சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Dec 2015

குடி குடியைக் கெடுக்கும்!

‘நாங்களா சாராயம் குடிக்கச் சொன்னோம்?’ எனக் கேட்கிறார் தமிழ்நாட்டின் ஓர் அமைச்சர். அப்படியானால், நாங்களா உங்களை சாராயம் விற்கச் சொன்னோம்? மதுக்கடைகளைத் திறந்தே ஆக வேண்டும் என, எந்த ஊரிலாவது மக்கள் சாலை மறியல் செய்தார்களா? யாரைக் கேட்டு எங்கள் ஊர்களில் சாராயக் கடையைத் திறந்தீர்கள்? உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டம் இயற்றத்தான் சட்டமன்றம்; சரக்கு விற்க அல்ல! ‘கள்ளச் சாராயத்தைக் குடித்து மக்கள் சாகிறார்கள். அதனால்தான் அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது’ என மக்கள் மீது கரிசனம்கொள்கிறீர்கள். அதெல்லாம் கள்ளச்சாராயம் என்றால், டாஸ்மாக்கில் விற்பது என்ன சார்... சத்து டானிக்கா? தமிழ்நாடு முழுக்க பெண்டாட்டி, பிள்ளைகளை அநாதைகளாகத் தவிக்கவிட்டுச் செத்துப்போன லட்சக்கணக்கானோர், உங்கள் சத்து டானிக்கை அருந்தித்தான் உயிர் இழந்தார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? அரசு  மருத்துவமனைகளில் கல்லீரல் சிதைந்து, நரக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் மனிதர்களின் உடலை உருக்குலைப்பது உங்கள் நல்ல சாராயம்தான் என்பதை உணர்கிறீர்களா? 
இம்மி அளவேனும் இவற்றை நீங்கள் உணரவில்லை என்பதை, மக்கள் கண்கூடாக உணரும் நாட்கள் இவை. ஊரே மழைவெள்ளத்தின் கோரப்பிடியில் தத்தளித்துக்கொண்டிருந்த போதும், அதை முன்னிட்டு ஒரே ஒரு டாஸ்மாக் கடையைக்கூட அரசு மூடவில்லை. மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை; கல்லூரிகளுக்கு விடுமுறை. டாஸ்மாக்குக்கு விடுமுறை விடப்பட்டதா? அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. முழங்கால் அளவு நீர் கடைக்குள் சென்ற இடங்களில்கூட கடை திறக்கப்பட்டிருந்தது. ஒரு பேரழிவுக் காலத்தில்கூடத் திறந்துவைத்து வியாபாரம் பார்க்கவேண்டிய அளவுக்கு சாராயம் என்ன அத்தியாவசிய சேவையா? உயிர் காக்கும் மருந்தா? ஊட்டச்சத்து உணவா?  
வரலாறு காணாத இந்த மழைவெள்ளம் நினைத்துப்பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு, வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், அவர்கள் தங்கள் கையிருப்பில் உள்ள குறைந்தபட்ச பணத்தைக்கூடத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் டாஸ்மாக் கடைகளை அரசு மூடியிருக்க வேண்டும். மக்கள் மீது அக்கறைகொண்டுள்ள அரசு அப்படித்தான் செய்யும். ஆனால், இந்த அரசோ எரியும் வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்பதைப்போல, ஊர் எங்கும் அவலக்குரல் ஒலித்தபோதும் சரக்கு விற்பதில் மும்முரமாக ஈடுபட்டது. இந்த மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் உள்ள வணிகர்கள் தரப்புக்கு மட்டும் குறைந்தபட்சம் 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் சொல்கிறார். கடலூர் மாவட்டத்தின் இழப்பை நியாயமாகக் கணக்கிட்டால், அது பல்லாயிரம் கோடி ரூபாய் வரும். மாநிலம் முழுவதும் அழுகிப்போன விவசாயப் பயிர்கள், உடைந்து நொறுங்கிய வீடுகள், சிதைந்த பாலங்கள், சாலைகள், பழுதான வாகனங்கள், தனிமனிதர்கள் இழந்த வீட்டு உபயோகப் பொருட்கள்... இவை அனைத்தையும் கணக்கிட்டால், இந்தப் பேரழிவின் மதிப்பு மிக, மிக பிரமாண்டமானதாக இருக்கும். ஆனால், இந்த மழை வெள்ளத்தால் டாஸ்மாக்கின் விற்பனை, சராசரியைவிட வெறும் 10 சதவிகிதம் மட்டுமே குறைந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களின் குடிமோகம் பெருகிக்கிடக்கிறது.
மழையினால் விடுமுறை. வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால், அந்தப் பொழுதைக் குடும்பத்துடன் செலவிட்டு வீணடித்துவிடக் கூடாது என்பதற்காக, மதுக்கடைகளில் செலவிடுகின்றனர். ஏற்கெனவே வேலைக்குச் செல்லாததால் வருமானம் இல்லை. இருக்கும் கையிருப்பு தொகையில் அல்லது கடன் வாங்கியாவது குடிக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மழைக்காலத்தை, தமிழ்நாட்டுக் குடும்பங்கள் இப்படியா எதிர்கொண்டன... இப்போது மழைவெள்ள விடுமுறையை மதுக் கடையில் கழிப்பவர்கள் அப்போது என்ன செய்தார்கள்? மக்களுடைய சமூக வாழ்வின் ஒவ்வோர் அங்குலத்தையும் மது பாதித்திருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. மக்களை இந்த அளவுக்கு மதி கெட்டவர்களாக மாற்றிவைத்திருப்பது இந்த அரசாங்கம் அல்லவா?
இலங்கையில் இறுதி யுத்தம் நடந்து முடிந்திருந்த சமயத்தில் அங்கே விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா-இலங்கை ஆகிய இரு நாட்டு அரசுகளுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ஈடுபட்டிருந்த எம்.எஸ்.சுவாமிநாதன் அப்போது சொன்னார், ‘ஒவ்வொரு பேரழிவிலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு மறைந்திருக்கிறது.’ ஆம், அவர்கள் பேரழிவை வளர்ச்சிக்கான ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். பேரழிவை ஓர் அவலமாகப் பார்ப்பதும், பாதிக்கப்படும் மக்கள் மீது கரிசனம் கொள்வதுமான மனித இயல்பை பின்னுக்குத்தள்ளி அழிவையே ஆதாயமாகப் பார்க்கும் இந்தப் பார்வை எத்தனை மோசமானது? தமிழ்நாடு அரசும் இப்போது இதைத்தான் செய்கிறது. ஊரே மழை வெள்ளம் என்னும் பேரழிவில் சிக்கித்தவிக்கும்போது, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஊற்றிக்கொடுத்து கல்லாகட்டப் பார்க்கிறார்கள்.
மக்கள், தங்கள் துயரங்களை மறக்கவே குடிப்பதாகச் சொல்கிறார்கள். அந்தத் துன்பங்கள் தங்களுக்கு ஏற்பட யார் காரணம் என்பதை அவர்கள் சிந்திப்பது இல்லை. ‘வேறு யாரோ எப்படி என் துன்பத்துக்குக் காரணமாக இருக்க முடியும்? என் பிரச்னைக்கு நானே காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என நினைக்கிறார்கள். இது மக்களின் பெருந்தன்மை அல்லது அறியாமை. மக்கள் படும் பெரும்பகுதித் துன்பங்களுக்குக் காரணம் ஆட்சியாளர்களின் ஊழல், கொள்ளை லாபம் மற்றும் நிர்வாகத் திறமையின்மைதான். இந்த உண்மையை மக்கள் உணர்ந்துவிடக் கூடாது; அரசுக்கு எதிராகப் போராடக் கிளம்பிவிடக் கூடாது என்பது அரசின் எண்ணம். அதனால்தான் அரசே மதுக் கடைகளைத் திறந்து மக்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது.
உடனே, ‘பழங்காலத் தமிழன் குடிக்கலையா... ஔவையாரே கள் குடிச்சிருக்காங்க’ என இதை தமிழ்ப் பெருமையுடன் முடிச்சுப்போட்டுப் பேசுவது பிரச்னையைத் திசைதிருப்பும் செயல். ஔவையாரைக் கை காட்டி குடியை நியாயப்படுத்துபவர்கள், அன்றாடம் குடிகாரக் கணவனின் துன்பத்தை எதிர்கொள்ளும் பெண்களின் கேள்விகளுக்குப் பதில்சொல்ல வேண்டும். வாங்கும் சம்பளத்தில் முக்கால்வாசிக்குக் குடித்தால், எந்தக் காசில் அரிசி, பருப்பு வாங்குவது... மனைவி சம்பாதிப்பதையும் பிடுங்கிக் குடித்தால் பிள்ளைக்கு எந்தக் காசில் பால் வாங்குவது? பெரும்பகுதி குடிகாரக் கணவர்கள், மனைவியைச் சந்தேகிக்கிறார்கள். தங்கள் பலவீனத்தை மறைக்க எதிராளியைக் குற்றவாளியாக்கும் இந்த மனநோய், குடும்பத்தை நரகம் ஆக்குகிறது. அவர்களிடம் சென்று ‘தமிழ்க் கலாசாரத்தில் குடிப்பது ஓர் அங்கம்’ எனப் பேசிவிட்டு, உங்கள் அங்கத்துக்குப் பங்கம் வராமல் திரும்பிவிட முடியுமா?
குடி ஒரு கலாசாரமாக, பண்பாடாக நிலவ வேண்டுமானால், சமூகநிலை மேன்மையானதாக இருக்க வேண்டும். நமது இதரப் பண்பாடுகள் அதற்கு இணையானதாக இருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். இங்கு ஆண் - பெண் உறவில் ஜனநாயகம் இருக்கிறதா? பெண்ணின் குடும்ப வேலைகளை குறைந்தபட்சம் உழைப்பாகவாவது ஆண்கள் அங்கீகரிக்கிறார்களா? திருமண உறவு என்பது, இருவர் சேர்ந்து வாழ்வைப் பங்கிட்டுக் கொள்வதற்கான ஏற்பாடு. அதில் ஓர் இணக்கம் இல்லாமல்போனால், மனம் ஒப்பி வாழ இயலாமல்போனால் பிரிந்து செல்லும் உத்தரவாதம் இருக்க வேண்டும். ஆனால், நம் ஊரில் திருமண உறவுகள் ஒரு வழிப் பாதையாக இருக்கின்றன. எவ்வளவு கொடுமைக்காரக் கணவனாக இருப்பினும் ‘கண்கண்ட தெய்வமாக’ ஆராதித்து வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. இந்தத் திருமணப் பண்பாடு சரியானதுதானா?
 ‘இவற்றுக்கும் டாஸ்மாக்கின் கேடுகளுக்கும் என்ன சம்பந்தம்?’ எனத் தோன்றலாம். ‘மது குடிப்பது ஒரு பண்பாடு’ என்பதைப் பற்றி பேசுகிறோம். அந்தப் பண்பாடு இருக்க வேண்டும் என்றால், சமூகத்தின் இதரப் பண்பாடுகள் அந்த அளவுக்கு மேம்பட்டிருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல்போவது தனிப்பட்ட மனிதர்களின் குற்றம் இல்லை. நமது சமூகத்தில் ஏற்கெனவே நிலவும் பிற்போக்குத்தனங்களைக் கைவிட்டு, புதிய நாகரிகங்களைச் சூடிக்கொள்ளும் வளர்ச்சிப்போக்கு என்பது இப்படி மெதுவாகத்தான் நடைபெறும். இந்தியா போன்ற பிரதேச, சாதிய, பால் வேறுபாடுகள் நிறைந்த ஒரு நாட்டில் எல்லாவிதப் பண்பாடுகளும் முன்னுக்குப் பின்னாகத்தான் இருக்கும்; மாற்றமும் சீரற்றுதான் நிகழும். இவை எல்லாம் ஒரு சமமான நிலைக்கு வரும்போதுதான் குடியை ஒரு பண்பாடாகக் கருதும் மனநிலையை அங்கீகரிக்க முடியும். மற்ற பண்பாடுகள் முன்னேறாமல் இருக்கும்போது, குடியை மட்டும் முன்னே தூக்கி நிறுத்துவது ஆபத்து. அது, மற்ற பிற்போக்குத்தனங்களை அதிகரிக்கச் செய்யும்; புதிய இன்னல்களைக் கொண்டுவரும்.
] குடி, பண்பாடு என்ற வரம்பில் இதை அணுகும்போது, பா.ஜ.க மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பாத்திரத்தை மறந்துவிட முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு பப் ஒன்றில் குடித்துக்கொண்டிருந்த ஆண்களையும் பெண்களையும், ீராம் சேனா என்ற இந்து அமைப்பினர் அடித்து விரட்டிய வீடியோ காட்சியை இந்தியாவே பார்த்தது. இப்படி பார்களில் புகுந்து குடிப்பவர்களை அடிப்பது மும்பையிலும்கூட நடந்திருக்கிறது. பொதுவில் குடிப்பதை, குறிப்பாக பெண்கள் குடிப்பதை இந்து அமைப்புகள் அடியோடு எதிர்க்கின்றன. ஆனால், சிவசேனா ஆதரவுடன் பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெறும் மஹாராஷ்டிராவில் குடியும் கொண்டாட்டமுமான இரவு வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. நள்ளிரவு வரையிலும் மதுபான விடுதிகள் திறந்திருக்கும்; ஆண்கள் மற்றும் பெண்களின் ஆட்டம் உச்சத்தைத் தொடும். ‘நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையின் நைட் லைஃப்  துடிப்பானதாக (Vibrant mumbai) இருக்க வேண்டும்’ எனச் சொல்லி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பது சிவசேனாவின் இளைஞர் பிரிவுதான். இது எந்த ஊர் நியாயம்? பெங்களூருவில் குடிப்பவர்களை இழுத்துப்போட்டு அடிப்பது, மும்பையில் ‘வாருங்கள், குடித்துக் கொண்டாடுவோம்'  என அழைப்பு விடுப்பது... இரண்டும் நேர் முரணான இரு துருவங்கள் இல்லையா?


No comments:

Post a Comment