலங்கரித்தார் கமல். க்ளைமேக்ஸில் மூவரும் உடைந்து போயிருக்க, கமல் பேசும் வசனங்கள் எபிக். ஆஷா சரத், கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி என மற்ற கதாப்பாத்திங்களும் வலுவூட்ட,  அப்ளாஸ் அள்ளியது பாபநாசம்.

இன்று நேற்று நாளை


தமிழில் அத்தி பூத்தாற் போல ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்; அதில் அதே தமிழ் மசாலா. கதையில் டைம் மிஷினை கொண்டுவந்தாகிவிட்டதே என இஷ்டத்துக்கு உதார் விடாமல் அடக்கமாகக் கையாண்டு ட்விஸ்ட் வைத்ததில் இருக்கிறது இயக்குநரின் வெற்றி. கலகல காமெடி வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். வித்தியாசமான முயற்சியில் சற்று மெனக்கெடல்களும்,  சுவாரஸ்யங்களும் இருந்ததால் கவனம் ஈர்த்தது.

டிமாண்டி காலனி


காமெடி பேய்களைப் பார்த்து சிரித்துப் பழகியிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை வெலவெலத்துப் போக வைத்ததே டிமாண்டி காலனியின் சக்ஸஸ் சீக்ரெட். ஒரே அறை; நான்கே பேர்; திகில் இரவு; இவ்வளவுதான் படம். கேமரா ஆங்கிள்களையும், பின்னணி இசையையும் கொண்டே பார்வையாளர்களை கட்டிப்போட்டார்கள். தமிழ் சினிமாவின் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாமல் ஒரு த்ரில் அனுபவம் கொடுத்ததற்காகவே ஏகபோகமாகக் கொண்டாடினார்கள் படம் பார்த்தவர்கள். 

மாயா
தற்போது இருக்கும் பேய் பட ட்ரெண்டில் கொஞ்சம் பயமுறுத்தி விட்டாலே படம் ஹிட்டாகும் என்ற நிலமை இருக்க,  ஏகத்துக்கும் பல்ஸ் ஏற்றி ஹிட்டடித்தது மாயா. ஓவியர் ஆரி, கணவனைப் பிரிந்த நயன்தாரா என இரு கதைகளிலும் கச்சிதமாக பயணித்து, க்ளைமேக்ஸ் முடிச்சை அவிழ்ப்பது வரை சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டதில் பேய் ஹிட் அடித்தது.
 
காஞ்சனா 2
ராகவா லாரன்சின் பார்த்து சலித்த அதே பேய், அதே பழிவாங்கல், அதே பரிதாப ஃப்ளாஷ்பேக். அதே நம்பிக்கையோடு மக்களும் செல்ல, எதிர்பார்ப்பை கொஞ்சமும் சிதறடிக்காமல் லாரன்ஸ் அந்த ட்ராஸ்ஃபர்மேஷன் நடிப்பாலும், மற்றவர்கள் காமெடியாலும் மக்களை மகிழ்வித்து விட்டார்கள். முந்தைய இரண்டு பாகங்களையும் விட இது ரொம்பவே சுமார் என்றாலும் கலெக்‌ஷனுக்கு குறைவில்லை.

டார்லிங்


தெலுங்கு ’ப்ரேம கதா சித்திரத்தின்’ தமிழ் ரீமேக் தான் டார்லிங். கொஞ்சம் சுமாரான படமாக்கல்தான் என்றாலும், பேய் பட ட்ரெண்டிற்காகவே ஹிட் அடித்தது, பலம் ஆங்காங்கே வரும் கவுன்டர் காமெடிகளும் திகிலூட்டும் ஒளிப்பதிவும். பலவீனம் தெலுங்கு ஹீரோயின் அத்தனை மெனக்கெட்டு செய்த பேய் ரோலை தமிழில் வெறும் பேய் மேக்கப்போடு முடித்துக்கொண்டது.

காக்கி சட்டை 


கமர்ஷியல் ஹிட்டடித்த காக்கி சட்டை, சிவகார்த்திகேயனுக்கு ஆக்‌ஷன் ப்ரோமோஷன் கொடுத்தது. காமெடி மட்டுமில்ல ஆக்‌ஷனும் செய்வோம் பாஸ் என சிவா களமிறங்கினாலும் ஓவர் பில்டப் கொடுத்து பல்பு வாங்காமல் அடக்கி வாசித்து ரசிக்க வைத்தார். உடல் உறுப்பு கடத்தல், வில்லனின் உலகளாவிய நெட்வொர்க், அதை முறியடிக்கும் ஹீரோ, சில செண்டிமெண்ட் சீன்கள், ‘அட’ சொல்ல வைக்கும் வியூகங்கள் என இரண்டரை மணி நேரம் எண்டர்டெய்ன் செய்ததில் காக்கி சட்டைக்கு சல்யூட் வைத்தார்கள் பார்வையாளர்கள்.

பாகுபலி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் முதல் அத்தியாயம். ஒரு ஊர்ல ஒரு ராஜா கதையை டிஜிட்டலில் செதுக்கியிருந்தார்கள். கண்களை உறுத்தாத நுணுக்கமான க்ராஃபிக்ஸ், எது நிஜம் எது டிஜிட்டல் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்ட வேலைப்பாடுகள். மகிழ்மதி அரண்மனை, தத்ரூபமான அருவிகள், போர்க்காட்சிகள் என விஷுவல் ட்ரீட் வைத்ததற்காகவே படம் கொண்டாடப்பட்டது. திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ராஜமௌலிக்கு நிச்சயமாக இது ஒரு ’மேக்னம் ஓபஸாக’ அமைந்திருக்கும். 

36 வயதினிலே 
மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர்யூ?’வின் தமிழ் வெர்ஷன். எல்லா இந்தியப் பெண்களுக்குமான பொதுவான கதைக்களம். அதில் ஜோதிகா அத்தனை பாந்தமாகப் பொருந்திப் போனார். காட்சிக்கு காட்சி ஒரு சாதாரண இல்லத்தரசியின் இயல்பைப் பிரதிபலித்த ஜோவுக்கு ஒரு ஸ்வீட் கம் பேக்.  திருமணமாகும் வரை எத்தனை திறமையான பெண்ணாக இருந்தாலும் கணவன், குழந்தை என்று ஆன பின் அத்தனையையும் மறந்து ஒரு கூட்டுக்குள் அடைந்துகொண்ட பெண் எப்படி தன்னைத் தானே மீட்டெடுக்கிறார் என்பதை அழுத்தமாக சொன்ன விதத்தில் ஆண்களுக்கும் பிடித்தமாகிப்போனாள் இந்த ராசாத்தி. 

குற்றம் கடிதல் 
இன்னார் மேல்தான் தவறு என்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாத ஒரு பிரச்னை. அதை சுற்றி இயங்கும் இயல்பான எளிமையான மனிதர்கள். அவர்களில் எல்லாருக்கும் அவரவர் நியாயம். கடைசியில் இது ஒரு தரப்பினருடைய குற்றம் அல்ல; இந்த சமூகத்தின் குற்றம் என முகத்திலறைகிறது குற்றம் கடிதல். இந்த வருடத்தின் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற இப்படத்தில், ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவ்வளவு உணர்வுகளை நம்முள் கடத்திச் சென்றன. துணிச்சலான கதைக்களமும், சிறப்பான படமாக்கலும் இதை வெற்றிப்படமாக்கின. ஆரோக்கியமான சினிமா எடுக்கத் துடிக்கும் பலருக்கு உற்சாகமூட்டியது இதன் வெற்றி.


No comments:

Post a Comment