சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Dec 2015

மிரட்டல் மெக்குல்லம்: ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா?

திரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். ஆனால் உண்மையிலேயே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர் மெக்கல்லம். லகான் படத்தில் ஒருவர் மட்டையை நெட்டுக்குத்தாகப் பிடித்து வித்தியாசமான முறையில் கிரிக்கெட் ஆடுவது போன்ற காட்சி இடம் பிடித்திருக்கும். இதனை பார்த்த பலர் இப்படியெல்லாம் படத்தில்தான் கிரிக்கெட் ஆடுவார்கள் என்றபோது, நிஜத்திலும் இப்படி கிரிக்கெட் ஆட முடியும் என அனாயாச சிக்சர்களை பறக்கவிட்டு, மாஸ் காட்டியவர்  மெக்கல்லம். அவர் வரும் பிப்ரவரியில் ஓய்வு பெற போகிறாராம். அவரை கிரிக்கெட் உலகம் கட்டாயம் மிஸ் செய்யும். ஏன்?
ந்த போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் கவுண்டி டைப் போட்டிகளுக்கு இடம் கிடையாது. முதன் முதலாக அயல்நாட்டு வீரர்களும், இந்திய வீரர்களும் இணைந்து இந்தியாவில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கிறார்கள். நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்த இந்த தொடர், உலகக்கோப்பை போட்டிகளை காட்டிலும் களை கட்டியது. ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி என்பதால் பெங்களூரு, சின்னசாமி ஸ்டேடியத்தில் வி.வி.ஐ.பிக்கள் கூட்டம் களைகட்டியது.
கொல்கத்தா அணியும் - பெங்களூரு அணியும் மோதியது. பெங்களூரு கேப்டன் டிராவிட் டாஸ் வென்றார். பீல்டிங் செய்வதாய் அறிவித்தார். கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலியுடன், பிரண்டன் மெக்குல்லம் களமிறங்கினார். முதல் ஓவரை பிரவீன் குமார் வீச, ஐந்து பந்துகளை சந்தித்த மெக்குல்லம் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. முதல் ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்து, டிராவிட்டின் முடிவு சரியானதே என ரசிகர்களுக்கு சொன்னார் பிரவீன் குமார். அடுத்த ஓவர், ஜாகீர்கான் பந்துவீச வந்தார், ஓவரின் முதல் பந்தில் ரன் இல்லை, அடுத்த நான்கு பந்துகளும் பவுண்டரி, சிக்சர் என நொறுக்கி தள்ளினார் மெக்குல்லம். ஐ.பி.எல் போட்டியில் முதல் ரன், முதல் பவுண்டரி, முதல் சிக்சர் மூன்றையும் அடித்தவர் மெக்குல்லம்தான். இரண்டாவது ஓவரோடு மெக்குல்லம் நின்றுவிடவில்லை. மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்தார். மறுமுனையில் கங்குலி, ரிக்கி பாண்டிங், ஹஸ்சி, ஹபீஸ் சொற்ப ரன்களில் அவுட் ஆகிக்கொண்டிருக்க, தனி ஆளாக நின்று 73 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளையும், 13 சிக்சர்களையும் விளாசி தள்ளி 158 ரன்களை குவித்தார். 20 ஓவரில் கொல்கத்தாவின் ஸ்கோர் 222.


பிரண்டம் மெக்குல்லத்தின் மரண விளாசலை கண்டு அத்தனை பேரும் ஆடித்தான் போயினர். மெக்குல்லத்தின் ருத்ர தாண்டவம் அந்த போட்டியில் இருந்துதான் தொடங்கியது. ஒரு தின போட்டியில் 150 ரன்கள் எடுப்பதே சாதனை என்ற காலக்கட்டத்தில், அனாயசமாக 20 ஓவரில் 158 ரன்களை குவித்திருந்தார் மெக்குல்லம். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ்க்கு எல்லாம் முன்னோடி இன்னிங்க்ஸ் விளையாடியவர் மெக்குல்லம். சேஸிங்கில் களமிறங்கிய பெங்களூருக்கு அதிக ரன்கள் எப்படி வந்தது தெரியுமா? எக்ஸ்ட்ராஸ் மூலமாகத்தான் 19 ரன்கள் வந்தது. பிரவீன் குமாரை தவிர வேறு யாரும் இரட்டைப்படை எண்ணிக்கையில் ரன்கள் குவிக்கவில்லை. பரிதாபமாக 82 ரன்களில் பெங்களூரு இன்னிங்க்ஸ் முடிவுக்கு வர, 140 ரன்கள் வித்தியாசத்தில்  மெகா வெற்றி பெற்றது கொல்கத்தா.
பிரண்டன் மெக்கல்லம் 2002-ம் ஆண்டே நியூசிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து விட்டார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக இருந்த மெக்குல்லம், சிறந்த பேட்ஸ்மேனாக மாறியது ஐ.பி.எல்-க்கு பின்னர் தான். டி-20 மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் மெக்குல்லம் சிறந்த வீரர்தான். இந்திய மண்ணில், வலுவான சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இரட்டைச் சதமடித்தார் மெக்குல்லம். கடந்த ஆண்டு இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆக்லாந்து மைதானத்தில் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் மெக்குல்லம் அடங்கவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்க்ஸில், 13 மணி நேரம் களத்தில் நின்று 559 பந்துகளை (93 ஓவர்கள்) சந்தித்தது 32 பவுண்டரிகள், நான்கு சிக்சர் விளாசி முச்சதம் எடுத்து முத்தாய்ப்பு பதித்தார். இந்தியாவுக்கு ஷேவாக் போல நியூசிலாந்துக்கு மெக்குல்லம். முச்சதம் எடுத்த ஒரே நியூசிலாந்து வீரர் அவர்தான். நான்கு முறை டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம்  அடித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணி, எப்போதுமே பீல்டிங், பவுலிங், பேட்டிங் என மூன்றிலும் கலக்கக்கூடிய அணிதான். எனினும், முக்கியப் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை போலவே எப்போதுமே தோற்றுவிடும். ஒரு கட்டத்தில் தரவரிசையில் ஏழாம் நிலைக்கும் கீழே கிடந்த நியூசிலாந்து அணிக்கு தெம்பூட்டியது மெக்குல்லம்தான். அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, தென்னாப்பிரிக்க அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் மோசமாக தோற்றாலும், அதன் பின்னர் வீறு கொண்டு எழுந்து தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை வென்று வருகிறது. நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக மாறியிருக்கிறது. இந்நிலையில்தான், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் நியூசிலாந்தில் விளையாடவுள்ளது. இந்த தொடரோடு  டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெறுகிறார் மெக்குல்லம்.
இன்னொரு விஷயம்... இந்த ஆண்டு நடந்த ஒருதின போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் யார் தெரியுமா? பிரண்டன் மெக்குல்லம் தான். உலகக் கோப்பைத் தொடரில்  இறுதி போட்டி தவிர அனைத்து போட்டியையும் நியூசிலாந்து அணி வென்றதற்கு மெக்குலத்தின் பங்கு அளப்பரியது. பீல்டிங், பவுலிங் இரண்டிலும் புரட்சி ஏற்படுத்தினார். நியூசிலாந்தின் அப்போதைய நம்பர் 1 பவுலர் டிரெண்ட் போல்ட்டை தொடர்ந்து 10 ஓவர்கள் வீச வைத்தார். பீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டார். ஒருதின போட்டியில் டெஸ்ட் போட்டிக்கனக்காக பீல்டிங்கில் ஆட்களை நிறுத்தியதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிர்ச்சி அடைந்தனர். நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராக 40 ஓவர் கூட பெரும்பாலான அணிகள் விளையாட முடியவில்லை, ஆஸ்திரேலிய அணியால் கூட 160 ரன்களை குவிக்க முடியவில்லை. அத்தனை துல்லியமாக விளையாடியது நியூசிலாந்து.

அரையிறுதியில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தென்னாப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதின. இரண்டு அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதில்லை என்பதால் கடும் போட்டி நிலவியது. தென்னாப்பிரிக்க அணி எப்போதுமே விக்கெட் விழாமல் கவனமாக 35-40 ஓவர் வரை விளையாடி பிறகு தான் வேகமாக ரன்களை சேர்க்க ஆரம்பிக்கும். அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க நார்மலாக விளையாடி 38 ஓவர்கள் வரை 216 ரன்கள் குவித்திருந்தது. அப்போது திடீரென மழை பெய்ய, 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. அடுத்த ஐந்து ஓவர்களில் மில்லர் விளாசி தள்ள, 65 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.

43 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்தால் இறுதிபோட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மெக்குல்லம், ஸ்டெயின் உள்ளிட்ட தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 26 பந்தில் எட்டு பவுண்டரி, நான்கு சிக்சர் விளாசி 59 ரன்களை குவித்து மாஸ் தொடக்கம் கொடுக்க, தட தடவென ரன்ரேட் உயர, அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றனர். உலகக்கோப்பை வரலாற்றில் யாராலும் மறக்கவே முடியாது அளவுக்கு பரபரப்பு நிறைந்த திரில் போட்டி இது. முதல் முறையாக நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார் மெக்குல்லம். ஆனால், இறுதிப் போட்டியில் டாஸ் வென்றும், முதல் ஓவரிலேயே ஸ்டார்க் பந்தை விளாச முற்பட்டு டக் அவுட் ஆனார் மெக்குல்லம். ஆஸ்திரேலியாவிடம் பெட்டி பாம்பாய் அடங்கியது நியூசிலாந்து.

மெக்குல்லம் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பீல்டர், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி சிறந்த ஜென்டில்மேன். தனது தாய்நாட்டுக்கு எதிராக எந்த வீரர் சிறப்பாக விளையாடினாலும் கை கொடுத்து பாராட்டுவது அவரது வழக்கம். மெக்குல்லம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதை விரும்பமாட்டார், அவரை யாராவது வம்பிழுத்தாலும் வாய்த்தகராறு இருக்காது, சிறு புன்னகையுடன் கடந்து விடுவார். பிரண்டன் மெக்குல்லத்துக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இந்தியாவில் உண்டு. குறிப்பாக ரசிகைகளும் அதிகம், டாட்டூ பிரியர். சென்னை அணிக்காக மெக்குல்லம் சில ஆண்டுகள் விளையாடியபோது சென்னை அவருக்கு மிகவும் பிடித்துபோய் விட்டது.   மெக்குல்லத்துக்கு இரண்டாவது தாய்வீடு சென்னை.

சி.எஸ்.கே ரசிகர்களுக்கும், மெக்குல்லத்துக்கும் இடையேயான பாசம் அதிகம். நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தாலும் தோனிக்கு கீழ் விளையாடுவதை பெருமையாக கருதுவார் பிரண்டன் மெக்குல்லம். இத்தனைக்கும் அவரது கேப்டன்சிக்கும், தோனியின் கேப்டன்சிக்கும் எக்கச்சக்க முரண்பாடு உண்டு. ஒரு கூட்டுக் கிளியாக இருந்த சி.எஸ்.கே இப்போது உடைந்து விட்டது. அடுத்த ஆண்டு ராஜ்கோட் அணிக்காக விளையாடவுள்ளார் மெக்குல்லம். ரெய்னா அல்லது மெக்குல்லம் ஆகியோரில் யாரவது ஒருவர்தான் கேப்டனாக இருப்பார்கள். நியூசிலாந்து நாட்டுக்காரர்கள் மெக்குல்லத்தின் இன்னிங்சை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால், இந்திய ரசிகர்கள் மெக்குல்லத்தை இந்திய மைதானங்களில் ஐ.பி.எல் போட்டிகளில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment