சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2015

“மக்கள் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்!”

ரலாறு காணாத கனமழை மக்களைத் துன்பக் கடலில் தள்ளியிருக்கிறது. அந்தப் பெரும் துயரத்தின் சிறுதுளி துடைக்கும் முயற்சியாக, நடிகர் ராகவா லாரன்ஸும் விகடனும் இணைந்து செயல்​படுத்தும் `அறம் செய விரும்பு' திட்டம் மூலம், மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கத் தொடங்கினோம்.  
 
ஆயிரமாயிரம் மனிதர்களும் அமைப்புகளும் ஏராளமான உதவிகளைச் செய்துவரும் நிலையில், உணவு, குடிநீர் என உடனடி உதவிகள் ஒரு பக்கம் இருக்க, தண்ணீரில் விழுந்த குடும்பங்கள் எழுந்து நிற்க உதவ விரும்பினோம். ஒரு மாத காலத்துக்காவது  அவர்களுக்குத் தேவையான முழுமையான உதவிகளைச் செய்ய முடிவு​செய்தோம். குடும்பத்துக்கு ஒரு மாதம் தேவைப்படும்  மளிகைப் பொருட்கள், 25 கிலோ பொன்னி அரிசி மூட்டை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, எண்ணெய், சர்க்கரை, உப்பு, கடுகு, சீரகம்... என அனைத்தும் வாங்கப்பட்டன.  குடும்பத்துக்கு இரண்டு போர்வைகள், இரண்டு துண்டுகள், இரண்டு பாய்கள், நான்கு எவர்சில்வர் தட்டுகள், டம்ளர்கள், சோப், பிரஷ், கொசுவத்தி காயில், டார்ச்லைட்... என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து வாங்கினோம். இவை அடங்கிய ஒரு பெட்டியின் மதிப்பு 4,500 ரூபாய். முதல் கட்டமாக 500 குடும்பங்களுக்கு மொத்தம் 22.50  லட்சம் ரூபாய் செலவில் வழங்க முடிவானது. எல்லாப் பொருட்​களையும் தனித்தனியாகப் பெட்டியில் அடைத்து, தயார் நிலையில் வைத்திருந்தோம்.
‘அறம் செய விரும்பு’ தன்னார்வலர் மீஞ்சூர் கோபி, இதுவரை பெரிய அளவில் உதவிகள் சென்றுசேராத கிராமங்கள் பற்றிச் சொன்னார்.
‘`திருவள்ளுர் மாவட்டம், காட்டூரைச் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களில் வெள்ளம் வந்தபோது தலைக்கு மேல் தண்ணீர்.  வாழ்​வாதாரங்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். வீடுகளும் குடிசைகளும் இடிந்த நிலையில் அவற்றைச் சரிசெய்து வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு மாதமாவது ஆகும். இந்தக் கால கட்டத்துக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்’' என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடப்பாக்கம், தத்தைமஞ்சி, காட்டூர் லெட்சுமிபுரம், சோமஞ்சேரி, திலப்பஞ்சேரி, அத்திமணஞ்சேரி, காட்டூர் காலனி...  ஆகிய ஏழு கிராமங்கள் தேர்வுசெய்யப்​பட்டன. இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள்.
முதலில் நாம் சென்றது சோமஞ்சேரி. விவசாயக்கூலிகள் அதிகம் வசிக்கும் ஊர்.
‘`வேலைக்குப்  போயி ஒன்றரை மாசமாச்சு. நவம்பர் மாசம் மழை ஆரம்பிச்சதுலேர்ந்து வருமானமே இல்ல. வீடாவது இருந்துச்சு, இப்போ அதுவும் போச்சு. படுக்க இடம் இல்லாம ரோட்டுலதான் பாதி ஜனம் படுத்துக்கினுருக்கோம்’' -வெறுமை​யுடன் சொல்கிறார் பாஸ்கர். ஆயிரக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கி வாத்து வளர்த்த பலருக்கும் பெரும் நஷ்டம். எல்லா வாத்துகளையும் வெள்ளம் அள்ளிச் சென்று​விட்டது.
அரிசிக்கு ஒரு லாரி, மளிகைக்கு வேறு ஒரு லாரி, பாய், போர்வை உள்ளிட்ட மற்றப் பொருட்​களுக்கு இன்னொரு லாரி என மூன்று லாரிகளில் நாம் நிவாரணப் பொருட்களுடன் சென்று இறங்கினோம்.
`‘வெள்ளத்துல அவதிப்பட்ட அந்த மக்கள் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும் சார்’' என லாரன்ஸும் கிளம்பிவந்தார்.
காத்திருந்த மக்களுக்கு வரிசையாக அணிவகுத்த வாகனங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி. தன்னார்வலர் கோபியும் உள்ளூர் இளைஞர்களை ஒருங்கிணைத்து மக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க... நிவாரணப் பொருட்களை வழங்கத் தொடங்கினார் லாரன்ஸ்.
``இப்பத்தான் உங்களுக்குக் கண்ணு தெரியுதா ஆபீசரு...’’ என ஒரு பாட்டி எகிற, ‘`ஆயா... இது கவர்மென்ட் குடுக்குறது இல்ல, விகடன் பத்திரிகையும் நடிகர் லாரன்ஸும் குடுக்குறது’' என்றதும், கூச்சமும் சிரிப்புமாக முகத்தைச் சுருக்கிச் சிரித்த ஆயா, `‘இன்னாடா அந்தம்மா படம் ஒட்டாத பொருளு குடுக்குறாங்களேனு அப்பவே டவுட் பட்டம்ப்பா’' எனக் கலகலக்க​வைத்தார். சோமஞ்​சேரியில் 209  குடும்பங்களுக்கும் பொருட்களைக் கொடுத்து முடிக்கவே மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது.
அடுத்து நாம் சென்றது அத்திமணஞ்சேரி. அங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்.
‘`நைட் இரண்டு மணிக்குண்ணா... இடுப்பு ஓசரத்துக்குத் தண்ணி வந்துடுச்சு. இன்னா பண்றதுன்னே தெர்ல. என் சம்சாரத்துக்கு எட்டு மாசம். கூடயே ரெண்டு வயசுல பாப்பா வேற. இன்னா பண்ணுவோம்... பொருள எடுப்பனா, பொஞ்சாதியைப் பாப்பனா? கொழந்த வேற வீல்வீல்னு பயத்துல கத்துது. அல்லாத்தையும் அப்படியே போட்னு பக்கத்துலக்குற ஸ்கூலாண்ட ஓட்னோம்’’ என வெள்ள அனுபவம் சொல்லிக் கலங்கடித்தார் சண்முகம். தினந்தோறும் நகரத்துக்குச் சென்று பெயின்டர் வேலை பார்க்கும் தினக்கூலி. இந்த கிராமம் முழுக்கவே தினக்கூலிகள்தான்.
தொடர்ந்து இருளர் பகுதிகளுக்குச் சென்றோம். காட்டூரை ஒட்டி உள்ள கடப்பாக்கம், நத்தைமஞ்சி, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. நிரந்தர வருமானம் இல்லாத அன்றாடக் கூலிகள். மீன்பிடிக்கவும் இறால் எடுக்கவும் கட்டடக் கூலிகளாகவும் வேலை பார்க்​கிறவர்கள். அடித்த வெள்ளத்தில் மொத்தமாக தங்களுடைய மண்குடிசை, உடைமைகளை இழந்து நிற்கின்றனர். அதுவும் நம்மை மிகவும் அதிரவைத்த இடம் கடப்பாக்கம் அபிராமடம் இருளர் குடியிருப்பு. இன்னும்கூட முழுமையாக வெள்ள நீர் வடியவில்லை. ஒருவர் நிமிர்ந்து நின்றாலே முதுகில் இடிக்கும் அளவு குடிசைகள். அவையும் தண்ணீர் தட்டி நிற்கின்றன.
இப்படிப் பல கிராமங்கள் கடந்து நாம் கடைசியாக காட்டூர் காலனியில் உதவியை முடிக்கும்போது மணி இரவு 10. காலை முதல் இரவு  வரை  நம்முடன் வலம்வந்த தன்னார்வலர்கள் கோபி, ஜீவசகாப்தன், நமக்கு உதவிய காட்டூர் பகுதி இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றோம். அப்போது நம்மை வழிமறித்த அந்த ஊர் பெரியவர் ஒருவர், அந்தப் பகுதி விவசாயத்துக்கான நீராதாரமாக இருந்த காட்டூர் ஏரியின் தற்போதைய நிலையைப் பற்றி வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.
‘‘இந்த ஏரி ஆறாயிரம் ஏக்கர். பல கிராமங்களின் பாசனம் இந்த ஏரியை நம்பித்தான் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால தூர்ந்துபோய் கருவேல மரங்களும் கோரையும் மண்டி, இப்ப அதுவும் ஒரு பெரிய வயல் மாதிரி கிடக்கு. இதை நம்பி இருந்த விவசாயிகளும் வெவ்வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
இந்த ஏரியை ஒழுங்காப்  பராமரிச்சுத் தூர்வாரி ஆழப்படுத்தியிருந்தா, ஓரளவுக்குச் சேதமும் தவிர்க்கப்பட்டிருக்கும், அதில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணியும் தேங்கியிருக்கும். இப்ப ரெண்டுமே இல்லாம நிவாரணத்துக்குக் கையேந்தி நிக்கிறோம்’’ - இது ஏதோ அந்த ஒரு பெரியவரின் ஆதங்கம் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விவசாயிகளின் மனநிலை.
வாசகர்களின் துணையுடன் நிவாரண, மறுவாழ்வுப் பணிகளைத் தொடர்கிறோம். அரசும் அறம் செய விரும்ப வேண்டும்.  


No comments:

Post a Comment